பிரான்சில் ஒருலட்சம் வாடிக்கையாளர்களின் இணையம்,தொலைபேசிச் சேவைகள் துண்டிப்பு!

You are currently viewing பிரான்சில் ஒருலட்சம் வாடிக்கையாளர்களின் இணையம்,தொலைபேசிச்   சேவைகள் துண்டிப்பு!

கேபிள் இணைப்புகளை விசமிகள் சேதமாக்கியதை அடுத்து சுமார் ஒருலட்சம் வாடிக்கையாளர்களின் இணையம் மற்றும் கைத்தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கப் பட்டிருப்பதாக ஒரேஞ் (Orange) தொலைபேசிச் சேவை நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பாரிஸ் நகரின் ஒருபகுதியிலும் வல்-து-மார்ன்(Val-de-Marne) பிரதேசத்திலும் செவ்வாய் காலை முதல் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் தடைப்பட்டுள்ளது.

தற்போதைய உள்ளிருப்பு நிலைமையில் வீட்டிலிருந்து பணிபுரிவோர் உட்படப் பலரும் இணைய சேவை துண்டிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்றி-சூ-சீன்( Ivry-sur-Seine), வித்றி-சூ-சீன் (Vitry-sur-Seine) ஆகிய பகுதிகளிலேயே ‘ஒரேஞ்’ தொலைத்தொடர்பு கேபிள்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன என்று ‘பரிஷியன்’ செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.

கேபிள்களை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் ஏனையோருக்கு வியாழக்கிழமை பிற்பகலிலும் சேவைகள் மீள வழங்கப்படும் எனவும் ஒரேஞ் நிறுவனம் அறிவித்துள்ளது.

( குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள