யாருக்கு வாக்களிக்க வேண்டும்…?

யாருக்கு வாக்களிக்க வேண்டும்…?

யாருக்கு வாக்களிக்க வேண்டும்…?

இந்த கேள்வியே சில்லறைத்தனமாக தோன்றலாம். என்ன செய்வது, தேர்தல் பரபரப்புக்களுக்கு மத்தியிலும் இதே கேள்விக்கு விடை தேட முயலும்  பாவப்பட்ட மக்களை சிந்தனையில் நிலைபெற முடியாமல் தவிக்க வைக்கின்றன, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற திடமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக, யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் தெளிவு பெற்றுக்கொள்வது பிரதானமானது. 

ஏனெனில், “எதிரியை விட கூட இருந்தே குழி பறிப்பவனே மிகமிக ஆபத்தானவன்” என்ற கோட்பாடு எல்லையில்லாத பெறுமானத்தை கொண்டது.

யார் சொன்னாலும், அந்த மண்ணில் இருந்து வாக்களிக்கும் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்பது மிகச்சரியானதாகும். அதற்காக, கருத்துக்களையும், தெளிவூட்டல்களையும் முன்வைப்பதற்கு யாரும் தடைபோட முடியாது. யார் வந்தாலும் எதுவும் நடக்காது; நமது வேலையை பார்ப்போம் என்று நழுவுவது, “அரசியல் என்பது ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை” என்ற தத்துவத்துக்கு மாறானது என்பதும், சமூகப்பொறுப்புணர்விலிருந்து நழுவி ஓடுவது என்பதோடு, எதிர்கால சந்ததிக்கு எதை விட்டுச்செல்லப்போகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமையும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாருக்கு வாக்களித்து, வாய்ப்பை வீணடிக்கக்கூடாது என்பது கடந்த 11 வருடங்களின் பட்டறிவுகள் தெளிவாக்கியிருக்கும் விடயம். எனினும், அதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுவதில் சலிப்புக்கு இடமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுசரணையோடு, தமிழ்த்தேசிய கொள்கையின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, புலிகளின் ஆயுத மௌனிப்பின் பின், கூட்டமைப்பின் இதயத்துடிப்பாக இருந்திருக்கக்கூடிய தமிழ்த்தேசிய கொள்கையை படிப்படியாக கட்சியின் வேலைத்திட்டங்களிலிருந்து நீக்கி வந்தமையை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது.

அவ்வப்போது ஆட்சிப்பொறுப்புக்கு வந்த தென்னிலங்கை பேரினவாத அரசுகளோடு இணைக்க அரசியல் மேற்கொண்டால் மட்டுமே, தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூட்டமைப்பு விளக்கமும் சொன்னது. விரக்தியின் விளிம்பில் இருந்த மக்களும் அதை ஏற்றுக்கொண்டதாகவே வைத்துக்கொள்ளலாம். எனினும், இணைக்க அரசியல் என்றால் வெறுமனே அரசுக்கு சாதகமான விடயங்களுக்கு ஆதரவளித்தால் மட்டும் போதும் என்ற நிலையில் மட்டுமே இயங்கி வந்த  கூட்டமைப்பு, பேரம் பேசி சில காரியங்களை சாதித்துக்கொள்ளும் வாய்ப்புக்களை கையில் வைத்திருந்த கூட்டமைப்பு,

 • நீதி விசாரணைகள் ஏதுமில்லாமல் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவோ …
 • இலங்கைப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் பிரதேசங்களின் விடுவிப்புக்காகவோ …
 • இறுதி இனவழிப்பின் பின்னதாக, இலங்கைப்படையினரிடம் உயிரோடு ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவோ …
 • திட்டமிட்ட வலிந்த சிங்களக்குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிகழ்த்தப்படுவதை தடுப்பதற்கோ …
 • பெளத்தர்கள் யாருமே வசிக்காத தமிழர் பிரதேசங்களில் வலிந்த, பெளத்த மதத்தலங்களின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்தவோ …
 • தமிழர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொண்டு, புதிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவோ …
 • தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்புக்கான நீதியை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளுக்கோ …

போன்ற, மேற்கூறப்பட்ட எந்தவொரு விடயத்துக்காகவும் தமது கைவசமிருந்த பேரம்பேசும் சக்தியை பயன்படுத்த முன்வந்திருந்ததா என்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் நினைவில் மீட்டுப்பார்க்க வேண்டும்.

பேரம் பேசும் வாய்ப்பினை பயன்படுத்தி, இனவழிப்புக்கான நீதி விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டிய கூட்டமைப்பு, இலங்கையில் நடந்தது இனவழிப்பே என்பதை நிறுவுவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி தமிழர்களின் முகங்களில் கரி பூசி வரலாற்றுத்துரோகத்தை இழைத்தது மட்டுமல்லாமல், இலங்கைக்குள்ளாகவே நடைபெறக்கூடிய உள்ளக விசாரணையென்ற கண்துடைப்புக்கு ஒத்துக்கொண்டு, இனவழிப்புக்கான பொறுப்பிலிருந்து இலங்கை அரசுகளை காப்பாற்றியதோடு, தமிழர்கள்மீது இலங்கை அரசுகள் நடத்திய படுகொலைகளை இலங்கை அரசே விசாரித்துக்கொள்ளலாம் என்றும் ஒத்துக்கொண்டு, தமிழர்கள் மீதான இனவழிப்புக்கான சர்வதேச மட்டத்திலான நீதிவிசாரணைக்கான வாய்ப்புக்களை நீர்த்துப்போக வைத்ததையும் தமிழர்கள் இலகுவில் மறந்துவிட முடியுமா …?

மிக நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு நீதி காணப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் அவாவையும், ஆணையையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கை அரசுகளை காப்பாற்றுவதற்காக, இனவழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசுகளோடு கைகோர்த்து தமிழர்களுக்கெதிரான அரசியலை மேற்கொண்ட வரலாற்றுத்துரோகத்திலிருந்து கூட்டமைப்பு எக்காலத்திலும் விடுபடமுடியாது.

தமிழர்களை மீதான இனவழிப்பு விடயத்தில் ஐக்கியநாடுகள் மனிதவுரிமை மன்றத்தில் உண்மை பேசவிடாமல் திரு.சுமந்திரன் தன்னை தடுத்ததோடு, புலிகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லும்படி வற்புறுத்தினார் என திருமதி. அனந்தி சசிதரன் இப்போது சொல்வதும், 2007 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட போர்நிறுத்த முயற்சிகளுக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை என திரு.சிவாஜிலிங்கம் இப்போது சொல்வதும், தேர்தல்கால நலன்களையொட்டிய ஒப்புவிப்புக்கள் என்று இயல்பாகவே வரக்கூடிய பார்வைகளையும் தாண்டி, காலம் கடந்தாவது மறைக்கப்பட்ட விடயங்கள் வெளிவருகின்றன என்கிற அடிப்படையிலானது இவ்விடயங்களை மக்கள் கவனத்தில் எடுப்பது அவசியம்.

2009 ஆம் ஆண்டுக்குப்பின்னதான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நகர்வுப்பாதையானது, இலங்கையின் ஆளும் சக்திகளோடு இணைந்த, தென்னாசிய புவிப்பரபில் தனது ஆளுமையை தக்க வைத்துக்கொள்ள அரும்பாடுபடும் இந்தியாவின் அனுசரணையால் வகுத்து கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிப்பது போலவே கூட்டமைப்பின் நகர்வுகள் இருந்துவருவது கண்கூடு.

2010 ஆம் ஆண்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபோது, தமிழ்த்தேசியக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு விலகிப்போவதாக, திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியபோது, “இந்தியா விரும்பாத எதையும் செய்ய கூட்டமைப்பு தயாரில்லை” என, கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் சொன்னதாகட்டும்; எந்த நகர்வு என்றாலும் உடனடியாக இந்தியா சென்று ஆலோசித்துவிட்டு, அங்கு சொல்லப்படும் விதந்துரைகளின்படியே கூட்டமைப்பு நடந்துகொள்வதாகட்டும்; கடந்த உள்ளூராட்சிசபை தேர்களின்போது, தமிழர்களின் பலம் பலவீனப்படவேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக, ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன், இயக்கமில்லாமல் இருக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியோடு இணைக்கப்பட்டதாகட்டும்; இப்பொழுதுகூட, கூட்டமைப்புக்கு மாற்றீடாக “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வந்துவிடக்கூடாது என்ற குயுக்தியோடு, திரு.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியை உருவாக்கி, தமிழர்களின் தமிழ்த்தேசிய வாக்குக்களை பலவீனப்படுத்த முயல்வதாகட்டும் என, பல்வேறு நிகழ்வுகளை பார்க்கும்போது, தமிழருக்கான அரசியல் இனி கூட்டமைப்பிடம் இல்லை என்கிற தெளிவு தெளிவானது.

தமிழருக்கான தெளிவான அரசியலை முன்னெடுப்பதை கடந்த 11 ஆண்டுகளாக தவறவிட்ட கூட்டமைப்பு, இன்னொரு சந்தர்ப்பத்துக்காக மக்கள் முன் எந்த நம்பிக்கையில் மண்டியிட்டு வாக்குப்பிச்சை கேட்கிறது என்பது போக, கூட்டமைப்புக்குள் இருக்கும் குழுநிலை அரசியல், பகிரங்க மோதல்களாக வெளிப்படுகின்றன.

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரான திரு. சுமந்திரனின் பேச்சுக்களை பெரிதுபடுத்த தேவையில்லை என, கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் சொல்கிறார். அப்படியாயின் கட்சியின் தலைவரே, கட்சியின் பேச்சாளரை பொருட்படுத்தவில்லையா ..? 

திரு. சுமந்திரனைப்பற்றி, கூட்டமைப்பின் இன்னொரு அங்கத்தவரான திரு. சிறிதரன், பொதுவெளியில் எதிர்மறை விமர்சனம் செய்கிறார். பின்னர் அதே சுமந்திரனோடு தேர்தல் பரப்புரை செய்கிறார். ஆக, இருவருக்குமிடையில் ஆரோக்கியமான அரசியல் உறவு இல்லையா ..?

தனது தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் திரு. சுமந்திரன் அத்துமீறி நுழைகிறார் என்று, திருமதி. சசிகலா ரவிராஜ் குற்றம் சாட்டுகிறார். அப்படியாயின், கூட்டமைப்புக்குள் தன்னை முன்னிலைப்படுத்துவதோடு, ஏனைய வேட்ப்பாளர்களை மட்டம் தட்டும் முயற்சிகளை திரு. சுமந்திரன் மேற்கொள்கிறாரா ..?

தேர்தல்கள் நிறைவடைந்ததும் திரு. சுமந்திரன் மீதும், திரு. சிறிதரன் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென, கூட்டமைப்பை ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக்கட்சியின் தலைவரான திரு. மாவை சேனாதிராஜா சொல்கிறார். அப்படியாயின், திரு. சுமந்திரனும், திரு. சிறிதரனும் கூட்டமைப்பின் விதிமுறைகளையும், கொள்கைகளையும் மீறும் விதத்தில் செயற்படுகிறார்கள் எனக்கொள்ளலாமா ..?

வாக்களிப்புக்கு முன்னதாகவே தமது குழுநிலை அரசியலையும், கட்சிக்குள் நடக்கின்ற அதிகாரப்போட்டிகளையும் பகிரங்கமாகவே வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் கட்டமைப்பில்லாத கூட்டமைப்பு, ஒரு வேளை மீண்டும் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற தகைமைக்கு வந்தால் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு.

இவை தவிரவும், மிக முக்கியமான புள்ளியொன்றிலும் வாக்காளர்கள் கவனம் செலுத்துவது முக்கியமானது. 

ஒற்றையாட்சி முறைமையொன்றுக்குள் தமிழருக்கான தீர்வு என்பதில், தென்னிலங்கை ஆளும் சக்திகளோடு இணங்கிப்போகும் கூட்டமைப்பின் நிலைப்பாடு தெளிவாக கூட்டமைப்பால் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஒற்றையாட்சி முறைமை என்பது, இலங்கைத்தீவானது முற்று முழுதான சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த நாட்டின் சட்ட வரைபுகளுக்கு உட்பட்டே எதுவும் நடைபெறலாம் என்பதையே அடிப்படையாக கொண்டிருப்பதால், ஒற்றையாட்சி முறைமை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழர்கள் இறைமையுள்ள, தனித்துவமான தேசிய இனம்; இலங்கைத்தீவுக்குள் சகல உரிமைகளோடும், தன்னாட்சி உரிமையோடும் வாழ்வதற்கு சகல உரித்தும் உடையவர்கள் என்ற கோட்பாடுகள் சட்டரீதியாக குழிதோண்டி புதைக்கப்படும் என்பதை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது.

தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு முன்னதாக, ஒற்றையாட்சி முறைமை இலங்கையின் சட்டவரைபில் இடம்பெறாமல் தடுப்பதற்கான போராட்டமே இப்போது தமிழர்களின் முன்னாலுள்ள மிகமுக்கியமான விடயமாகும்.

எதிர்வரும் தேர்தலில், இனவாத சிந்தனைகள் மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்ட  தென்னிலங்கை மக்களின்  பெரும்பான்மை ஆதரவுடன் பேரினவாத சக்திகள் நாடாளுமன்றத்தில் நுழையும் நிலைமையில், கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமலேயே ஒற்றையாட்சி முறைமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்ற கருத்து இருந்தாலும், இதில் உள்ள முக்கியமான வேறுபாட்டை தமிழர்களை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பேரினவாத சக்திகள், கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் ஒற்றையாட்சி முறைமையை நிறைவேற்றினால், அதில் தமிழர் தரப்புக்கள் ஆதரவு இல்லாமலேயே ஒருதலைப்பட்சமாக நிறைவேறுவதாக அமைவதோடு, தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுவதற்கான வழிவகைகள் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படாது.

எனினும், கூட்டமைப்பின் ஆதரவோடு ஒற்றையாட்சி முறைமை நிறைவேற்றப்படுமானால், அதில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பும் இருக்கிறது என்ற செய்தியை சர்வதேச மட்டத்தில் நிரந்தரமாக பதிந்து வைத்துவிடும் என்பதோடு, தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான சகல வழிகளும் அடைக்கப்படுவதற்கான பேராபத்தும் இருப்பதை தமிழர்கள் மிக நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த பேராபத்திலிருந்து தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், கூட்டமைப்பு ஆதிரிக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தமிழர்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள நிலையில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற நிலையில் இருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைமைக்கு தங்களின் பூரண ஆதரவை வழங்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பேரினவாத சக்திகளோடு கைகோர்த்து செயற்படுவோமென பகிரங்கமாகவே தெரிவித்திருக்கும் நிலையில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற இடத்திலிருந்து கூட்டமைப்பு அகற்றப்பட வேண்டிய வரலாற்றுக்கட்டாயம் தமிழர்களின் கைகளிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுக்கடமையின் தாற்பரியத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு தமிழர்கள் தமது வாக்கு என்னும் சக்திமிக்க ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும்.

பேரினவாத சக்திகளும், அவற்றுக்கு துணைநிற்கும் சக்திகளினதும் விருப்ப வரையறைகளுக்குட்பட்டு, வகுத்துக்கொடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய நீக்க அரசியலையும், தமிழர் விரோத அரசியலையும் முன்னெடுத்ததோடு மட்டுமல்லாமல், மக்களை மறந்து தமது சொந்த நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு செயற்பட்டதன் விளைவு, தமிழர்களின் பேரம்பேசும் சக்தி பேரினவாத சக்திகளிடம் தாரை வார்த்துக்கொடுக்கப்பட்டு, பேரினவாதத்தின் கரங்கள் பலப்படுத்தப்பட்டது  மாத்திரமே!

எவ்விதத்திலும் இனிமேலும் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற தகைமைக்கு பொருந்தாத தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதற்கான தகுதியையும் இழந்துவிட்டிருக்கும் நிலையில், தமது அடுத்த தெரிவாக யார் இருக்கிறார்கள் என்பதை முடிவு செய்வதில், “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியா அல்லது, தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியா என்பதில் தமிழர்கள் அதிகம் சிந்திக்க தேவையில்லை. 

முன்னாள் வடமாகாண முதல்வர் திரு. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியானது, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அச்சொட்டான பிம்பமே என்பது, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய நலன்கள் சார்ந்த அரசியல் நகர்வுகளோடு பயணிப்பவர் என அறியப்பட்ட திரு. விக்னேஸ்வரன், தமிழர் பேரவையின் உருவாக்கம் நிகழ்ந்த காலப்பகுதியில் நிறைவு செய்யப்பட்ட உத்தேச தீர்வுத்திட்ட யோசனையொன்றில், தென்னிலங்கை அரசுகளோடு இணைக்க அரசியலை நடத்தும் கூட்டமைப்பின் சித்தாந்தங்களுக்கு பங்கமில்லாமல், அல்லது கூட்டமைப்பை சலிப்புக்குள்ளாக்காமல் நகர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தையே பிரதானமாக வைத்திருந்தார் என்பதை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதார பூர்வமாக பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில், திரு. விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கிய கூட்டமைப்பே, பின்னாளில் அவரை பதவியிலிருந்து தூக்கியடிக்க முற்பட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்ற மாண்பை காப்பதற்காக, மக்களின் பேராதரவோடும், இளைஞர்களின் பேரெழுச்சியோடும், பிரதானமாக, “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அயராத பணிகளின் பின்னணியிலும் உருவானதே “தமிழ் மக்கள் பேரவை”.

கூட்டமைப்பின் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மிகப்பெரியதொரு அரசியல் இகழ்ச்சியை சந்திப்பதிலிருந்து திரு. விக்னேஸ்வரனை அரணாக நின்று பாதுகாத்தது “தமிழ் மக்கள் பேரவை” யாக இருந்தாலும், “தமிழ் மக்கள் பேரவை” புதியதொரு சக்தியாக செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் ஆராயப்பட்ட காலப்பகுதியில், திரு. விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கூட்டமைப்பின் பிம்பமாகவே இருக்க விரும்புகிறார் என்ற பட்டறிவு உண்மை வெளிவந்திருந்தது.

தவிரவும், சிதறிக்கிடக்கும் தமிழர் அரசியல் சக்திகளை காலத்தின் தேவை கருதி ஒன்றிணைக்க முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி தோற்றுப்போவதற்கும் திரு. விக்னேஸ்வரன் ஒரு காரணியாக இருந்திருக்கிறார் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் இறுதி செய்யப்பட்ட கூட்டு இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில், இலங்கையில் தமிழர்களின் இருப்பை நிரந்தரமாக கேள்விக்குறியாக்கிவிடக்கூடிய “ஒற்றையாட்சி” முறைமையை தமிழ்த்தரப்புக்கள் ஏகமனதாக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென, “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது, அதை ஒத்துக்கொள்ள மறுத்தவர்கள் கூட்டமைப்பும், திரு. விக்னேஸ்வரனுமே! 

இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களின் அந்த முயற்சி தோற்றுப்போனதும், தமிழர்களை தென்னிலங்கை பேரினவாத அரசுகளிடம் நிரந்தர அடிமைகளாக்கிவிடும் பேராபத்து நிறைந்த ஒற்றையாட்சி முறைமையை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துவிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதிலிருந்து வெளியேறியதும் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

வடமாகாண முதலமைச்சராக இருந்தபோது வாமாகாணசபையிலே ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட, இலங்கையில் நடைபெற்றது இனவழிப்பே என்ற தீர்மானத்தை சர்வதேசத்தின் முன்னாலும், ஐ.நா. மனிதவுரிமை சபையிலும் சமர்ப்பித்து, வடமாகாண மக்களின் முதலமைச்சராக, பிரதிநிதியாக முன்னின்று, இலங்கையில் நடந்தது இனவழிப்பே என்பதை பதிவு செய்திருக்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து ஓடி ஒளிந்து கொண்ட திரு. விக்னேஸ்வரன் தமிழருக்கான அரசியலில் உளசுத்தியோடு நேர்மையாக செயற்படுவார் என்ற எந்த உத்தரவாதமும்  இல்லை.

தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், நாடாளுமன்றத்தில் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவோமென திரு. விக்னேஸ்வரன் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். கூட்டமைப்புக்கு மாற்று தாமே என்ற அறைகூவலோடு தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியை உருவாக்கிய திரு. விக்னேஸ்வரன், எந்த கூட்டமைப்பை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாரோ, அதே கூட்டமைப்போடு தேர்தலின் பின் இணைத்து செயற்படவிருப்பதாக தெரிவிப்பதை எந்த அடிப்படையில் அவர் நியாயப்படுத்துவாரோ தெரியவில்லை.

ஆக, தமிழ்மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றிப்போயிருக்கும் தமிழ்த்தேசிய கொள்கைகளை மலினப்படுத்தி, தமிழ்த்தேசிய நீக்க அரசியலையும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டு அரசியலையும் முன்னெடுக்க வேண்டுமென வகுத்துக்கொடுக்கப்பட்ட, தமிழர் விரோத அரசியலை மேற்கொண்டுவரும் கூட்டமைப்பின் இயங்கு வரைமுறைகளுக்குள்ளாகவே திரு. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியும் இயங்குவதை தமிழர்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். 

திரு. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியும்  தமிழர்களுக்கானதல்ல என்ற புரிதலும் தெரிவாகியுள்ள நிலையில், தமிழர்களின் முன்னால் இப்போதுள்ள தவிர்க்க முடியாத சக்தியாக “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே உள்ளது.

ஒரு அரசியல் கட்சிக்கு முதுகெலும்பாக இருப்பது, மக்களுக்கான அரசியல் தொடர்பான அக்கட்சியின் அசைக்க முடியாத பிரதான கொள்கையாகும். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை உறுதியும், கொள்கையின் பாலான பிறழ்வில்லாத பயணமும், கொள்கைகளை விற்று யாரிடமும் விலை போகாத பரிசுத்தமான அரசியல் பயணமும் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு வருவதையும், இதனாலேயே, மக்களின் ஆதரவும் அக்கட்சிக்கு பெருகி வருவதையும் மறுதலிக்க காரணங்களேதும் இல்லை.

புலிகளின் அனுசரணையோடு உருவாக்கம் பெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, 2009 இல், நிகழ்த்தி முடிக்கப்பட்ட மாபெரும் இனவழிப்பின் பின், புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின், தனது  கொள்கைகளிலிருந்தும், தேர்தல் உறுதிமொழிகளிலிருந்தும் நழுவிப்போய், சோரம்போகும் அரசியல் சேற்றில் கால்வைத்தபோது, அதனை எதிர்த்து தட்டிக்கேட்ட, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச்சம்பவமே, இன்றைய “சைக்கிள் பொடியள்” என்ற, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்னும் திடமான கட்டமைப்பைக்கொண்ட அரசியல் இயக்கத்தின் தோற்றுவாய்க்கு வழிவகுத்ததும், 2010 ஆம் ஆண்டிலிருந்து, “தமிழ்த்தேசியம்” என்ற கொள்கை உறுதியிலிருந்து இம்மியளவும் பிறழாமல் தமிழர் நலன் ஒன்றே குறிக்கோளாக வகுத்துக்கொண்டு இன்றுவரை தமது பயணத்தை அவ்வியக்கம் தொடர்வதும் வரலாறாக இருக்கின்றன.

பேரம் பேசல்களும், விட்டுக்கொடுப்புக்களுக்கான வேண்டுதல்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் அவ்வப்போது குறி வைப்பதுபோல் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறினாலும், தமிழ்த்தேசிய கொள்கை; தமிழருக்கான சுயாட்சி; தமிழருக்கான இறைமை; இலங்கையின் தேசிய இனமாக தமிழர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்; தமிழர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள்; தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான விடுதலை; தமிழர்களின் பாரம்பரிய, பூர்வீக நிலங்களுக்கான பாதுகாப்பு; இனவழிப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி; இனவழிப்புக்கான சர்வதேச நீதிவிசாரணை முதலான விடயங்களில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடம் கொடுக்காமல் கடந்த 10 வருடங்களாக தூய அரசியல் நோக்கங்களோடு பயணித்து வரும் “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே தமிழர்களுக்கான அரசியலாக இருக்க முடியும்.

குறிப்பாக, ஒன்றுபட்ட இலங்கைத்தீவுக்குள்  காணப்படக்கூடிய, தமிழருக்கான எந்த தீர்வாக இருந்தாலும், சர்வதேச அனுசரணையுடனேயே அணுகப்பட வேண்டும் என்ற கொள்கையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுதியாகவே உள்ளது. ஏனெனில், இலங்கைத்தீவின் சட்டவரைபுகளுக்கு உட்பட்டதாக, இலங்கையின் அதிகார சக்திகளால் எவ்விதமான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான ஆயுள் மிகச்சொற்பமானது என்பது, அவையெல்லாம் நம்பிக்கைத்தன்மைக்கு அப்பாற்பட்டது என்பதும், தந்தை செல்வா காலத்திலிருந்தே தமிழர்கள் கண்கூடாக பார்த்து வருவதையும், நடைமுறையிலிருக்கும் இலங்கையின் இனவாத அரசியலமைப்பு, தமிழருக்கான நியாயமான நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கு இடம் கொடுக்காது என்பதையும் தமிழர்கள் மறந்துவிடலாகாது. 

எனவே, கடந்தகால பட்டறிவுகள், ஏமாற்றங்கள், காலாவதியாகிப்போன உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றை தவறாமல் சீர்தூக்கிப்பார்ப்பதோடு மட்டும்  நின்றுவிடாமல், 2009 இனவழிப்பின் பின்னதான, கடந்துவந்த காலங்களின் தமிழர்கள் அரசியல் ரீதியாக தொடர் ஏமாற்றங்களுக்குள் தள்ளப்பட்டதைப்போலவே பின்வரும் 5 வருடங்களும் அவல நிலைக்குள்ளாகவே தமிழர்களை அந்தரிக்க வேண்டுமா என்பதையும், தமிழர்களின் பூர்வீக நிலப்பறிப்புக்கள்; வலிந்த மதத்திணிப்புக்கள்; தமிழர்களின் பிரதேசங்களை பெளத்த மயமாக்குதல்; இராணுவ ஆக்கிரமிப்பு; தமிழர்களின் கடல்வளங்களும், ஏனைய கனிம வளங்களும் பறிக்கப்படுதல் உள்ளிட்ட, தமிழர்களின் முடிவில்லாத வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்கதையாகவே தொடர்வதை,

இன்னொருமுறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை நாடாளுமன்றம் செல்ல வைத்து வேடிக்கை பார்க்க வைக்க வேண்டுமா, அல்லது, 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மாற்று எனச்சொல்லி, கூட்டமைப்பின் பிம்பமாக, “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அதீத வளர்ச்சியை சிதறடிக்கும் நோக்கில் செயற்திட்டம் வகுத்துக்கொடுக்கப்பட்டு கயமையுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தேசியக்கூட்டணிக்கு வாக்களித்து, மீண்டும் இருண்ட காலத்துக்குள்ளாகவே பயணிக்க வேண்டுமா, அல்லது,

கொள்கையின்பால் இம்மியளவும் பிசகாமல் தமிழருக்கான தமிழ்த்தேசிய அரசியலே உயிர் மூச்சாக கொண்டு களத்தில் நிற்கும் “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்தி நாடாளுமன்றம் செல்ல வைத்து, தமிழருக்கான நிரந்தரத்தீர்வுக்கான பாதையில் சர்வதேச அனுசரணையோடு பயணிக்க வேண்டுமா என்பதை தமது வாக்குக்களால் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டிய வரலாற்று கடமை தமிழர்களின் முன்னால் இருக்கிறது.

தேர்தல் பரப்புரைகள் தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகள், நிறைவேற்றப்படக்கூடியனவா இல்லையா என்பதை, அறிவார்ந்த தமிழர் சமூகம் சீதூக்கி பார்த்து, புத்தி சாதுரியத்தோடு தமது அரசியல் நகர்வை மேற்கொண்டு, தமிழர்களின் இருப்பையும், தமிழ்த்தேசியக்கொள்கையை முன்னிறுத்தி, தமிழருக்கான உறுதியான, விலைபோகாத, விட்டுக்கொடுப்புக்களில்லாத அரசியலை யாரால் மேற்கொள்ள முடியுமென்பதை தமிழர்கள் தீர்க்கமாக சிந்தித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், அவாவுமே புலம்பெயர் தேசங்களிலிருந்து எழக்கூடிய அறைகூவல்களாக இருக்க முடியும். 

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிதர்சனமான உண்மையை சொல்லிவைக்க முடியுமே தவிர, இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென யாரும் யாருக்கும் இடித்துரைக்க முடியாது.      

கடந்த 10 ஆண்டுகளைப்போல், இம்மியளவும் முன்னேற்றகரமான நகர்வுகள் இல்லாமலும், அவலங்களுக்கு விடிவுகளோ, தீர்வுகளோ இல்லாமலேயே காலங்கள் அவலமாக உருண்டோடியதைப்போலவே இனிவரும் 5 ஆண்டுகளும் இருக்க வேண்டுமா அல்லது, தமிழருக்கான அரசியல் என ஒன்று உண்டு எனவும், தமிழர்கள், இலங்கை அரசியலில் நிர்ணயிக்கும் சக்தியாக வரவேண்டுமேயொழிய, இணங்கிப்போகும் அடிமை அரசியல் இனியும் வேண்டாம் என்கிற திடமான நிலைக்கு தமிழர்கள் வரவேண்டுமா என்பது வாக்களிக்கப்போகும் தமிழர்களின் கையிலேயே தங்கியுள்ளது.

ஏமாற்று அரசியலை நம்பி இருண்ட காலத்துக்குள்ளாகவே பயணித்தது போதும், நாமும் இலங்கைத்தீவின் தனித்துவமான, சகல உரிமைகளுமுள்ள இனமே என்ற இனமான உணர்வோடு பயணிப்பதே தமிழருக்கான அரசியல் என்கிற தெளிவு வாக்களிக்கப்போகும் தமிழர்களுக்கு வருமெனில், அவர்களது நிச்சயமான, உறுதியான, நம்பிக்கையான தெரிவாக “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும்.

 • தமிழர்களுடைய ஒற்றுமை வெளிப்படுத்தப்பட வேண்டும் …
 • தமிழ்த்தேசியத்துக்கான ஆணையும், தமிழ்த்தேசியமும் நிறுவப்படவேண்டும் …
 • இராணுவமயமாக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய பூர்வீக, வரலாற்று நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் ..
 • தமிழர்களுடைய நிலங்களை அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ..
 • திட்டமிட்ட வலிந்த சிங்களக்குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிகழ்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் …
 • பெளத்தர்கள் யாருமே வசிக்காத தமிழர் பிரதேசங்களில் வலிந்த, பெளத்த மதத்தலங்களின் கட்டுமானம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் …
 • “ஒற்றையாட்சி” முறைமைக்கான முன்னெடுப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் …
 • நீதி விசாரணைகள் ஏதுமில்லாமல் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் …
 • இறுதி இனவழிப்பின் பின்னதாக, இலங்கைப்படையினரிடம் உயிரோடு ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் …
 • தமிழர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொண்டு, புதிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் …
 • பேரினவாதத்தின் அடிப்படியில் அமைக்கப்பட்ட இலங்கை அரசமைப்பை விடுத்து, சர்வதேசத்தின் மேற்பார்வையுடன், தமிழர்களின் இறைமையும், சுயநிர்ணய உரிமையும், தமிழர் தேசமும் அங்கீகரிக்கப்படக்கூடியதான, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான தமிழருக்கான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் …
 • தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்புக்கான நீதியை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் …

உள்ளிட்ட நீண்ட, நெடிய, பாரிய பணிகள் தமிழர்கள் முன்னால் பரந்து விரிந்திருக்கின்றன. அத்தனை பணிகளையும், உளசுத்தியோடும், கொள்கை விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமலும், விலை போகாமலும், உறுதியோடு முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே நம்பிக்கையாளர்கள் “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே என்பதை தமிழர்களை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதகுலமே தலைகுனியும் விதத்தில் தமிழர்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கான சர்வதேச மட்டத்திலான நீதி விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்கு, தமிழர்களின் பிரதிநிதிகள் எனப்படுபவர்களின் அயராத உழைப்பும், சர்வதேசத்தோடு இணைந்த செயற்திட்டமும் அவசியம்.

எனினும், கடந்த 11 ஆண்டுகளாக தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற இடத்திலிருக்கும் கூட்டமைப்பு இனவழிப்பு என்ற சொற்பதத்தையே ஏற்றுக்கொள்ளாமல், இனவழிப்பு செய்தவர்களையே பாதுகாத்து வந்திருக்கிறது. இனியும் கூட்டமைப்புக்கு வாக்களித்து, சர்வதேச மட்டத்திலான நீதிவிசாரணைக்கான வாய்ப்பையே இல்லாதொழிக்கும் வரலாற்றுத்தவறை மேற்கொள்ளாமல், இனவழிப்புக்கான சர்வதேச விசாரணையையே எப்போதும் வலியுறுத்தி வரும் “சைக்கிள் பொடியள்” என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமது அரசியல் பிரதிநிதிகளாக தேர்வு செய்வதே தமிழர்களின் கைகளிலிருக்கும் இன்றைய தீர்க்கமான முடிவாக இருக்க வேண்டும்.

வாக்களிக்கும் தமிழர்கள் எந்த முடிவை எடுத்தாலும், எதிர்காலம் இருள்வதும், ஒளிர்வதும் அவர்களையே முற்றிலும் சாரும். எதிர்காலம் எதை கொடுக்கிறதோ அதையே அடுத்து வரும் 5 வருடங்களுக்கு தமிழர்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் காலடியில் குழியை பறித்து தமிழர்களை காவு கொள்கிறதோ அல்லது, “சைக்கிள் பொடியள்” என்கிற  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வழிகாட்டலில் உரிமைக்கான போராட்டத்தை தொடர்வதோ, எதுவானாலும் அனைத்தும் வாக்களிக்கப்போகும் உங்கள் கைகளில் ….!

குகன் யோகராஜா 

தமிழ் முரசம் வானொலி 

ஒஸ்லோ, நோர்வே 

01.08.2020

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments