பச்லெட்டின் அறிக்கைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு!

You are currently viewing பச்லெட்டின் அறிக்கைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாகும். 

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதானது, அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி எதிர்வருங்காலங்களில் உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னனும் அதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வரவேற்கின்றோம். அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 61 ஆவது விடயத்தில்  மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறு நாம் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். 

இருப்பினும் அவ்வாறான தடைகளை விதிப்பது அப்பாவி பொதுமக்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், இலங்கையின்மீது பொருளாதாரத்தடைகளை விதிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காண்பித்துவருகின்றன.

எனினும் தற்போது உக்ரேன் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்காக ரஷ்யாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் ரஷ்யாவிற்குச் சொந்தமான முயற்சியாண்மைகளுக்கு எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஒட்டுமொத்த உலகமும் உதவமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், தற்போது ரஷ்யப்படையெடுப்பின் விளைவாக உக்ரேனியர்கள் முகங்கொடுத்திருக்கும் துன்பத்தை நாம் உணர்கின்றோம்.

சர்வதேச நாடுகள் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கின்ற தடைகளில் குறைந்தபட்சம் பொருளாதாரத்தடையையேனும் சரியான தருணத்தில் இலங்கைக்கு எதிராக விதித்து முன்னுதாரணத்தை வழங்கியிருந்தால், தற்போது உலகளாவிய ரீதியில் நடைபெறும் போக்குற்றங்களையும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்களையும் ஓரளவிற்கேனும் குறைத்திருக்கமுடியும். எனவே தற்போதேனும் அனைத்துவழிகளிலும் இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை தொடர்பான விவாதத்தில் ஐ.நாவிற்கான இந்திய நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா பாண்டேவினால் வெளியிடப்பட்ட கருத்து குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கெனன், இலங்கை தொடர்பில் இந்தியா இத்தகைய அப்பட்டமான விமர்சன அறிக்கையை முன்வைப்பது மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கூறியதாவது:

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அவ்வறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற நிலையில், வெறுமனே எழுத்துமூலமாக மாத்திரமன்றி, கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்கக்கூடியவாறான செயல்வடிவிலான நடவடிக்கைகள் அவசியமாகும். 

அதேவேளை சாதாரண மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்நாட்டில் நியாயத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாத பட்சத்திலேயே சர்வதேசத்தை நாடுவர். எனவே எமது நாட்டு மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசத்தை நாடியிருப்பதென்பது அரசாங்கத்திற்கு அவமானகரமான விடயமாகும்.  அவ்வாறிருந்தும்கூட, உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதென்பது நீதியை வலியுறுத்துகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் குரலை அடக்குவதற்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்தார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments