பாவனையாளர்களின் உரிமைகளை இறுக்கும் வர்த்தக நிறுவனங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

பாவனையாளர்களின் உரிமைகளை இறுக்கும் வர்த்தக நிறுவனங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயில் பாவனையாளர்களின் சலுகைகளை வர்த்தக நிறுவனங்கள் குறைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட வீட்டுப்பாவனைப்பொருட்களை விற்பனை செய்யும் “Elkjøp”, “Power” மற்றும் இணைய வர்த்தகநிறுவனமான “Komplett” ஆகிய பெரும் நிறுவனங்கள், தம்மிடம் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை 60 நாட்களில் காரணமேதுமில்லாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு, பணத்தினையும் முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தன. இதனாலேயே இந்நிறுவனங்கள் புகழ் பெற்றும் விளங்கின.

எனினும், தற்போது “கொரோனா” வைரசின் பரவல் காரணமாக, விற்பனை செய்யப்பட்ட பொருட்களை திரும்பப்பெறும் வசதியை நிறுத்துவதாகவும், விற்கப்பட்ட பொருட்களை பாவனையாளர்கள் பாவனைக்கு எடுத்துக்கொண்டுவிட்டு, திரும்பவும் அவற்றை நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்போது, பாவனையாளர்களிடமிருந்தும் “கொரோனா” வைரஸ் குறித்த பொருட்களூடாக மேற்படி வர்த்தக நிறுவனங்களுக்கும் பரவும் என்ற அச்சம் காரணமாகவே தாம் இம்முடிவுக்கு வந்துள்ளதாக மேற்படி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நுகர்வோர் பாதுகாப்புச்சட்ட அடிப்படை விதிகளின் பிரகாரம், வாங்கிய பொருளை இரு வாரங்களுக்குள் திருப்பியளித்துவிட்டு, அதற்கான முழுப்பணத்தினையும் திரும்ப பெற்றுக்கொள்ளும் சட்டத்தை மேற்படி நிறுவனங்கள் மீற முடியாதென, நோர்வே நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான “Forbrulerrådet” தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள