போலித்தேசிய ஆய்வாளரும் புலி எதிர்ப்பு வாதமும்!

போலித்தேசிய ஆய்வாளரும் புலி எதிர்ப்பு வாதமும்!

2009 இற்குப்பின் ஈழத்தமிழரது போராட்டத்தை வைத்து, அதில் அரசியல் கொம்புசீவிப் பிழைப்பவர்களின் இராசதந்திர உச்சஸ்தாயி கதறல் வெளியீடுகள் அண்மைக்காலமாக வலைத்தளங்களில் அதிகரித்திருக்கின்றன. இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்கள் என்பதுதான் அதில் உள்ள “Dramatic பம்பல்”.

௧ருத்துருவாக்கிகளின் விஞ்ஞாபனங்களினூடாக, அவன் சார்ந்த இனமோ/குழுமமோ திரட்சி கொள்ளவில்லையெனின் அவன் கருத்துருவாக்கம் குப்பையிலெறியப்பட வேண்டியதே. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் ஏற்காத கருத்துருவாக்கத்தை, ஏன் இவர்கள் kung fu வீரர்களைப் போல உச்சஸ்தாயி ஒலியெழுப்பி விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவி வெளிப்படுத்துகிறார்கள் என்று தேடினால்; அந்த வகை நோயின் பெயர் Impress disorder என்று அறியக்கிடைத்தது.

2009 இற்கு முன்பு புலிகளையும் படைமாட்சியையும், அவர்களது போரியல்/அரசியல் நகர்வுகளை அவர்களே மாங்கு மாங்கென்று எழுதி மக்களைத்திரட்சிப்படுத்தும் வழியிலேயே நடந்துவிட்டு, 2009 இற்குப் பின் “பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது, நம்மவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை, இலங்கைக்கு வெளியேயான படைநடவடிக்கைகள் (?!) பற்றிய தெளிவின்மை” என்றெல்லாம் எரிந்து போனவைக்கோல் மேட்டில் , நெல்லுப்பொறுக்க அலைகிறார்கள்.

அண்மையில் மாட்சிமை தங்கிய ஈழத்து “மகதா” நிலாந்தன் அவர்களது நேர்காணலொன்று கண்டேன். பார்த்தேன் என்பது விழிப்புலனையும், சிந்திக்கும் திறனையும் ஈர்க்கும் “பார்த்தலுக்கு” மட்டுமே பொருந்துமென்பதால், அச்சொல்லை இவர்பால் ஏளனம் செய்ய மனம் ஒப்பவில்லை. அதனால் கண்டேன் என்பது “just like that” என்பதாக இருக்கட்டுமே

தமிழீழ விடுதளைப் போருக்கெதிராக, உலகமும் இலங்கையும் தீட்டிய போர்முனைப்பென்பது இனஅழிப்பு அடிப்படையிலானது. ஈழத்தின் அமைவிட அரசியலும், அது வகித்த காத்திரமான பங்கையும் உணர்ந்து, இறைமையைக் காக்கும் தலையாய கடமையைப் புலிகள் உணர்ந்ததால், உலகம் + சிங்களம் இணைந்து அவர்களை அழித்தது. அதற்கு நிலாந்த மகாத்மேயோ வைக்கும் உருட்டு யாதெனில்; ” சிங்கள அரசு தமிழருக்கெதிராக ஓர் சிந்தனைக்கட்டமைப்பை வளர்த்துக்கொண்டதாகவும், தமிழர்கள் அதில் தேர்ச்சியற்றவர்களாக இருந்தார்கள்” என்றும் ஒரு புள்ளியை நீட்டி முழக்கினார். இருக்கட்டும்.

அறம் சார்ந்த போரியற் சாதனைகளூடாக வளர்க்கப்பட்ட/ வளர்ந்த இயக்கம், நீதியான கருத்துருவாக்கம் செய்யாதிருப்பின், மண்ணுக்காக மடிந்த 50,000 மாவீரரும் எங்கிருந்து வந்தார்கள்..?

உச்சபட்ச வரலாற்றுச் சாதனைகளூடாக, தனது தெளிவான கருத்துருவாக்கத்தையும், இலட்சியத்தையும் விடுதலைப்புலிகள் உருவாக்காதிருந்தால், விடுதலைப்புலிகள் அழிந்தபின்பும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் ஏன் கொண்டாடப்படுகிறார்கள்…?

பிரபாகரன் என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி, மக்கள் தாமாகவே நகர்ந்தார்கள். மேலாக; போராட்டத்தின் மீதான முதல் நிதித்திரட்டு “தமிழீழ மீட்புநிதி” என்ற பெயரில் பணம்/பொன் என்ற வழியில் பெறப்பட்டு அது மீளளிக்கப்பட்டும் முடிந்துவிட்டது.செறிந்த கருத்துருவாக்கம் இன்றி, மக்களால் மனமுவந்து தரப்படாமல், இவ்வாறான நிதித்திரட்டு போர்க்கால அடிப்படையில் நிகழ வாய்ப்புண்டா..?

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தமிழீழ அரசின் கட்டமைக்கப்பட்ட அலகுகளினது நிர்வாகத்திறனை 2002 – 2007 வரை உலக நாடுகளின் பிரதிநிதிகள் வன்னிக்கு வந்து பார்த்தபோது, மகாத்மேயோ நிலாந்தன் எங்கிருந்தார்…?

அரசியல் விழிப்புணர்வென்பது “தந்தை செல்வா” காலம் தொட்டே இருக்கிறது. பின்னர் தியாகதீபம் திலீபனால் அது பட்டைதீட்டப்பட்டது. இவற்றுக்கு அப்பால், எத்தனையோ பேச்சுவார்த்தை மேசைகளில் “விட்டுக்கொடா இறைமை” என்பதைத் தவிர வேறென்ன கருத்துருவாக்கம் இருந்திருக்கவேண்டும்….?

நந்திக்கடலில் போராட்டம் தனது முழுப்பரிமாணத்தையும், புலிகளின் அசைந்துகொடா இறைமையையும் நிலையிட்டுக்காட்டிச் சென்றிருக்கிறது. அதை எந்தவிதக் கருத்துருவாக்கத்தாலும் மடைமாற்றவியலாது. அது வரலாறாக என்றும் வாழும்.

மகாத்மேயோ நிலாந்தன் அவர்களே, நவீன உலகில் Impress தேவையென்றால் Bigboss இல் கலந்துகொள்வதே சிறந்தது. அதற்குப் பதில்; ஈழத்தின் குருதிதோய்ந்த போராட்ட அச்சாணியை, வளைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்க.

இந்தப்பதிவை உங்களது கருத்திற்கெதிராக எழுதவைத்ததும், விடுதலைப்புலிகள் தந்த கருத்துருவாக்கத் தெளிவேயாகும் என்று கூறி அமர்கிறேன்.

-தேவன்

பகிர்ந்துகொள்ள