வாய்களை மூடியதால் காயங்களை சுமந்தோம்!

வாய்களை மூடியதால் காயங்களை சுமந்தோம்!

காயங்களில் புளுமேய்ந்து

வாய்களில் குரல் இழந்து

பாய்களில் படுக்கமுடியாது

சேய்கள் திணநியழுதபோது

நாய்கள் கூடவரவில்லை

உணவுக்கும் மருந்துக்கும்

தடை விதித்து

கனவுகளையும் நினைவுகளையும்

கந்தகத்தால் குதறும்போது

எந்தப்பயலும் எட்டிப்பார்க்கவில்லை

இறந்த தாயின் முலையில்

பிறந்த பிள்ளை

பால்தேடி அழுகையில்

எந்த பாவியருக்கும்

மனிதநேயம்

மனதை நெருடவில்லை

வெள்ளைப்புறாக்கள்

இரும்புக்கழுகுகளால்

கொத்திக் கொத்தி

புனர்கையில்

எந்த வெள்ளையனையும்

வலிகள் வதைக்கவில்லை

தூரத்தில் இருப்பதால்

துயரம் தெரியவில்லை

என்பது நிஜம்தான்

ஆனால்

நாங்கள் பக்கத்தில்

இருந்துதானே குளறினோம்

உங்கள் முற்றத்தில்

நின்றுதானே கதறினோம்

ஏத்தனை எத்தனைபேர்

தெருத்தெருவாக

உறக்கமின்றி

ஒப்பாரிவைத்தோம்

கேக்கவில்லையே

மனிதநேயமும் மதமும்

அரசியல் இருப்புக்காய்

அருவருப்பாய் நின்றதுவே

இப்போது மட்டுமென்ன

காயங்களை கிளறாதீர்

சவால்களை நல்லிணக்கம்

நலப்படுத்தும் என்கிறீர்

நல்லிணக்கவாய்கள்

மனிதநலபலியெடுக்கும்வேளை

எங்கேபோனது

ஒன்றா இரண்டா இழந்தோம்

ஒரு நொடியில் மறந்துபோக…

தூயவன்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments