மட்டக்களப்பில் குடும்பத்தவர்களை துயரத்தில் ஆழ்த்திய சம்பவங்கள்!!

You are currently viewing மட்டக்களப்பில் குடும்பத்தவர்களை துயரத்தில் ஆழ்த்திய சம்பவங்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதாக  சிங்கள காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக ஏறாவூர் காவல் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (வயது 62) என்பவரே சேறும் சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் தனது மனைவி மற்றும் 9 வயது 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும் வழமையாக மீன்பிடித் தொழில் செய்து வருபவர் என்றும் சம்பவ தினம் அந்தக் குடும்பத்தினர் பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு தண்ணீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் சேற்றில் மூழ்கியுள்ளார்.

வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழ பின்னால் வந்த மனைவியும் விழுந்துள்ளார்.

இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்ததிழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலைமுடியையும் பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல் போயுள்ளார்.

சிறுவன் அப்பகுதியில் கூச்சலிட்டு அயலில் நின்றவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் தேடிய பொழுது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய உறுகாமம் புதூர் துறையடியில் மீன்பிடிப்பதற்காக தோணியில் சென்ற இளம் மீனவர் சனிக்கிழமை 23.01.2021 காணாமல் போயிருந்தார்.

உறுகாமம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுஹம்மது அப்ரார் (வயது 24) என்ற இளம் குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கியவராவார்.

நண்பகலளவில் மீன் பிடிக்கச் சென்றவர் காணாமல் போயுள்ள தகவல் மாலையளவிலேயே தெரிந்ததும் உறவினர்களும் மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர். எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் கடற்படை சுழியோடிகள் இவரது சடலத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் குடும்பத்தவர்களை துயரத்தில் ஆழ்த்திய சம்பவங்கள்!! 1
பகிர்ந்துகொள்ள