வெள்ளைமாளிகை முன் அடிதடி! தடைகளை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள்!!

வெள்ளைமாளிகை முன் அடிதடி! தடைகளை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள்!!

அமெரிக்காவெங்கும் பரவலாக நடைபெறும் இன / நிறவாதத்துக்கெதிரான போராட்டங்களின் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபரின் வெள்ளிமாளிகை முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி, அங்கும் காவல் கடமையில் நின்றிருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்புப்படைகள்மீது கற்களால் தாக்கியதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து இரகசியமாக வெளியேற்றப்பட்டு, நிலக்கீழ் பதுங்கறை ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருவதாக முன்னதாக “AP” செய்திநிறுவனம் தெரிவித்திருந்தது.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, வெள்ளைமாளிகை முன்பு போடப்பட்டிருந்த தடுப்புக்களை உடைத்தெறிந்த போராட்டக்காரர்களுக்கும், அங்கு காவலுக்கு நின்றிருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்புப்படைகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிகிறது.

இதேவேளை, அமெரிக்க அதிபரை பாதுகாப்பது மட்டுமே கடமையாக கொண்டிருக்கும் அமெரிக்க தேசிய இரகசிய படைப்பிரிவும் போராட்டக்காரர்களோடு மோதல்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படும் அதே வேளையில், வெள்ளைமாளிகையை நெருங்கிய போராட்டக்காரர்கள்மீது “மிளகு தெளிப்பான் / Pepper Spray” பாவிக்கப்பட்டதில், போராட்டக்காரர்கள் வெள்ளைமாளிகையை நெருங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 நாட்களாக அமெரிக்காவெங்கும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு காரணமான “George Floyd” என்ற கறுப்பினத்தவரின் படுகொலைக்கு காரணமான அமெரிக்க வெள்ளையின காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலும், குறித்த கறுப்பினத்தவரின் மரணத்துக்கான உறுதி செய்யப்பட்ட காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றாலும், குறித்த கறுப்பினத்தவருக்கு ஏற்க்கெனவே இருந்த இதயநோயால் அவர் இறந்திருக்கலாமென தற்காலிக உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பின மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு, வெள்ளையின அமெரிக்கர்கள், காவல்துறை ஊழியர்கள், அரசியலாளர்கள் என பல்தரப்பட்டவர்களும் தார்மீக ஆதரவு வழங்கிவருவதோடு, அமெரிக்க செனட்டரான “Kamala Harris” என்பவரும் “Washington D.C” இல் நடந்த அமைதிவழியிலான ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, நியூயோர்க் நகர முதல்வரின் மகள் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“Indiana” மாநிலத்தில் நடந்த போராட்டங்களின்போது மூவர்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நகர மையங்களை விட்டு மக்கள் வெளியேறவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“Missouri” இல், போராட்டங்களின் தீவிரத்தன்மை காரணமாக அங்குள்ள காவல்துறை நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு அவசரகாலநிலையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

“Los Angeles” நகரத்தில் பல காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல காவல்துறையினரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் போராட்டக்காரர்கள்மீது இறப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தியதாகவும் செய்திநிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமைதியான முறையில் ஆரம்பமான போராட்டங்கள், காவல்துறை அதனை தடுக்க முயன்றபோது கலவரமாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“Brooklyn” இலை, போராட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வாகனத்தை செலுத்தியதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளி இணைப்பு:

செய்தி மேம்பாடு:

காவல்துறையினரின் அடாவடித்தனத்தால் கொல்லப்பட்ட “George Floyd” என்ற கறுப்பினத்தவர், காவல்துறை அதிகாரி அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இதயத்துடிப்பு அடங்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments