மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனையை தொடங்கியது இந்தியா!

மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனையை தொடங்கியது இந்தியா!

ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் என்பதுதான் இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்பது அதிர வைப்பதாக அமைந்திருக்கிறது. தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான், இந்த பரவலை தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது

இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையிலானது ஆகும்.

அனுமதி

இவ்விரு தடுப்பூசிகளையும் அந்தந்த நிறுவனத்தினர் விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்து உள்ளனர். இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசிகள் நம்பகமானவை, பாதுகாப்பானவை, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி விட்டது. இதற்கான அதிதீவிர நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் இறங்கி உள்ளன.

மருத்துவ பரிசோதனை தொடங்கியது

இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. முதல் இரு கட்ட தடுப்பூசி மருத்துவ பரிசோதனையை தொடங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த இரு கட்ட மருத்துவ பரிசோதனையின்போது, தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை சோதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய மருத்துவ சோதனை பதிவேட்டின் கடந்த 4-ந் தேதி தரவுப்படி, தடுப்பூசியின் முதல் கட்ட பாதுகாப்பு சோதனை 84 நாட்களில் முடியும்; இரண்டாவது கட்ட சோதனையின்போது, பாதுகாப்பு, செயல்திறன் சோதிக்கப்படும். இது அடுத்த 84 நாட்களில் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி சோதனை ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறுகிறது.

இதையொட்டி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் எலி, கினியா பன்றிகள், முயல்கள் போன்ற விலங்கு இனங்களில் இந்த தடுப்பூசி சோதித்து பார்க்கப்பட்டது. அதில் இந்த தடுப்பூசியால் உருவான நோய் எதிர்ப்புச்சக்தியானது (ஆன்டிபாடி), கொரோனா வைரசை வீழ்த்தும் வலிமையை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் வெளிப்பட்டள்ளது. தடுப்பூசியின் நச்சு இயல் ஆய்வுகளில் எந்தவொரு பாதுகாப்பு கவலையும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் சோதனைகள் வெற்றி அடைந்து விட்டால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments