பார்த்தீபன் பசி தீரவில்லை!

பார்த்தீபன் பசி தீரவில்லை!

இரவிரவாய் கையிருப்பை
மட்டும் எடுத்துக்கொண்டு,
பாசத்தில் வளர்த்த
ஆடுமாடை அவிழ்த்துவிட்டு

பிள்ளைகளை அள்ளி
நெஞ்சறைக்குள் ஒளித்துக்கொண்டு,
குருதியில் குழைத்து கட்டிய
குடிசையின் கதவை
தூக்கி நட்டுவிட்டு

கரையை தேடி நடக்கையில்
கண்கலங்குது..
எங்கேயோ இருந்து வளர்த்த
நாய் வழியனுப்ப ஓடிவருவதனை கண்டு!

படகேறி நாம் திரும்பி பார்க்க
வெடிகுண்டு வெளிச்சத்தில்
ஊர் மட்டும் அனாதையாய்
நின்றது அன்று

அன்றும் பசியோடுதான்…..

இந்திக்கே அகிம்சை
உயர்தர வகுப்பெடுத்து,
நோயற்ற உடலை பன்னிருநாள்
நோன்பில் இட்டு

போரில் புனித
பக்கத்தை திறந்துவைத்து,
தீபன் கொள்கைபசி விழித்திருக்க
சுற்றும் திறந்தவெளி சிறைகாடு!

மனநோய்கள் பல சொல்கிறது
நோயில் இவன் இறந்தானென்று,
காட்டி கொடுத்து
எஞ்சிய இருப்பினை தத்துக்கொடுத்து

உரிமை என்று உடமை கண்டு,
அவகாசம் அவகாசம் என்ற
ஆசனங்களை நேரில் பார்த்தால்
அவை நேற்றே துருப்பிடித்து

நேற்றும் பசியோடுதான்……

குறித்த நாள் அன்று
உணர்வு பொங்குது,
நாட்கள் நடக்க என்ன விந்தை
நம்மவருக்கு அந்த
சிந்தையே மங்குது..

உலகம் முற்றும் நம் ஊர் பரவி
இவன் ஒருவன் பசி
இன்னும் தீராதுள்ளது!
அரசியலுக்காய் இவன் பசியை
பலர் ருசிபார்த்து,
இன்று வேலை கிடைத்தால்
இங்கே எவ்வம் நீங்குமென்று,
பெற வேண்டியதையும்
கோட்டைவிட்டு..

வகைவகையாய் சமைத்து
வழிப்போக்கனுகு
கொடுப்பதேன்?
நம்மவரை அடிமை
தெருவில் நிறுத்திவிட்டு

வெறும் மேடை
பேச்சை சிலாகித்து,
அன்மையில் வென்ற
கொள்கையினருக்கும் தூரம் நின்று..
மாய திசைதேடி
நாம் தனித்தனியே ஓடுவது,
ஒற்றுமை இன்றி சறுக்குமரம்
ஏறுவதுபோல் அல்லவா உள்ளது

இந்த நிலை தொடர்ந்தால்
தீபனின் பசி எப்போது தீருமது

பார்த்தீபன் இன்னும் பசியோடுதான்……


சஜிதரன்

பகிர்ந்துகொள்ள