முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!

முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.

2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். 2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில்,  இஸ்லாமாபாத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி சிறப்பு கோர்ட்டில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர்.

தேசத் துரோக வழக்கில் முஷரப்புக்கு  சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியதை முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வரவேற்றிருந்தது.
ராணுவ தலைமைத் தளபதியாக, அதிபராக 40 ஆண்டுகளாக சேவையாற்றிய, தேசத்தின் பாதுகாப்புக்காக போரிட்ட முஷரப் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைத்திருக்க முடியாது. நீதிமன்றம் அவசரகதியில் தீா்ப்பு வழங்கியுள்ளது’ என்று பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷரப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய, நீதிபதிகள் சையத் மஜஹர் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி மற்றும் சவுத்ரி மசூத் ஜஹாங்கிர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, முஷரப்பிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைப்பது “அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று ஒருமனதாக அறிவித்த நீதிபதிகள், முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments