மனித உரிமைகள் மோசமாக செல்லும் இலங்கை!

மனித உரிமைகள் மோசமாக செல்லும் இலங்கை!

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், இலங்கை தொடர்பான கடுமையான க​வலைகளையும் முன்வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதில், ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஜெனீவாவில், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான இலங்கையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார். குறித்த விடயங்களுக்கான பதிலை இலங்கை அரசாங்கம் உடனடியாக வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல முறைப்பாடுகள் மீண்டும் கிடைத்துள்ளனவென, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழல் மோசமான காலப்பகுதி என்றார்.

பகிர்ந்துகொள்ள