புதுக்குடியிருப்பில் 194 பேர் தனிமைப்படுத்தல்!

புதுக்குடியிருப்பில் 194 பேர் தனிமைப்படுத்தல்!

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாகநடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் (26) ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. யாழ் போதனா வைத்தியசாலையில் 416 பேரின் பி சிஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த மரக்கறி மொத்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு உடையார்கட்டு விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பி சிஆர் மாதிரிகள் பெறப்பட்டது.

எழுமாறாக பி சி ஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார்.

இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ள நிலையில் குறித்த நபர் வீட்டுக்குள் முடக்கப்பட்டு கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.

பகிர்ந்துகொள்ள