வலி. வடக்கு நிலமீட்புப் போராட்டம் 9-வது வாரமாகத் தீவிரம்!

You are currently viewing வலி. வடக்கு நிலமீட்புப் போராட்டம் 9-வது வாரமாகத் தீவிரம்!
வலி. வடக்கு நிலமீட்புப் போராட்டம் 9-வது வாரமாகத் தீவிரம்: கறுப்புக் கொடிகளுடன் மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 9-வது வாரமாகவும் தொடர்ந்தது.
இன்றைய போராட்டம் வழக்கமான வடிவத்திலிருந்து மாற்றப்பட்டு கவனயீர்ப்பு ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டது.
பலாலி புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் திரண்ட பொதுமக்கள், கறுப்பு மேலங்கி அணிந்தும் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும் பலாலி சந்தி நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
 பலாலி சந்திக்கு அருகிலுள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிக்கு முன்பாகத் திரண்ட மக்கள், கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பல மணிநேரம் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பலாலி சந்திப் பகுதிக்கு நகர்ந்த போராட்டக்காரர்கள், மதியம் வரையில் அங்கேயே தங்கியிருந்து தமது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நீண்டகாலமாகத் தொடரும் இக்காணி அபகரிப்புப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், தமது சொந்த நிலங்களில் மீளக் குடியேறும் வரை இப்போராட்டம் ஓயாது எனவும் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply