முல்லைத்தீவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!

முல்லைத்தீவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

இத்தகவலை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் தகவல் தருகையில்,

கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றபோது மாவட்டத்தின் வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகளிடம் இழிவான நடத்தையினைக் காண்பித்துள்ளார்.

உடற்தகுதி பரிசோதனைக்காக சென்றிருந்த மாணவர்கள் காலையில் 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை வைத்தியசாலையில் மறிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் சில பெற்றோர் வைத்தியசாலைக்குச் சென்று கேட்டபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உடற்தகுதி பரிசோதனைக்கு பாடசாலை நிர்வாகம் ஊடாக மாணவிகள் அனுப்பப்பட்டிருந்தால் கட்டாயம் பெண் ஆசிரியை ஒருவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். எனினும் பெண் ஆசிரியர் மாணவிகளுடன் அனுப்பப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.

காலையில் பரிசோதனைக்கு சென்றிருந்த மாணவிகள் மாலைவரை திரும்பாமை குறித்தும் பாடசாலை கவனிக்கவில்லை என்பது கவலை அளிக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி பரிசோதனை கூடம் கீழே உள்ள இரு பகுதியிலே அமைந்திருந்த நிலையில் 9 ஆம் திகதி பரிசோதனை கூடம் மேல் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது முன்கூட்டியே திட்டம் இட்டு நடைபெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே பாடசாலை நிர்வாகம் இந்த விடயத்தில் மிக காத்திரமாக செயற்படவேண்டும் என்றும்பாடசாலை இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்ககூடாது எனவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பதுடன் பாடசாலையின் பெயரையும் பாதுகாப்பது மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுபோலவே உயர்பதவிகளில் உள்ள இவ்வாறான காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன், குறித்த நபர் தொடர்பில் எடுக்கவேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை, எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் அதே வேளையில் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு கல்விவலைய பணிப்பாளர் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளை உடன் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of