மன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது!

மன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது!

இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாதெனவும் இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதி வழங்க வேண்டாமெனவும், கடற்படை அதிகாரியிடம் மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல், மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (14) காலை 10.30 மணியளவில், நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் 14 நபர்கள்  தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றார்.

“எமது மாவட்டத்திலும் நோய் பரவாமல் இருப்பதற்கான தற்காப்பு தொடர்பான ஆயத்தக் கூட்டம், இன்றைய தினம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் படி எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை ஆபத்தான நிலைமை ஏற்படவில்லை.

“மேலும் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தங்களுடைய முழுமையான நடவடிக்கைகள் குறித்த விடையம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

“இதன் போது கடற்படை அதிகாரிக்கு நான் இருக்கமான அறிவுறுத்தல் வழங்கினேன். அதாவது, இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக இங்கே வருவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதிக்க வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்” எனவும் மோகன்றாஸ் தெரிவித்தார்.

“அதற்கு மேலதிகமாக பிரதேச செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். இவ்விடயம் தொடர்பாக பிரதேச மட்டத்திலும் இக்கூட்டங்களை நடத்துமாறு கோரியுள்ளோம். நோய்க் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு கோரியுள்ளோம். இதன்போது, இணைந்து செயற்படுவதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம்.

“இதற்கு மேலதிகமாக நோய்ப் பரம்பல் தற்போது எமது மாவட்டத்தை பொறுத்தவரையில் எதுவும் இல்லாத நிலையில் சந்தேகங்களின் பெயரில் சில தனிமைப்படுத்தும் நிலையங்களில் இராணுவத்தின் உதவியுடன் இயங்க வைத்து வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments