பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கிய “பெலாரஸ்”!

You are currently viewing பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கிய “பெலாரஸ்”!

கிழக்கு ஐரோப்பிய நாடான “பெலாரஸ்”, அயர்லாந்தின் விமானசேவை நிறுவனமான “Ryan Air” நிறுவனத்தின் பயணிகள் விமானமொன்றை வலுக்கட்டாயமாக தனது தலைநகரில் தரையிறக்கியுள்ளதுடன், அதில் பயணம் செய்த, அந்நாட்டின் ஆளும் தரப்பை விமர்சித்து வந்த ஊடகவியலாளரொருவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதன் பின் தனித்தனி நாடுகளாக தம்மை அறிவித்துக்கொண்ட நாடுகளில் “பெலாரஸ்” நாடும் அடக்கம். முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த இன்னொரு நாடான “லத்வியா” விலிருந்து, “கிரீஸ்” நாட்டின் “ஏதேன்ஸ்” நகருக்கு 170 பயணிகளோடு பறந்து கொண்டிருந்த குறித்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக “பெலாரஸ்” நாட்டின் ஆளும் தரப்புக்கு நெருக்கமான தரப்பிலிருந்து அறிவித்தல் கொடுக்கப்பட்டதோடு, மிக அவசரமாக “பெலாரஸ்” நாட்டின் தலைநகரான “மின்ஸ்க்” இல் தரையிறங்குமாறு அவசர அறிவித்தாலும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பயணிகள் விமானத்தை திசைதிருப்பி, “மின்ஸ்க்” நகரில் தரையிறக்குவதில் “பெலாரஸ்” நாட்டின் போர்விமானமும், உலங்கு வானூர்திகளும் ஈடுபட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

“மின்ஸ்க்” நகரில் தரையிறங்கிய விமானத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் விமானத்திலிருந்து எவ்விதமான சந்தேகத்துக்குரிய பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதோடு, அவ்விமானத்தில் பயணம் செய்த “பெலாரஸ்” நாட்டை சேர்ந்த ஊடகவியலாளரான “Raman Pratasevitsj” அதிரடியாக விமான நிலையத்தில் வைத்து “பெலாரஸ்” அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

“Raman Pratasevitsj” என்ற குறித்த ஊடகவியலாளர், “பெலாரஸ்” அரசத்தலைவரின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வந்துள்ளதோடு, கடந்த வருடம் நடைபெற்ற, அதிபருக்கெதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது. குறித்த இந்த மக்கள் ஆர்ப்பாட்டம், “பெலாரஸ்” இராணுவத்தால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகவியலாளரான “Raman Pratasevitsj”, “பெலாரஸ்” மக்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டினாரென “பெலாரஸ்” ஆளும் தரப்பு அவர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பரப்பில் தொடர்ச்சியாக “பெலாரஸ்” அதிபருக்கெதிரான கருத்துக்களை முன்வைத்து வந்த ஊடகவியலாளர் “Raman Pratasevitsj”, “லத்வியா” நாட்டிலிருந்து “கிரீஸ்” நாட்டின் “ஏதென்ஸ்” நகருக்கு பறந்துகொண்டிருந்த குறித்த “Ryan Air” விமானத்தில் பயணியாக இருந்துள்ள நிலையில் விமானம் வலுக்கட்டாயமாக “பெலாரஸ்” நாட்டின் தலைநகர் “மின்ஸ்க்” இல் தரையிறக்கப்பட்டு ஊடகவியலாளர் “Raman Pratasevitsj” அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது, ஐரோப்பிய நாடுகளிடையே கடும் அதிர்வலைகளையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளரை முறைதவறி கைது செய்யும் கபட நோக்கோடு, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தவறான தகவலை வழங்கியதோடு, போர்விமானத்தை கொண்டு, பயணிகள் விமானத்தை திசைதிருப்பி வலுக்கட்டாயமாக “மின்ஸ்க்” நகரில் இறக்கியமை அனுமதிக்கமுடியாத செயலென ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குறித்த ஊடகவியலாளர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டுள்ளன.

நோர்வே, போலந்து, லத்வியா, ஜேர்மனி, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக்குழுவின் அதிபரும் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதோடு, ஊடகவியலாளரின் உடனடியான விடுதலையையும் கோரியுள்ளனர்.

“Ryan Air” விமானசேவை இதுவிடயம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவசரமாக விமானம் “பெலாரஸ்” இல் தரையிறக்கப்பட்டமையானது தமது கட்டுப்பாட்டுக்கும் அப்பால் நடைபெற்ற விடயமென்றும், மேற்படி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விடயம் குறித்து ஐரோப்பிய பாதுகாப்பு பிரிவுகளுக்கு உடனடியாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments