மோசடி அம்பலம் ; திருத்தணிகாசலம் மேலும் 2 வழக்குகளில் கைது!

மோசடி அம்பலம் ; திருத்தணிகாசலம் மேலும் 2 வழக்குகளில் கைது!

சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போலியாக மருந்துகள் விற்பனை செய்து ஒவ்வொரு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போலி சித்த வைத்தியரான திருத்தணிகாசலம் மீது 188- அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், 505(1)(b)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் 153 (A)- பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 6 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக காணொளி வெளியிட்டு வந்த திருத்தணிகாசலத்திடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கடந்த 13 ம் தேதி முதல் 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள்.

முதல் இரண்டு நாள் விசாரணையில் கொரோனா நோய்க்கு கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் தான் மருந்து என கூறியவர் போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் கொரோனா நோய்க்கு வாதசுர குடிநீரும் மற்றும் ஆயுள்-எக்ஸ் என்ற கேப்சல் மருந்தை, தான் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும், அந்த மருந்துதான் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் எனவும் விசாரணையில் போலி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மருந்துகளைகளையும் லண்டனில் இரண்டு நபர்களுக்கும், சுவிட்சர்லாந்தில் ஒரு நபருக்கும், ஸ்வீடனில் ஒரு நபருக்கும் கொடுத்து தன் குணப்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், காவல்துறையினர் அவர் பயன்படுத்தி வந்த மருந்தை சோதனைக்காக, சோதனைக்கூடத்திறுகு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் இவர் மன இறுக்கம்(Autism), வெண் குஷ்டம், முடக்குவாதம், புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு மருந்து அளிப்பதாக கூறி பலரிடம் லட்சககணக்கில் பணம் ஏமாற்றியதாக அடுக்கடுக்கான புகார்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு இணையத்தினுடாக வந்துள்ளது.

விசாரணையில் இது போன்ற நோய்களுக்கு மருந்து அளிப்பதாக கூறி அவர்களிடம் சில மாதங்களிலேயே லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததாகவும், இவரால் கொடுக்கப்பட்ட அந்த மருந்துகள் அனைத்துமே போலி மருந்து எனவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இவர் மீது 15(3) இந்திய மருத்துவ இலாகா சட்டம் – தன்னை மருத்துவர் என கூறி மக்களை ஏமாற்றுதலின் கீழ் ஒரு வழக்கு பதிவு, மற்றும் 420, 417(மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் திருதணிகாசலத்தை மீண்டும் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் மே 20-ம் தேதி வரையிலும் தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜூன் மாதம் 1-ம் தேதி வரையிலும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

சுகாதாரத்துறை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட வழக்கில் போலி சித்த மருத்துவர் திருதணிக்காசலம் நேற்று நீதிமன்றத்தில் பிணை மனுவை விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்றம் இன்று பிணை மனுவை தள்ளுபடி செய்தது.

பகிர்ந்துகொள்ள