மன்னாரில் மீண்டும் மனிதப்புதைகுழி அகழ்வு!

You are currently viewing மன்னாரில் மீண்டும் மனிதப்புதைகுழி அகழ்வு!

ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கொள்ளப்படாமல் இருந்த மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி வவுனியா மேல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையின் கீழ் மீண்டும் அகழ்வு செய்யப்படவுள்ளது. 

மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு கடந்த வருடம் மூன்றாம் மாதம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மனித புதைகுழி வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பான சட்டத்தரணிகள் நீதி மன்றத்தில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்.   

இந்த நிலையில் குறித்த தீர்ப்பினை இடை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு, வடமாகாண மேல் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்காக வாதிடும் சட்டத்தரணிகள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்னவேல் மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

குறித்த மனுவை விசாரித்த வவுனியா வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட குறித்த தீர்ப்பினை தற்காலிகமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 

அவ்வழக்கானது நேற்றைய தினம் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குறித்த மீளாய்வு மனு இன்று விளக்கத்திற்கு வந்தது. விசேட அரச சட்டவாதி, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் தலைமையிலான சட்டத்தரணி குழாம் (OMB), காணாமல் ஆக்கப்பட்டோர் தரப்பிற்கான சட்டத்தரணி ஆகியோர் வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.

புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட வைத்திய கலாநிதி ராஜபக்சவும் மன்றில் முன்னிலையாகி இருந்தார். விளக்கம் முடிவடைந்ததும் உடனடியாகவே நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பை அறிவித்தார். மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது எனவும், புதைகுழி அகழ்வுப் பணியை உடன் ஆரம்பிக்குமாறும் மன்னார் நீதிபதிக்கு இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் புதைகுழி விசாரணையில் பங்கு கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம் ஒவ்வொரு புதைகுழி அகழ்வு நாட்களிலும் 10 பேர் நேரடியாக கலந்து கொள்வதற்கும் மற்றையவர்கள் 30 மீற்றர் தூரத்தில் இருந்து அகழ்வு பணியை பார்வையிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்தில் 10 நிமிடம் நேரடியாக புதைகுழி இடத்தில் சென்று செய்தி சேகரிக்க நீதிமன்று அனுமதியளித்துள்ளது. மிக விரைவாக அகழ்வுப் பணியை ஆரம்பித்து முடிவிற்கு கொண்டு வருமாறு மன்னார் நீதிமன்றத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் நீதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அரச சட்டவாதி, சட்டத்தரணிகள், காவல்துறையினர், சட்ட வைத்திய அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்று சேர்ந்து விசாரணையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மனிதப்புதைகுழி அகழ்வு விரைவாக நடத்தப்படும் முகமாக ஒவ்வொரு இரண்டு மாதமும் முன்னேற்றகரமான அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் என மன்னார் நீதிபதிக்கு, நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

குறிக்கப்பட்ட வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படாது வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தது தவறு என ஆட்சேபனை முன்வைக்கப்பட்ட போது 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள எந்த நீதிமன்றமும் மன்னார் நீதிமன்றத் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தி விசாரணை செய்யலாம் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து ஆட்சேபனையை நிராகரித்தார்.

செம்மணி மனித புதைகுழி வழக்கை சுட்டிக்காட்டி காணாமல்போவர்களின் உறவினர்களது சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு இலங்கை அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டக்கோவையை சுட்டிக்காட்டி சட்ட ரீதியாகவே அனுமதி வழப்படும் என தெரிவித்த நீதிபதி, மன்னார் நீதவான் நீதிமன்ற தீர்மானத்தை இரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளையின் கீழும், வவுனியா மேல் நீதிமன்ற மேற்பார்வையிலும், மன்னார் சதொச புதைகுழி வழக்கு நடைபெறும் என நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவித்தார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments