முள்ளிவாய்க்கால்–அவலம்

You are currently viewing முள்ளிவாய்க்கால்–அவலம்

இலங்கை அரசாங்கம், போர் நடத்திக் கொண்டிருந்த பொழுது அங்கே வசித்த ஈழத் தமிழ்மக்களை மேனிக்பாம் (Menik form)என்ற முகாமிற்கு இடம் பெயரச் செய்தது. மேனிக்பாம் என்ற முகாம் மாணிக்கம் பண்ணை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது. இம்முகாம் வன்னி என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 12 முதல் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இம்முகாமில் கிட்டத்தட்ட 1,85,000 தமிழர்களை இடம் பெறச்செய்தது இலங்கை அரசாங்கம். அங்கே சுமார் 8761 கழிப்பறைகளையும், 339 குளியலறைகளையும் அமைத்துக்  கொடுத்தது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 நபர்கள் ஒரு கழிவறையைப் பயன்படுத்தக்கூடிய இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும் ஒரு குளியலறையில் ஒரு நாளைக்கு 100 நபர்கள் குளிக்க வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தியது.  1,85,000 மக்கள் முகாம் அமைத்து சுமார் 15 சதுர கிலோ மீட்டர் அளவில் மட்டுமே வாழவேண்டிய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர்.

மிகக்கொடுமையானது யாதெனில், மக்கள் தங்கள் உணவிற்காக அங்கே வரக்கூடிய ராணுவ வண்டிகள் தரக்கூடிய சிறு சிறு உணவுப் பொட்டலங்களை உண்டனர். அச்சமயத்திலே ஒரு உணவுப் பொட்டலம் கிடைக்க சுமார் 3 நாட்கள் மக்கள் வரிசையில் நின்று வாங்கவேண்டிய ஒரு அவலமான சூழ்நிலை ஏற்பட்டது. முகாமில் பல இளம் பெண்கள், விதவைகள், முதியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று அனைவரும் அடைபட்டுக் கிடந்தனர். அதிலே ஒரு இளம் விதவைத்தாய்  தன்னுடைய மூன்றுமாதக் குழந்தையை வைத்துக் வேதனைபடுகிறாள். அந்தத் தாய் தன்னுடைய கணவனை இழந்து தான் ஏன் வாழவேண்டும் என்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

அச்சமயத்தில் தன்னுடைய பிஞ்சுக் குழந்தைக்காகவாவது தான் வாழ வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்துடன் அந்த முகாமிலே அடைபட்டு கிடக்கிறாள். சிறு குழந்தையைப் பராமரிப்பது என்பது மிகக் கடினமான ஒரு விசயமாகும். அக்குழந்தைக்குத் தேவையான பால் பவுடர் மற்றும் இதர உணவுப் பொருள்கள் அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் அங்கே மூன்று நாளைக்கு ஒரு முறைதான் உணவு கிடைக்கிறது. தான் வைத்திருந்த பால்பவுடரை அந்தத் தாய் சிறுகச் சிறுகக் கரைத்துக் கொடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். அங்கு நடந்த சுகாதாரக்கேடினால் அவளுடைய குழந்தை பலவீனமடைந்து நோய்வாய்ப்பட்டிருந்தது. கடும் வயிற்றுப்போக்கால் குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருந்தது.

இளம் தாய் அங்கே உள்ள ராணுவ வீரர்களிடம் என்னுடைய குழந்தையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது வழி உண்டா? என்று கேட்கிறாள். அதற்கு அந்த ராணுவ வீரர்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் நாங்கள் பத்திரமாகக்  குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். இந்தத் தாய்க்கு இலங்கை ராணுவ வீரர்கள் சொல்வதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அங்கே இருந்த நபர்களிடம் விசாரிக்கத் தொடங்குகிறாள்“ என் குழந்தையை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாமா”? என்று? அப்போது குழந்தையை இலங்கை இராணுவம் கடத்தி படுகொலை செய்யப்படுவதைக் கண்டறிகிறாள்.

இதை ஆங்கிலத்தில் சொல்வார்கள் the stolen generation என்று குறிப்பிடுகிறார்கள். 1870 ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் அபர் ஜீன்ஸ் என்ற பூர்வ குடிகள் வாழ்ந்தார்கள்.பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலே தங்களுடைய சிறைக் கைதிகளை அங்கே அடைத்து வைத்திருந்தனர். அபர் ஜீன்ஸ் மக்களிடமிருந்து தங்களுடைய சிறைக்கைதிகளைப் பாதுகாப்பது ஒரு பெரும் தலைவலியாக இருந்தது. ஆகவே அப்பர் ஜீன்ஸ் இன மக்களை ஆங்கிலேயர்கள் கொள்ள திட்டமிட்டனர்.

அதற்காக அங்கே இருந்த குளங்கள், குட்டைகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் விசத்தினைக் கலந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடிகளை ஆங்கிலேயர் அழித்தனர். அந்த சமயத்தில் சிறு குழந்தைகளையும் அவர்கள் அழித்துவிடத் திட்டம் தீட்டி அதை அரங்கேற்றமும் செய்தனர். ஹிட்லர் காலத்தில், ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதக் குழந்தைகளை அவர் கொன்று குவித்தார். உலகெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் இன்று இஸ்ரேல் என்ற வலிமையான நாட்டைப் படைத்துள்ளனர் என்பதை அனைவரும் அறிவர். இலங்கை அரசாங்கம் மிகுந்த இனவெறியைக் கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் புத்த பிக்குகளின் செயல்பாட்டில் கட்டுண்டு கிடந்தது.

முள்ளிவாய்க்கால்–அவலம் 1

இலங்கை அரசாங்கம் இனவெறி பிடித்தது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1959 ஆம் ஆண்டு ரோஸ்மெட் அரண்மனையில் ஹுமாரா என்ற புத்த பிக்கு, பிரதமமந்திரி திரு. சாலமன் பண்டார நாயக்கா அவர்களைச் சந்திக்க திட்டமிடுகிறார். புத்த பிக்கு என்பதால் அவருக்கு எல்லாவித மரியாதையும் செய்யப்படுகிறது.

அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. எல்லா வரவேற்பையும் முடித்து சாலமன் பண்டார நாயக்கா அவர்கள் புத்த பிக்குகளிடம் ஆசி பெற உள்ளே வரச் சொல்கிறார். உள்ளே சென்ற புத்த பிக்கு பண்டாரநாயக்கா அவர்களைப் படுகொலை செய்கிறார். அங்கே இருந்த ராணுவ அதிகாரிகள் அவரை சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைத்து நீ ஏன் நமது  பிரதமரை கொலை செய்கிறாய்? என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த புத்த பிக்கு சொல்கிறான், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குப் பல உரிமைகளை ஏன் வழங்கியது? அவ்வாறாக உரிமைகள் வழங்கியதை தான் விரும்பவில்லை. ஆகவேதான் நான் பிரதமரைக் கொலை செய்தேன் என்று குறிப்பிடுகிறார். புத்தமதத்தையே பேணித் தழுவக்கூடிய ஒரு புத்த பிக்கு அங்கே இவ்வாறாக இனவெறிப்பிடித்து அலைகிறான் என்பதற்கு இதை விடச் சான்று ஒன்றும் தேவையில்லை.

ஈழத்திலே இருவிதமான தமிழர்களை நாம் பார்க்கலாம். பூர்வகுடிகளாக தமிழ் மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். முக்கியமாக வன்னி என்ற இடத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். வன்னி மற்றும் வன்னியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். வன்னி என்பது மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. அங்கே 12 ஆறுகள் உதாரணமாக அக்ரயான், கனகராயன் ,பரங்கி, கோடலக்கல் ஆகிய ஆறுகள் அங்கே பாய்ந்தோடி அந்த பூமியை வளம் கொழிக்கச்செய்தது.

பிரிட்டிஷ்காரர்கள் வன்னி பகுதியை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து பண்டாரவன்னி என்ற ஒரு தமிழர் பெரும் போராட்டத்தை நடத்தினார். பண்டாரவன்னி நினைவாக அங்கே ஒரு நினைவுச்சிலை உள்ளது. நினைவுச்சிலையையும் இலங்கை அரசாங்கம் இந்த போரின் போது அழித்து விட்டது. இலங்கையிலே இரண்டாம் வகைப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். அழைத்துச் செல்லப்பட்டு பல நூற்றாண்டு காலமாக அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால்–அவலம் 2

இனவெறிபிடித்த இலங்கை அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தமிழ் மக்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதில் தெளிவாக இருந்தது. அதற்காக தந்தை செல்வா அவர்கள் தலைமையில் அறவழியில் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தினர். தந்தை செல்வா அவர்கள் இறந்த பிறகு மாவீரர் பிரபாகரன் அவர்கள் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். ஆரம்பத்திலே போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது.

ஆனால் இலங்கை அரசாங்கம் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பிரபாகரன் அவர்களும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதற்காக விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். அப்பொழுது குட்டிமணி என்ற ஒரு வீரம் தழுவிய விடுதலைப்புலி இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு அங்கே சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு இலங்கை அரசாங்கம் ஆயுள்தண்டனை விதிக்கிறது. ஆயுள் தண்டனை நிறைவேற்றுவதற்கு சற்று நாட்களுக்கு முன்பாக உங்களுக்கு ஏதாவது கடைசி ஆசை உண்டா? என்று இலங்கை அரசாங்கம் குட்டிமணி அவர்களைப் பார்த்து கேட்கிறது.

அதற்கு “நான் இறந்த பின்பு என்னுடைய கண்களை எங்களுடைய அமைப்பினர் யாருக்காவது பொறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அவரிடம் கேட்கிறது. அதற்கு குட்டிமணி “நான் இறந்த பிறகு என்னுடைய இனவிடுதலையை, ஈழவிடுதலையை என்னுடைய கண்களாவது ரசித்துப் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார். இதிலிருந்து இனப்போராட்டம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என்பது தெளிவாக புலப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அவருடைய கண்களை உயிருடன் பிடுங்கி அவரைக் கொன்று விடுகிறது.

இந்த முகாமிலிருக்கும்பொழுது சில இலங்கை ஊடகத்தைச் சேர்ந்த நபர்கள் தமிழ்மக்கள் படக்கூடிய அவதிகளை உலகிற்கு எடுத்துச்சொல்ல மிகக் கடுமையாகப்போராடினர்.அதனில் முக்கியமானவர் லசந்தா என்கின்ற இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்.  இவர் சண்டேலீடர் என்ற பத்திரிக்கையில் இலங்கை அரசாங்கம் ராஜபக்சே தலைமையில் செய்த ஆயுத ஊழலை வெட்டவெளிச்சமாக வெளி உலகிற்கு காட்டினார். லசந்தா அங்கே நடந்த இனஅழிப்பை சர்வதேச அளவில் தெரியப்படுத்த மிகஅயராது பாடுபடுகிறார். இவர் ஒரு மனிதாபிமானம் மிக்கவர். சிறந்த ஊடகவியலாளர் இவருடைய முயற்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்கிறது.

முள்ளிவாய்க்கால்–அவலம் 3

இலங்கை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்ற கட்டத்திற்கு வரும் பொழுது லசந்தாவைப் படுகொலை செய்கிறது. லசந்தா ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட சிறந்த ஊடகவியளருக்கான விருதைப் பெற்றவர். இவர் இறந்தவுடன் இவரது மனைவி சோனாலி தன் கணவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்று அறிய பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுகிறார். இதைக் கண்டறிந்த இலங்கை அரசாங்கம் அவரையும் மிரட்டுகிறது.

அவர் தனது மூன்று குழந்தைகளுடன் தப்பியோடி அயல்நாட்டில் தஞ்சமடைகிறார். தமிழ்மக்களின் துயரத்திற்கு தீர்வு கிடைக்க சில இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவியுள்ளனர் என்பதும் இந்த நேரத்திலே குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளும் தன்னுடைய ஊடகப்பிரிவில் சிறந்து விளங்கினார்கள். அங்கே நடக்கக்கூடிய நிகழ்வுகளை தெள்ளத்தெளிவாக தமிழீழத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார்கள். ஊடகப்பிரிவில் முக்கியமான ஒரு நபர் இசைப்பிரியா என்ற பத்திரிக்கையாளர்.

இவர் இன அழிப்பு போரில் படுபயங்கரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இசைப்பிரியாவின் இயற்பெயர் ஷோபனா ஆகும். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேம்பனி என்ற ஊரைச் சார்ந்தவர் ஆவார். யுத்த காலத்திலே இவருடைய 6 மாத கைக்குழந்தை இறந்து விடுகிறது. இறந்த குழந்தையையும் பொருட்படுத்தாது தன் இனத்திற்காக போராட்டத்தை பத்திரிக்கையாளர் என்ற முறையில் மிகச்செவ்வனே செய்தார். இவருடைய இழப்பு விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவை சிறிது முடக்கியது என்றே சொல்லலாம்.

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலே நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் 2009 ம் ஆண்டு மே 18 ம் நாள்  அதிகாலை 6.40மணியளவில்   இலங்கை அரசாங்கத்திடம் வெள்ளைக்கொடியுடன் சென்று தாங்கள் சரணடைகிறோம் என்று தெரிவிக்கிறார்கள். அங்கே சென்ற அவர்கள் இலங்கை ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு இக்கரையிலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். கொண்டு செல்லப்பட்டசிறிது தூரத்திலே முழு ராணுவ வண்டியும் ஒரு குண்டைப் போட்டு அழித்து விடுகிறார்கள் இலங்கை அரசாங்கம். ஒருவர் வெள்ளைக்கொடி ஏந்தி சென்றால் தான்போருக்கு தயாராக வில்லை, தான் உன்னிடம் சரணடைகிறேன் என்று பொருள். சர்வதேச விதிகளின் படி அவனை ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் இனவெறி பிடித்த இலங்கை அரசாங்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொன்று குவிக்க வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தது.

மாலதி என்கின்ற ஒரு இளம் பெண் தன்னுடைய கணவன் இலங்கை அரசாங்கத்தால் கடத்தப்படுவதை அறிகிறாள். இந்த இளம்பெண் கணவர் எங்கே உள்ளார் என்பதைத் தேடி அலைகிறாள். கடைசியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறாள். அங்கே சென்று கணவனைப் பார்க்கிறாள். கதறி அழத் துடிக்கிறாள். ஆனால் அங்கே இலங்கை அரசாங்கத்தின் ராணுவப் பார்வை அவளை எதுவும் செய்யவிட முடியாமல் தடுக்கிறது. இலங்கை அரசாங்க நீதிமன்றத்திலே சென்று அவள் போராடிப் பார்க்கிறாள். இலங்கை அரசாங்கத்தின் நீதிமன்றம் என்பது அவர்களுக்கு சாதகமாகவே அமையும் என்பதால் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவ்வாறு பல பெண்கள், ஈழத்தாய்கள, இளம்பெண்கள் இந்தப் போரினால் மிகக் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                                                                                                                                                                                                            –தொடரும்

பகிர்ந்துகொள்ள