நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கட்டாயமாகும் முகக்கவசம் / Mask!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கட்டாயமாகும் முகக்கவசம் / Mask!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், “கொரோனா” பரவலிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக முகக்கவசங்களை அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்படுவதாக, ஒஸ்லோ நகரசபைத்தலைவர் “Raymond Johansen” இன்று தெரிவித்துள்ளார்.

நாடளாவிய அளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் தலைநகர் ஒஸ்லோவில், “கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முற்காப்பு விடயங்கள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்த நகரசபைத்தலைவர், பரிந்துரைக்கப்பட்ட, ஆகக்குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை பேண முடியாத சூழ்நிலைகளின்போது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும், குறிப்பாக பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர், போக்குவரத்து நெரிசல்களின்போது இதுகுறித்து அவதானமாக இருக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒஸ்லோவில் பேரூந்து சாரதிகள் வேதன உயர்வு கேட்டு தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பேரூந்துகள் எதுவும் சேவையில் இல்லாததால், நிலக்கீழ் தொடரூந்துகள் (T – Bane), மின் இழுவை வண்டிகள் (Trikk) போன்றவற்றில் சனநெரிசல் அதிகமாகவுள்ள இன்றைய சிக்கலான நிலையில், தேவையான நேரத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் காவல்துறையால் அவதானிக்கப்படும் நிலையில், அவர்கள் தண்டப்பணம் செலுத்தவேண்டி வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

முகக்கவசங்களின் விலைகள் உயர்வாக இருப்பதால், உடல்நிலை மந்தமாக இருக்கும், எளிதில் “கொரோனா” தொற்றுதலுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு நகரசபை இலவசமாக முகக்கவசங்களை வழங்கவேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதெனினும், இதவிடயம் பற்றி தாம் இன்னமும் பரிசீலிக்கவில்லையெனவும் நகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

29.09.2020 நண்பகல் 12:00 மணியிலிருந்து மேற்படி கட்டாய முகக்கவசம் அமுலுக்கு வருவதாக ஒஸ்லோ நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments