இந்தியாவின் பீகார் மாநிலத்தில், இந்துப் பண்டிகையில் பங்கேற்பதற்காகக் கங்கை நதியில் பயணித்த படகு கவிழ்ந்ததில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகில் அதன் கொள்ளளவைவிட அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாகவும், படகு சிறியதாகவும் போதிய பராமரிப்பின்றியும் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து, இரவு நேர இருளையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கைப்பேசிகள் மற்றும் மின்விளக்குகளின் உதவியுடன் ஆற்றில் சிக்கியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதிலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைஷாலி மாவட்ட ஆட்சியரும் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் அறிவித்துள்ளார்.
அதிகப்படியான பயணிகளை ஏற்றுதல், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் படகு விபத்துகள் இடம்பெறுவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. பீகாரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், நீர்வழிப் போக்குவரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






