முறைப்பாடு வழங்கியும் உதாசீனம் செய்த சிறீலங்கா காவற்துறையினர் – பருத்தித்துறையில் தையலக உரிமையாளர் மீது வாள் வெட்டு!

You are currently viewing முறைப்பாடு வழங்கியும் உதாசீனம் செய்த சிறீலங்கா காவற்துறையினர் – பருத்தித்துறையில் தையலக உரிமையாளர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தில் உள் நுழைந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை(15) இரவு 7:30 அளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மின்சாரம் தடைப்பட்டதை சாதகமாக பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நபர்கள்  தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரான பருத்தித்துறை ஓடைக்கையை சேர்ந்த ச.பாலகுமார் (வயது- 44) என்பவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த  தையலக உரிமையாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதலுக்கு உள்ளான குறித்த தையலக உரிமையாளருக்கு தாக்குதல் நடத்திய தரப்பினரிடம் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பில் பருத்திதுறை சிறீலங்கா காவற்துறை நிலையத்தின் பலதரப்பட்ட முறைப்பாட்டு பிரிவில் (எம்.ஓ.) முறைப்பாடு கடந்த நாட்களில் செய்யப்பட்டிருந்ததாகவும்,

காங்கேசன்துறையில் உள்ள வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் அருவிக்கு தெரிவித்துள்ளனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பருத்தித்துறை நகரின் மத்தியில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை அங்குள்ளவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments