தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதன்கிழமை இரவு (24.06.2026) அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அதனைத் தொடர்ந்து சில வினாடிகளில் 7.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகின.
இந்த பேரிடரில் இதுவரை குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது என, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது (Reuters).
தலைநகர் “கராகஸ்” மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையம் சேதமடைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அரசு நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல நாடுகள் வெனிசுலாவுக்கு மனிதாபிமான உதவி மற்றும் மீட்புப் படைகளை அனுப்ப முன்வந்துள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பிரேசில் வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்தடுத்த அதிர்வுகள் (aftershocks) ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
25.06.2026






