மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் இலங்கை! – குவாட்டுக்கு அமெரிக்க செனட்டர் கடிதம்!

You are currently viewing மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் இலங்கை! – குவாட்டுக்கு அமெரிக்க செனட்டர் கடிதம்!

ராஜபக்ஷக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையானது மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் உள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ரொபட் மெனெண்டஸ் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு இலங்கை மீது அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ரொபட் மெனெண்டஸ், குவாட் அமைப்பின் அங்கத்துவ நாடுகளான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிடும்போது குவாட் அமைப்பின் நான்கு அங்கத்துவ நாடுகளும் பேரவையில் ஏகோபித்து நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் குவாட் அமைப்பு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இராஜதந்திர ரீதியான ஒற்றுமை உதவியாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ரொபட் மெனெண்டஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

டோக்கியோவில் குவாட் நாடுகளின் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் இந்தோ-பசுபிக் கட்டமைப்பின் அங்கமாக குவாட் எனப்படும் நாற்கர நாடுகள் தொடர்ந்தும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆதனை அடிப்படையாக வைத்தும் மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் இக்கடிதத்தினை குவாட் அமைப்பின் வெளிவிவகார பிரதிநிதிகளுக்கு இக்கடிதத்தினை அனுபபுகின்றேன்.

டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டமானது கொரோனா தடுப்பூசி திறனை அதிகரித்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட விடயங்களில் ஏகோபித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடல்சார் கள விழிப்புணர்வுக்காக புதிதாக தொடங்கப்பட்ட இந்தோ-பசிபிக் கூட்டாண்மையானது, கூட்டு கடல்சார் திறன் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றை உருவாக்குவதற்கான முக்கியமானதொரு படியாகும். அதேபோல், 13 நாடுகளின் கூட்டில் உருவாகியுள்ள இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் குவாட்டின் நான்கு அங்கத்துவ நாடுகளும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும்.

ஒரே எண்ணப்பாட்டைக் கொண்ட பங்காளித்தரப்புக்களிடையே பொருளாதார ஒருங்கிணைப்பை ஆழமாக்குவதற்கான முதற்படியும் இதுவாகும் என்பதோடு இதற்கு அமெரிக்காவின் இருசபைகளினதும் ஆதரவும் காணப்படுகின்றது. 2004ஆம் ஆண்டு இந்திப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர் நான்கு நாடுகளின் கூட்டின் பிரதிபலிப்பாகவே குவாட்டின் தோற்றம் காணப்படுகின்றது. அவ்விதமான குவாட்டின் செயற்பாடுகள் தற்போது பரந்துபட்டதாகவும் தாக்கங்களை ஏற்படுத்தவல்லதாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில் பிராந்தியத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்லதாக, உள்ள குவாட் அமைப்பானது, இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தவல்ல பொருளாதார சீரழிவை தவிர்ப்பதற்கு வழிகுத்துச் செயற்படுவதற்கான இயலுமை காணப்படுகின்றது.

ராஜபக்ஷக்களின் நிருவாகத்தின் கீழ், இலங்கையில் நிதி அழிவு இடம்பெற்றுள்ளதோடு, மனிதாபிமானப் பேரழிவின் விளிப்புக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் நாட்டை நேரடியாக சீனாவின் கடன்பொறிக்குள் இட்டுச் சென்றுள்ளார். அவருடைய சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக கடன்களை மீளச் செலுத்துவதற்கான விவேகமான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தவறிவிட்டார்.

இந்தப் பின்னணியில் அனைத்து இலங்கையர்களும் மாற்றத்துக்கான நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் எழுச்சிபெற்று வருகின்றார்கள். இலங்கைக்கு கடன்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு புதுடில்லி ஏற்கனவே செயலூக்கமான பங்களிப்பை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில் வொஷிங்டன் நீண்டகால பொருளாதார ஆதரவினை தயாரித்து வருகின்றது. அதேபோன்று, டோக்கியோவும், கான்பராவும் உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அந்தவகையில் ‘குவாட் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண பொறிமுறை’ உருவாக்குவதன் மூலமாக பெரும் வகிபாகத்தினை குவாட் அமைப்பு வகிக்க முடியும் என்பதோடு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்றவாறான அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியும் என்பதையும் நிரூபிக்க முடியும் என்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments