மீண்டும் விற்கப்படுமா தமிழர்களின் தமிழ்த்தேசியம்..? தவிர்க்கப்பட முடியாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!!

மீண்டும் விற்கப்படுமா தமிழர்களின் தமிழ்த்தேசியம்..? தவிர்க்கப்பட முடியாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!!

இலங்கையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2009 இற்கு பின்னரான வாக்களிப்புக்களில் வாக்களித்து ஏமாந்து, இன்றுவரை அரசியல் அனாதைகளாகவே அலையும் தமிழ் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது.

கடந்த 11 ஆண்டுகள் என்ன செய்தோம் என்று, தமிழர்கள் சார்பாக நாடாளுமன்றம் வரை சென்ற கட்சி, தனது சாதனை என்று பட்டியலிடுவதற்கு ஏதுமில்லை என்பது ஒருபுறமிருக்க, அதை விவாதிப்பதே அபத்தமானதாகும். கடந்த 11 ஆண்டுகளில் அணுமுனையளவாவது  முன்னேற்றம் என்ற சாதனை எதையும் குறிப்பிட முடியுமா என்பதை மக்கள் நியாயமான கேள்வியாக்கி கொண்டாலே தெளிவு தானாக வந்துவிடும். “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை”. 

40 ஆண்டுகால புண்ணை 11 வருடத்தில் ஆற்ற முடியாது; ஆயுதப்போராட்டத்தால் பெற முடியாமல் போனதை இணங்கிப்போய்த்தான் பெறமுடியும்; பெரும்பான்மை சிங்கள மக்களை கோபப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது, என்பது போன்ற வாதங்கள் கேட்டு சலித்தவைதான். 

சரி, அப்படி இருந்துதான் சாதித்தது என்ன என்பது இன்னமும் தேடலிலேயே இருக்கிறது.

இராணுவ விரிவாக்கம், சிங்கள குடியேற்றங்கள் போன்ற இன்னோரன்ன திட்டங்களுக்காக தமிழர்களின் பிரதேசங்கள் கையகப்படுத்தப்படுவது போதாதென்று இப்போது, பண்டைக்கால வரலாற்று ஆய்வுகள் என்ற போர்வையில், இலங்கைத்தீவு முழுவதும் பெளத்தர்களுக்கே உரியதென நிறுவும் முயற்சிக்காக தமிழர்களின் வரலாற்றுத்தொன்மை மிக்க பூர்வீக நிலங்கள் அரசுடமையாக்கப்படுவதும்; காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்காது தொடர்கதையாகவே நீள்வதும்; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது நீண்ட நெடிய வரலாறாக தொடர்வதும்; போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகள் இன்னமும் அப்படியே இருப்பதும்தான், பெரும்பான்மை சிங்கள மக்களை கோபப்படுத்தாமல், ஆளும் சக்திகளோடு இணங்கிப்போய் 11 ஆண்டுகளாக இணக்க அரசியல் செய்ததில் கண்ட பலாபலன். இதுவே அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் இயக்கம் என்றே ஒரே தகுதியும், அன்றைக்கு இருந்த உணர்வுபூர்வமான சூழ்நிலையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உச்சாணியில் அமர்த்தியது என்னவோ உண்மைதான். அதன் பின்னாலிருந்த தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நியாயமானவை. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அடுத்தபடியாக கூட்டமைப்பே தமிழர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்பது தமிழர்களிடையே ஆழமாக வேரூன்றிப்போனதால் அந்த உயர்ந்த இடத்தை கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது.

ஆனால், தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதை விட, அவர்களின் ஆகக்குறைந்த மனிதாபிமான தேவைகளாவது கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தால் நிவர்த்தி செய்யப்பட்டனவா என்ற கேள்வி இன்றும், என்றும் விடை தெரியாமலே அந்தரிக்கிறது.

தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடும், 16 உறுப்பினர்களோடும்  நாடாளுமன்றம் போன கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய கொள்கையை கைவிடாத உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் என்றும், முடிந்தளவு ஆகக்குறைந்த தேவைகளையாவது நிறைவேற்றித்தரும் என்றும் காத்திருந்த தமிழ் மக்களின் கண்கள் பூத்துப்போனதுதான் மிச்சம்.

ஒரு கட்டத்தில், கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தால்த்தான் அரசு இயங்கும் என்ற நிலை வந்தபோது, பாவப்பட்ட தமிழர்கள் சற்று நிமிர்த்து உட்கார நினைத்தார்கள். அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை.

கரணம் தப்பி மரணம் என்ற நிலையில் இருந்த அரச இயந்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்தபோது, “பரஸ்ரபர ஒத்துழைப்பு” என்ற தார்மீக அடிப்படையிலாவது தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றுக்காவது தீர்வை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பால் முடியுமென தமிழர்கள் நம்பினார்கள்; ஆனால் அந்த மக்கள் வாக்களித்த கூட்டமைப்பு அதை செய்யாமல், மாபெரும் வரலாற்றுத்தவறை துணிந்து இழைத்தது.

தனிநாடோ, அல்லது சமஷ்டியோ கேட்டிருக்கவும் வேண்டாம். குறைந்தபட்சம், மக்களின் காணிவிடுவிப்பு, காணாமல் போனோருக்கான நீதி அல்லது சிறைகளில் விசாரணைகள் இல்லாமல் அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றில் ஒன்றைத்தானும் நிவர்த்தி செய்யக்கூட  கூட்டமைப்பு நினைத்ததில்லை.

மேற்சொன்ன ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றா விட்டால் அரசுக்கான ஆதரவை விலக்குவோம் என்ற ஒற்றை வார்த்தை, கூட்டமைப்பின் இன்றைய இழிநிலையை தவிர்த்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள பட்டப்படிப்பேதும் தேவையில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடனான சந்திப்பொன்றை அன்றைய அரசு திட்டமிட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் மாத்திரமே பேச்சுக்கள் நடாத்தப்படவேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் அல்ல என்றும், அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளோடு அரசின் சந்திப்பு நடாத்தப்பட்டால் அரசுக்கான ஆதரவை விலக்குவதை ஆலோசிப்போம் என அன்று கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனால் அரசுக்கு சொல்லப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்பட்டு, திட்டமிட்ட அந்த சந்திப்பே நடக்காமல் செய்யப்பட கூட்டமைப்பால் முடிந்திருக்கிறது என்றால், மேற்சொன்ன ஏதாவது ஒன்றை தீர்க்காவிட்டால் ஆதரவை விலக்குவோம் என கூட்டமைப்பால் சொல்லியிருக்க முடியாதா என்ற கேள்வியும் எழுவது இயல்பானது.

ஆனால், இவையெல்லாம் அன்று சுட்டிக்காட்டப்பட்ட போது, ஆயுதப்போராட்டத்தால் சாதிக்க முடியாததை இணங்கிப்போய்த்தான் பெற வேண்டும் என்றும், பெரும்பான்மை சிங்களவர்களை கோபப்படுத்தி எதையும் பெற முடியாது என்று விளக்கம் சொன்னார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

30 வருட ஆயுதப்போராட்டத்தால் பெற முடியாமல் தவறிப்போனதை, பேசுவதால் உடனடியாக பெறமுடியுமா என்பது அன்று ஒரு வாதமாக ஆக்கப்பட்டிருந்தாலும் கூட, நாடாளுமன்றத்தில் பேரம் பேசக்கூடிய உறுதியான நிலை இருந்தபோது அந்த பிரம்மாஸ்திரத்தை கழுவி காயவைத்து கருவாடு போட்ட கூட்டமைப்பின் அரசியல் வியாபாரம், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அதியுச்ச துரோகம்.

தவிரவும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் முன்வைத்து, நடைபெற்ற இனப்படுகொலைக்கான நீதிக்கான அறைகூவல்களை உறுதியாக முன்னெடுத்திருக்க வேண்டிய கூட்டமைப்பு, அரசோடு ஒளிந்து மறைந்து விளையாடியதேயல்லாமல், இனப்படுகொலையான மக்களுக்கான நீதியை பெறுவதில் எவ்விதமான முனைப்புக்களையும் காட்டாமல் விட்டதோடு, எதிர்காலத்தில் நடக்குமென நம்பப்படும் இனப்படுகொலைக்கான நீதி விசாரணை என்ற எதிர்பார்ப்பின் உயிர்நாடியையே பிடுங்கி எறிவது போல், “உள்ளக விசாரணை” என்ற கண்துடைப்புக்கு ஆதரவளித்து இனப்படுகொலை விசாரணை என்பதிலிருந்து அரசை காப்பாற்றிய வரலாற்று துரோகத்தையும் செய்ததை தமிழர்கள் மறந்துவிட முடியாது.

கொழும்பின் வேண்டுதல்களோடு, பிராந்திய வல்லரசின் அழுத்தங்களும் இதில் பிரதான பங்கு வகித்தன என்று சொல்லப்பட்டாலும், கூட்டமைப்பின் அரசியல் யாருக்கானது என்பதும், யார் எதற்காக கூட்டமைப்பை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள் என்பதெல்லாம் கூட்டமைப்பின் நினைவில் இல்லாமல் போனது மன்னிக்க முடியாத குற்றமாக கருத்தப்படக்கூடியது.

கொன்றவனே கொலைக்கான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்ற உலகப்புகழ் பெற்ற நீதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்ததில் மட்டும் திருப்தி காணாத கூட்டமைப்பு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற கொள்கைக்கும் இறங்கிப்போனதோடு நின்றுவிடாமல், “ஏக்க ராஜ்ய” என்ற ஒற்றையாட்சி முறைமையையும் ஏற்றுக்கொண்டு மீண்டுவரமுடியாத பாதாளத்தில் தன்னை வீழ்த்திக்கொண்டது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அடிமை சாசனம் எழுத முற்படுகிறதென்றே கொள்ள வேண்டும்.

“ஏக்க ராஜ்ய” விற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது, “ஏக்க ராஜ்யவில் சமஷ்டி உண்டு; ஆனால் சமஷ்டி ஏக்க ராஜ்யவில் இல்லை” என்று இன்றும் தீராமல் இருக்கும் கூட்டமைப்பின் குழப்பம், எஸ்.ஜே. சூர்யாவையே கலங்கடிக்கக்கூடியது.

“ஏக்க ராஜ்ய” விற்கான கூட்டமைப்பின் ஆதரவானது, “வடக்கு / கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை; மாகாணசபையும் இல்லை; மண்டையில் எதையும் வைத்திருக்காமல் வெறுமனே வாருங்கள் பேசலாம்” என்று பிரதமர் மஹிந்த சொல்லும் அளவில் வந்து நிற்கிறது. 

தமிழர்களின் பூர்வீக தாயகமாக, இணைந்த வடக்கு / கிழக்கு இருக்கும் என்பது, அன்று பிராந்திய வல்லரசால் வலிந்து திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு, 13 ஆம் திருத்த சட்டத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. தமிழர்களுக்கான ஆகக்குறைந்த தீர்வாக எது முன்வைக்கப்பட்டாலும், அதில் இணைந்த வடக்கு / கிழக்கு என்பது இல்லாமல் எதுவும் நகராது என்பதை புரிந்து கொண்டே அன்று வடக்கு / கிழக்கிற்கிடையில் கோடாரி போட்டார் மஹிந்த. அதையும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது கூட்டமைப்பால்.

இன்று, நிபந்தனைகளோ, அபிலாஷைகளோ ஏதுமில்லாமல் வாருங்கள் பேசலாம் என்று அழைக்கும் பிரதமருடன் எதை பேசுவது என்ற குழப்பம் கூட்டமைப்புக்கும் இருக்கலாம். கையில் சாட்டை இருந்தபோது அதை சுழற்றாமல் விட்டு விட்டு, இப்போது சாட்டை இல்லையே என்று அங்கலாய்ப்பதில் பயனேதும் இருக்கப்போவதில்லை.

இணைந்த வடக்கு / கிழக்கு இல்லை; மாகாணசபை இல்லை; சமஷ்டி இல்லை; தமிழுக்கு இரண்டாம் நிலை மொழி என்ற அந்தஸ்துகூட இல்லை; ஒன்றுபட்ட ஒரே இலங்கைக்குள் தீர்வு; இலங்கையின் சட்டவரைபுக்குட்பட்டு, தமிழர் ஒருவர் அதிபராக வரமுடியாது; சிங்களமே பிரதான மொழி; பெளத்தமே பிரதான மதம்; இலங்கை முழுவதும் பெளத்த நாடு; தமிழர்களின் பாரம்பரிய / வரலாற்று இடங்கள் என்று ஏதும் இல்லை என்பவற்றை ஏற்றுக்கொண்டால், போனால் போகட்டும் என்று தமிழர்கள் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்துவிட்டு போகலாம் என்பதை விட கூட்டமைப்புக்கு வேறு செய்தி எதையும் அரசு கொடுக்காது என்பது தெளிவு.

ஒருவேளை அப்படியும் நப்பாசையில் கூட்டமைப்பு அரசோடு பேசப்போனால், வந்ததற்காக வெள்ளைத்தாளில் கையெழுத்திட்டுவிட்டு செல்லுங்கள்; மிகுதியை நாங்கள் எழுதிக்கொள்கிறோம் என்று வேண்டுமானால் அரசு சொல்லலாம்.

இலங்கை அரசமைப்புக்குள் நின்று எழுதப்படும் எந்த ஒப்பந்தமும் நிலைக்காது என்பதற்கு, “பண்டா – செல்வா ஒப்பந்தம்” தொடங்கி பல ஒப்பந்த வரலாறுகள் இருக்கின்றன என்பதும் கூட்டமைப்புக்கு தெரியாததல்ல. எனினும், சர்வதேசத்தின் மேற்பார்வையில் தீர்வெதையும் பெற்றுக்கொள்ள முயல்வதானது, பிராந்திய வல்லரசின் ஆதிக்க சக்தியை எதிர்ப்பதும், கொழும்பை எதிர்ப்பதுமாகப்போவதோடு, அரச சலுகைகளும் பறிபோகும் என்ற கவலை கூட்டமைப்பிற்கு.

தமிழ்மக்களின் சார்பாக, தந்தை செல்வா காலத்திலிருந்தே ஒப்புக்கொள்ளப்பட்ட எவ்விதமான விடயங்களும் பேசப்பட முடியாது என்ற தற்போதைய நிலையில் கூட்டமைப்பு அப்படி எதைத்தான் பிரதமரோடு பேசும் என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அதுவே ஆபத்து என கூட்டமைப்பு உணர்ந்திருப்பதன் விழிப்புதான் இப்போது “புலிகள்” பெயரை மீண்டும் கூட்டமைப்பு கையிலெடுக்க காரணமாகிறது.

தமிழ் மக்களின் ஆழ்மனங்களில் பதிந்துபோயிருக்கும் “புலிகள்” என்ற மத்திரச்சொல்லை எப்போது சாமர்த்தியமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கூட்டமைப்பு நன்கு புரிந்து வைத்திருக்கிறது என்பதும், அதுவே தமிழர்களின் பலவீனமாகவும் இருப்பதும் துரதிர்ஷ்டவசமானது.

புலிகளின் பின்னடைவின் பின்னரேயே திருமலைக்கு தான் சுதந்திரமாக செல்லக்கூடியதாக இருக்கிறதென இரா.சம்பந்தனும்; போர்க்குற்றம் தொடர்பில் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என எம்.ஏ.சுமந்திரனும் என்றைக்கு சொன்னார்களோ அன்றைக்கே கூட்டமைப்பு தமிழ்த்தேசியப்பாதையிலிருந்து விலக ஆரம்பித்துவிட்டது.

தங்கள் இருப்புக்கு பங்கம் வரும்போது மட்டும் “புலிகள்” பெயரை உச்சரிப்பது கூட்டமைப்புக்கு புதியதல்ல. அதே உத்தியை இப்போதும் வாக்கு வேட்டைக்காக பயன்படுத்த முனைகிறது கூட்டமைப்பு. புலிகளை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மாவை சேனாதிராஜா இப்போது கூறியிருப்பதை இதனடிப்படையிலேயே பார்க்க வேண்டியிருக்கிறது.

புலிகளின் தலைமைத்துவத்தை முழுமனதோடு ஏற்றுக்கொள்வதோடு, தமிழ்த்தேசிய அரசியலுக்காக உழைப்போமென தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கூட்டமைப்பு, பின்னாளில் படிப்படியாக புலிகளை வசைபாடுவது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசியத்தையும் அடகு வைக்கும் அடிமை அரசியலையே இதுவரைகாலமும் மேற்கொண்டு வந்திருக்கிறது.

ஆக, தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டைக்காக மட்டுமே புலிகளின் நாமத்தை உச்சரிக்கும் கூட்டமைப்பு, தேர்தல் முடிந்து அடுத்த 5 வருடங்களுக்கு புலிகளை வசை பாடிக்கொண்டிருப்பதோடு நின்றுவிடாமல், அரச சலுகைகளுக்காக தமிழர்களை ஆதிக்க சக்திகளிடம் அடகு வைக்க முனையும் வரலாறு தொடரத்தான் வேண்டுமா என்பதை வாக்களிக்கும் மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் ராஜபக்க்ஷக்களுக்கே கூட்டமைப்பின் ஆதரவு என்று பரவலாக மக்கள் பேச ஆரம்பித்திருப்பது ஒருபுறமிருக்க, நடைபெறும் அரசியல் நகர்வுகள் அதை உறுதி செய்வதுபோல்  அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவந்த சிறந்த அரசியல் தலைவர் என்று, இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்தவுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கியிருப்பதும், அரசரோடு இணைந்து நெருக்கமாக செயற்பட்டால்தான் தீர்வு பற்றி யோசிக்க முடியும் என்று பிரதமரும் நிபந்தனை தோரணையில் தெரிவித்திருப்பதும் ஒன்றோடொன்று பொருத்திப்பார்க்கப்பட்டால், மக்களின் சந்தேகமானது இயல்பானது எனப்புரியும்.

தவிரவும், நடக்கவிருக்கும் தேர்தல்களில் மக்கள் கூட்டமைப்பிற்கு அதிகமாக வாக்களித்து பலப்படுத்தினால்த்தான் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பேரம் பேசும் சக்தியாக விளங்க முடியும் என இரா. சம்பந்தன் இப்போது சொல்லியிருப்பதை விட நகைச்சுவை வேறேதும் இருக்க முடியாது. பேரம் பேசக்கூடிய சூழ்நிலையில், பேரம்பேசும் பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருந்தபோது, அந்த பேரம் பேசும் சக்தியை அடகு வைத்துவிட்டு, அரச சலுகைகளிலேயே குறியாக காலத்தை கடத்தியது கூட்டமைப்பு.

இலங்கை ஆளும் தரப்புக்களோடு பேரம் பேசும் வாய்ப்புக்கள் ஒன்றல்ல; இரண்டல்ல…  5  முறைகள் அந்த அருமையான வாய்ப்பு கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தது. அது மாத்திரமல்லாமல், கொழும்பில் யார் ஆட்சியமைக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்களின் வாக்குக்களும், கூட்டமைப்பும் இருந்ததையும் யாரும் மறுத்துவிட முடியாது.

கொழும்பு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும், நாடாளுமன்றத்தில் பேரம் பேசும் வல்லமையையும் கொண்டிருந்த கூட்டமைப்பு, தொலைநோக்கு பார்வையுடன் சரியான பாதையில் காய்களை நகர்த்தியிருந்தால், இலங்கை அரசியலை நிர்ணயிக்கக்கூடிய நிரந்தர சக்தியாக தமிழர்கள் உருவெடுத்திருப்பார்கள்.

ஆனால், அத்தனை வாய்ப்புக்களையும் ஆளும் தரப்புக்களுக்கும், பிராந்திய வல்லரசுக்கும், தனது சொந்த நலன்களுக்கும் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டிருந்த கூட்டமைப்பு, இனிமேல் நாடாளுமன்றம் போய், இப்போது தென்னிலங்கையின் மிகப்பெரும் பலத்தோடு இருக்கும் ராஜபக்ஷக்களோடு நிச்சயமாக பேரம் பேசுமென மக்கள் இனியும் நம்புவார்களானால், “ஈழத்தமிழர்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று, அன்று தந்தை செல்வா அவர்கள் சொன்னதைத்தான் இனியும் சொல்ல வேண்டியிருக்கும். 

கூட்டமைப்பை விட்டால் தமிழர்களுக்கு வேறு தெரிவு இல்லையென இன்றும் வாதிடுபவர்கள், கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக ஆற்றிய பணிகளில் ஒன்றையாவது குறிப்பிட முடியுமா என்ற ஒற்றை கேள்விக்கே பதிலில்லாமல் அல்லாடுகிறார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பு முழங்காலில் நின்று வாக்குப்பிச்சை கேட்டாலும், கடந்த கால சரித்திரங்களை மனதில் வைத்து, தரித்திரங்களை ஒழிக்க வேண்டிய வரலாற்றுக்கடமையிலிருந்து தமிழ் மக்கள் தவறிவிடக்கூடாது.

தமிழ் மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வரும் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் “கடந்த முறை நாடாளுமன்றத்தில் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய கூட்டமைப்பு, எதற்காகவாவது பேரம் பேசியிருக்கிறதா” என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் தவறாமல் கேட்க வேண்டும்.

சரி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் தமிழர் விரோத அரசியலை நடத்துகிறதென்றால், தமிழர்களுக்கு இப்போது இருக்கு தெரிவுதான் என்ன..? கூட்டமைப்பை தவிர்த்து களத்திலே இருக்கும் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியும், இதர சிறிய கட்சிகளும் தான். 

சிறிய கட்சிகளை தவிர்த்து விடலாம்; ஏனெனில், தேர்தல்களில் அவர்கள்  யாருடனாவது கூட்டு சேர்ந்துதான் போட்டியிடுவார்கள். அவற்றை தவிர்த்து பார்த்தால் மீதமிருப்பது முன்னணியும், கூட்டணியும் தான். இதில் கூட்டணியின் அரசியல் நகர்வுக்கும், கூட்டமைப்பின் நகர்வுக்கும் வேறுபாடுகள் இல்லையென்பதை, கடந்த காலங்களில் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் திடமாக கோடி காட்டி விட்டார். 

முன்னதாக கூட்டமைப்பு ஒத்துக்கொண்ட “ஏக்க ராஜ்ய” வை அடிப்படையாக வைத்தே தீர்வொன்றுக்கான நகர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டுமென விக்னேஸ்வரன் அவர்கள் முடிவெடுத்ததும், இனப்படுகொலைக்கான நீதி விசாரணையாக  உள்ளக விசாரணையே போதுமானதென அவர் ஆமோதித்திருப்பதும் இதற்கான மிகச்சிறந்த சான்றுகள்.

“ஏக்க ராஜ்ய” என்பது தமிழர்களை இலங்கையின் இரண்டாந்தர குடிமக்களாக, உரிமைகளேதும் இல்லாத இனமாக வைத்திருப்பதற்காக கொண்டுவரப்படுவதே என்ற சரியான புரிதல் இருக்கும் யாருக்கும், இந்த “ஏக்க ராஜ்ய” வின் அடிப்படையிலேயே தீர்வொன்று காணப்பட வேண்டுமெனவும், இனப்படுகொலைக்கான நீதி விசாரணையாக உள்ளக விசாரணையே போதுமெனவும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் பேரவைக்கும், மேற்சொன்னவற்றை எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்ட கூட்டமைப்புக்கும் வேறுபாடேதும் இல்லை என்பது சட்டென புரிந்துவிடும். 

ஆக, தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியும் தமிழர்களுக்கான அரசியல் கட்சியல்ல என்பதும் நிரூபணமாகும் நிலையில், அடுத்து நோக்கப்பட வேண்டியது முன்னணி மட்டுமே. 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதயமானது, காலத்தின் கட்டாயம் என்பதை அப்போதே முன்னணி திடமாகவே மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தது. எனினும், முன்னணியின் உதயம் பற்றிய கூட்டமைப்பின் அடிப்படையற்ற பிரச்சாரங்களுக்கு கூட்டமைப்பின் ஆள் பலமும், அதிகார பலமும், ஊடகபலமும் துணைபோன நிலையில், முன்னணி பற்றிய சரியான புரிதலை கொண்டிருப்பதற்கு தமிழ் மக்கள் தவறிவிட்டார்கள் என்று கொள்வதே  சரியானதாக இருக்கும்.

கூட்டமைப்பின் தமிழ்த்தேசிய விரோதப்போக்கை புரிந்து கொண்டதோடு, கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள், கொழும்பு மற்றும் பிராந்திய வல்லரசின் தமிழர்விரோத திட்டங்களுக்கு அமைவானதாகவும், கூட்டமைப்பின் தலைவர்களுக்கான தனிப்பட்ட சலுகைகளுக்கானதாகவும் இருந்ததேயன்றி, தமிழ் மக்களுக்கானதல்ல என்பதை குறிப்பறிந்தும் கொண்டதாலேயே கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதயமானதற்கான பிரதான காரணிகளாக அமைந்தனவென்பது அன்று மக்களால் சரியாக புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், அந்தப்புரிதல் இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பரவியிருப்பது வரவேற்கத்தக்கது. கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறுவதற்கான மிக முக்கியமான காரணமாக அன்று பிராந்திய வல்லரசின் அழுத்தம் இருந்தது என்பதை, அண்மையில் பொதுவெளிகளில் உலவிய காணொளியொன்றும் உறுதி செய்வதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

தேர்தல் அரசியல் என்கிற விடயத்தில், முன்னணிக்கான கணிசமான ஆதரவை வழங்குவதற்கு மக்கள் தவறியிருந்தாலும், அதனாலெல்லாம் சோர்ந்துபோய் இருந்துவிடாமல், கட்சியின் பிரதான கொள்கையான தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் விலகாத முன்னணி, தொடர்ந்தும் தமிழ்த்தேசிய அரசியலையே முன்வைத்தும், தமிழ்த்தேசிய அரசியலின் அடிநாதமாக விதந்துரைக்கப்பட்ட கோட்பாடுகளையும் முன்னிறுத்தி மக்களுக்கான தூய்மையான அரசியலை முன்னெடுத்து வருவதோடு, யாரிடமும், எதற்காகவேனும் அணிபணிந்து போகாமலும், விலைபோகாமலும் இருப்பதே அக்கட்சியின் தூய்மையான தமிழ்த்தேசிய அரசியலுக்கு அடிப்படையான எடுத்துக்காட்டுகள்.

முன்னணியின் சீரான, திடமான, தளம்பாத, பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசுகளிடம் விலைபோகாத, தமிழர்களை யாரிடமும் அடகு வைக்காத உறுதியான அரசியல் பாதையின் தார்ப்பரியம், இப்போது மக்களால் முன்னிலைப்படுத்தப்படுவதானது, மக்களின் மனோநிலையில் மாற்றங்கள் தொடங்கிவிட்டதற்கான குறியீடுகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

80 களுக்கு முன்னதான சாத்வீக போராட்டங்களின் தோல்வியும், இணங்கிப்போய் எழுதிக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள் கொடுத்த விரக்தியும், காலத்துக்குக்காலம் இனவாத சக்திகளால் திட்டமிட்டு தமிழர்களின்மேல் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் கொடுத்த ஆறாத வடுக்களும் ஆயுதப்போராட்டமொன்றுக்கு வித்திட்டிருந்தன.

தமிழ்த்தேசியம் எனும் உன்னதமான கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் வளர்த்தெடுத்ததன் பின்னர், தமிழ்த்தேசியம் என்பதை விடுத்து தமிழருக்கான தீர்வெதுவும் இருக்கப்போவதில்லை என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டதால்தான், பிராந்திய வல்லரசு, மேற்குலகம் மற்றும் கொழும்பு இனவாத சக்திகளின் சதிவலைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் பத்தாண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதயமானது.

2009 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய கூட்டமைப்பு, மாறாக தமிழ்த்தேசிய நீக்க அரசியலையே மேற்கொண்டிருந்ததன் விளைவே, இன்று தமிழர்கள் வெற்றுக்கைகளுடன் நிற்பதற்கான முதன்மை காரணம். 

இந்த நிலையில் தமிழர்களுக்கு இன்று இருக்கும் ஒரே தெரிவு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் என்ற புரிதலை மக்கள் முதன்மைப்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்க வேண்டியதோடு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னணியின் கைகள் மக்களின் வாக்கு பலத்தால் மேன்மேலும் பலப்படுத்தப்படுவதால் மாத்திரமே இலங்கையில் தமிழர்கள் சக்திவாய்ந்த தரப்பாக மாற முடியும்.

கொழும்பு சக்திகளும், பிராந்திய சக்திகளும் தமிழர்களின் அரசியலை நிர்ணயிப்பதென்பது மாற்றப்பட்டு, கொழும்பு அரசியலையும், பிராந்திய அரசியலையும் நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் மாறவேண்டியதற்கான வேலைத்திட்டங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். “வல்லரசுகளுடனேயே தமிழர்கள் பேரம் பேசவேண்டும்” என முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அடிக்கடி சொல்லிவருவதன் உட்கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும். தமிழர்கள் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் நிலையில், பிராந்திய வல்லரசு மாத்திரமல்லாமல், மேற்குலக வல்லரசுககளும் தமிழர்களோடு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய நிலை நிச்சயம் உருவாகும்; அதை தமிழ் மக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்தே உருவாக்க முடியும்; அதை எந்த சக்தியாலும் தடுக்கவும் முடியாது; 

தவிரவும், இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையாக “உள்ளக விசாரணை” என்ற கண்துடைப்பு துடைத்தெறியப்பட்டு, சர்வதேச கண்காணிப்புடனும், அனுசரணையுடனும் சுயாதீனமான நடாத்தப்படும் சர்வதேச நீதி விசாரணை மட்டுமே, இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதியாக அமைய முடியும். 

2009 இற்குப்பின் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த கூட்டமைப்பு, புலிகள் விட்டுச்சென்ற தமிழர்களுடைய ராஜதந்திர நகர்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்ல தவறியதன் விளைவே, இன்று பேரம் பேசும் பலமும் பறிபோயிருக்கும் இழிநிலை. 11 வருடங்களாக இம்மியளவும் நகராமல், தேக்க நிலையிலேயே கூட்டமைப்பு வைத்திருந்திருக்கக்கூடிய தமிழர்களின் ராஜதந்திர நகர்வு அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்லப்படுவதோடு, நாடாளுமன்ற அரசியல் என்ற நிலையோடு மட்டுப்படுத்தப்படாமல், நிர்ணயிக்கும் சக்தியாகவும் மாற வேண்டியது அவசியம்.

இவையெல்லாம் நடக்க வேண்டுமானால், தமிழர்களுக்கானவர்கள் யார், உறுதி பிறழாமல் தமிழர்களுக்கான அரசியலை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் முன்னெடுத்து செல்லக்கூடியவர்கள் யார் என்ற தெளிவான முடிவை தமிழர்கள் எடுத்தேயாகவேண்டும்.

அதிகாரப்போட்டிகள் நிறைந்தும், பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்திலும் சீரழிந்து கிடக்கும் கூட்டமைப்பை மீண்டும் மீண்டும் நம்பி துரோக அரசியலுக்குள்திரும்பவும் வீழ்ந்து விடாமலிருக்க வேண்டுமென்றால், தமிழர்களுக்கு உள்ள ஒரேயொரு இறுதி நம்பிக்கை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. எனவே, பசப்பு வார்த்தைகளுக்கும், துரோக அரசியலுக்கும் வாக்களித்து தமிழர்கள் என்ற அடையாளத்தையும் தொலைத்து விடாமல், புத்தி சாதுரியத்தோடு செயற்பட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்து முன்னணியை பலப்படுத்தி தமிழர்கள் தனியான, தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பதோடு, தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, “இலட்சியத்தால் ஒன்றுபட்டு உறுதியோடு பயணிக்கும் மக்களாலேயே வரலாற்றை படைக்க முடியும்” என்ற கூற்றையும் நினைவில் வைத்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும்.

குகன் யோகராஜா 

தமிழ்முரசம் வானொலி (ஒஸ்லோ, நோர்வே) 

13.06.2020

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments