பிரேசிலில், இடுகாடுகளில் இடமில்லை ; தினமும் 1000 பேர்வரை உயிரிழப்பு!

பிரேசிலில், இடுகாடுகளில் இடமில்லை ; தினமும் 1000 பேர்வரை உயிரிழப்பு!

கொரோனாவால் அதிகமானோர் உயிரிழந்த பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளதற்கு முக்கியக் காரணம் அரசியல்தான் என கூறப்படுகின்றது.

பிரேசிலில் கொரோனா பரவத் தொடங்கியபோதே அதனை சாதாரண காய்ச்சல் போலத்தான் என அசட்டையாக அணுகினார். வலதுசாரி அதிபரான பொல்சொனாரோ (Jair Bolsonaro). இன்று எட்டரை இலட்சம் பேருக்கு மேலானோருக்கு கொரோனா உறுதியான பின்பும் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

ஏப்ரலில் மக்களின் உயிரிழப்பு பற்றிய கேள்விக்கு, நான் ஒன்றும் சவக்குழி வெட்டுபவனல்ல என்ற அவர்தான், சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டபோது அதனால் என்ன என பதில் கேள்வி கேட்டவர். கொரோனா அச்சப்படும் அளவிற்கு பெரிய நோயல்ல என்பதை நிரூபிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பிரேசிலை மேலும், மேலும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

சில மாகாண ஆளுநர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க உத்தரவிட்டபோது அதனை கடுமையாக எதிர்த்தார் அதிபர் பொல்சொனாரோ. அவரது ஆதரவாளர்கள் பெருங் கூட்டமாய் ஊர்வலம் சென்று தனிமனித இடைவெளி தேவையில்லை என மக்களிடம் எதிர்மறை எண்ணங்களை விதைத்தனர்.

கொரோனா பரவல் கிடுகிடுவென உயர்ந்தபோது இம்மாத தொடக்கத்தில் அது பற்றிய புள்ளிவிவரங்கள் அரசின் இணையதளத்தில் இருந்து திடீரென ஒருநாள் காணாமல்போனது. புதிதாக எத்தனை பேருக்கு தினமும் தொற்று என்ற விவரமும் வெளியாகவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தக் கூடாது என கண்டித்த பின் மீண்டும் விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அரசாங்கம் இப்படி கண்ணாமூச்சி ஆடுவதால் உண்மையில் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது கூறப்படும் அளவை விட அதிகமாக இருக்கும் என அஞ்சுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். கொரோனா பரவ ஆரம்பித்த பின் மருத்துவப் பின்னணி கொண்ட இரு சுகாதாரத்துறை அமைச்சர்கள் அதிபருடனான அதிருப்தியால் பதவி விலகிவிட்டனர். 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்த நிலையில், இனி தினமும் ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதைப் பற்றி கவலையின்றி பல நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கு மக்களைக் கொண்டுவர அதிபர் பொல்சொனாரோவும், அவரது ஆதரவு அதிகார வர்க்கத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏழை மக்களுக்கு மாதாந்தம் கொரோனா கால நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் அதிபருக்கு எதிர்ப்பில்லை. ஆனாலும் பல இடங்களில் இடுகாடுகளில் இடம்போதாமல் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்தவர்களை தோண்டி எடுத்து அப்புறப்படுத்திவிட்டு கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவலநிலையில் பிரேசில் தற்போது இருக்கின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments