பிரான்ஸ் அரசால் கொரோனா வைரசிற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து!!

You are currently viewing பிரான்ஸ் அரசால் கொரோனா வைரசிற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து!!

பிரான்ஸ் அரசால் கொரோனா வைரசிற்கு அங்கீகரிக்கப்பட்டது குளோரோக்கின்!!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட நோயளிகளிற்கான சிகிச்சைக்கான மருந்துகள் பெரும் விவாதத்திலும், சோதனையிலும் இருந்தன. தற்போது நோயாளிகளிற்கு குளோரோக்கின் (chloroquine) என்படும் மருந்தை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுகாதாரச் சட்டமான Article L. 5121-8 du code de la santé publique இன் மூலம் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய அரசவர்த்தமானியில் இது வெளியிடப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் அரசால் கொரோனா வைரசிற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து!! 1
(மருத்துவர் Didier Raoult)

குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்த உகந்ததா என்பது குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்கள் கடந்த பல நாட்களாகத் தொடர்ந்து வந்தன.

பெரும் மருத்துவ வாதப்பிரதிவாதங்களின் நடுவே இந்த விவகாரத்தில் பிரெஞ்சு மக்களின் முழுக் கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர் மருத்துவப் பேராசிரியர் Didier Raoult. நாட்டின் மேற்கே Marseille நகரில் உள்ள பல்கலைக்கழக போதனா மருத்துவமனையின் பணிப்பாளரான இவர் உலகப் புகழ் பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்.

இம் மாத ஆரம்பத்தில் இவர் தன்னிச்சையாக சில நோயாளிகளில் பரிசோதனைகளை நடத்தி குளோரோகுயின் சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றைக் குறைக்க முடியும் என்பதை முதன்முதலாக கண்டுபிடித்து நிரூபித்தார்.

நாடு பெரும் அவலத்தில் சிக்கியிருக்கும் சமயத்தில் வெளியான அவரது பரிசோதனை முடிவு பரபரப்பையும் பெரும் நம்பிக்கையையும் உருவாக்கியது.

Marseille நகர மக்கள் நோய்ப் பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சை பெறவும் அவரிடம் முண்டியடித்துக் கொண்டு ஓடியபோது முழு நாடுமே அவரைத் திரும்பிப்பார்த்தது.

அவரது இந்தச் சிகிச்சை முறையை அங்கீகரிக்க வேண்டும் என்று அரசு மீது அழுத்தங்கள் அதிகரித்தன. ஆனால் சுமார் 70 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மலேரியா தடுப்பு மருந்தான குளோரோகுயினை அதன் பக்கவிளைவுகளைக் கருத்தில் கொண்டு கொரோனாவுக்கான சிகிச்சைக்கு அனுமதிக்க சுகாதார அமைச்சு மறுத்து வந்தது.இந்த மருந்துப் பாவனை குறித்து ஜரோப்பிய மட்டத்தில் விரிவான பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே இதுவிடயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று சில மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு சிபாரிசு செய்தனர்.

முறைப்படியான மருந்து ஒன்று கண்டறியப்படாத நிலையில் இந்த வைரஸ் பரம்பலால் நாளாந்தம் செத்து மடிவோரின் எண்ணிக்கையை குளோரோகுயின் மூலம் ஓரளவுக்கேனும் குறைக்க முடியும் என்று மருத்துவர் Raoult தொடர்ந்து வாதாடிவந்தார்.

தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த மருந்தை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கி இருப்பது அவரது போராட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று ஊடகங்கள் கூறுகின்றன.

(நன்றி: குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள