பணத்துக்காக பரீட்சை முடிவுகளை மாற்றும் போலந்து பல்கலைக்கழகங்கள்!

பணத்துக்காக பரீட்சை முடிவுகளை மாற்றும் போலந்து பல்கலைக்கழகங்கள்!

போலந்து நாட்டின் பிரபல பல்கலைக்கழகங்கள், பணத்துக்காக மாணவர்களின் பரீட்சை முடிவுகளை மாற்றியமைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவக்கல்விக்காக போலந்து பல்கலைக்கழகங்களை அதிகளவிலான நோர்வே மாணவர்கள் நாடுவதால், அப்பல்கலைக்கழகங்கள் பெருமளவிலான பொருளாதாரத்தை சம்பாதித்து வந்துள்ளன.

இந்நிலையில், தற்போது இணையவழி நடைபெறும் பரீட்சைகளில் அதிகளவிலான மாணவர்கள் சித்தியடைந்து தமது கல்வியை நிறைவு செய்வதால், பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்கக்கூடிய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதாகவும், அதனை தடுப்பதற்காக, பரீட்சைகளில் சித்தியடையும் அளவிற்கு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் பெறுபேறுகளை வேண்டுமென்றே குறைத்து விடுவதால், குறிப்பிட்ட மாணவர்கள் மேலும் ஒரு வருடத்துக்கு கல்வியை தொடரவேண்டிய நிலை ஏற்படுவதால், அதனால் மேலதிக கட்டணத்தை செலுத்துவதற்கு அம்மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், இதன்மூலம் பல்கலைக்கழகங்கள் மேலதிக பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

போலந்தின் “Gdansk” நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையவழி கற்பித்தல் ஒன்று நிறைவடைந்ததன் பின்னர், தமது ஒலிவாங்கிகளை நிறுத்த மறந்த விரிவுரையாளர்கள் இருவர், அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து செய்வதால், பல்கலைக்கழகத்துக்கான பொருளாதார வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படுவதாகவும், இதனை தடுப்பதற்காக பரீட்சை வினாக்களை மிகக்கடினமானவையாக மாற்ற வேண்டியிருப்பதாக தங்களுக்குள் பேசிக்கொண்டுள்ளதோடு, பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களின் பெறுபேறுகளில் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் மாற்றங்கள் செய்யப்பட்டு, அம்மாணவர்கள் சித்தியடைவது தடுக்கப்பட்டது என்பது பற்றியும் தங்களுக்குள் பேசிக்கொண்டதை, குறித்த இணையவழி கற்பித்தலின் பின் தொடர்ந்தும் இணைப்பிலேயே இருந்த பல மாணவர்கள் செவிமடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டதை அடுத்து, மேற்படி மோசடிகளில் ஈடுபட்டதாக அறியப்படும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களை தன்னுடனான சந்திப்புக்கு போலந்தின் கல்வியமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த “Gdansk” பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஒருவரும் மேற்படி மோசடிகளை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள