அடக்குமுறைக்கு எதிராக சிறிலங்காவில் நாடாளாவிய போராட்டம்!

You are currently viewing அடக்குமுறைக்கு எதிராக சிறிலங்காவில் நாடாளாவிய போராட்டம்!

ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்: விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்’ என வலியுறுத்தி தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் மத்திய நிலையமும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் 09 ஆம் திகதி செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புப்போராட்டங்களையும் அரச விரோதப்பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி கொழும்பில் பிற்பகல் 3 மணியளவில் விகாரமகாதேவி பூங்காவிற்கு அண்மையிலிருந்து ஆரம்பமாகவுள்ள மக்கள் பேரணி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவிருப்பதுடன், அங்கு ‘மக்கள் உறுமொழி’யும் வெளியிடப்படவுள்ளது. 


சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சிப்போராட்டங்களின் விளைவாக அவர் பதவி விலகியதுடன் அதனைத்தொடர்ந்து பதில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இருப்பினும் அதன்பின்னர் காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் மீதும் போராட்டக்காரர்களின் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள், அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை, போராட்டத்தை ஒழுங்குசெய்த முன்னரங்கப்போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை, தடுத்துவைக்கப்பட்டமை உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் கையாளப்பட்டுவரும் வன்முறை வடிவிலான அடக்குமுறை உத்திகள் பல்வேறு தரப்பினரதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளடக்கியிருக்கின்றது.


இவ்வாறானதொரு பின்னணியில் தாக்குதல்களுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்குத் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அரசாங்கம் அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரும் அதேவேளை, பாராளுமன்றத்தையும் வெகுவிரைவில் கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் மத்திய நிலையமும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப்போராட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. 


அதன்படி தலைநகர் கொழும்பிற்கு அப்பால் அநுராதபுரத்தில் மு.ப 11.30 மணிக்கும் தன்கொட்டுவவில் 12.30 மணிக்கும் மாரவில, கலவான, வென்னப்புவ, புத்தளம், ஹோமாகம மற்றும் கெக்கிராவையில் பி.ப 2 மணிக்கும் தம்புள்ளை, மல்லத்தாவல, மாத்தளை மற்றும் பலாங்கொடையில் பி.ப 2.30 மணிக்கும் நாவலப்பிட்டி, கேகாலை, செவனகல, பேராதனை மற்றும் மதவாச்சியில் பி.ப 3 மணிக்கும் ஹுங்கமவில் பி.ப 3.30 மணிக்கும் ஹொரணை மற்றும் மஹியங்கனையில் மாலை 4 மணிக்கும் மஹரகமவில் மாலை 4.30 மணிக்கும் கட்டுப்பெத்தை மற்றும் பிலியந்தலை மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அண்மையில் மாலை 5 மணிக்கும் மேற்படி எதிர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


எனவே கொழும்பில் விகாரமகாதேவி பூங்கா தொடக்கம் சுதந்திர சதுக்கம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான பேரணியில் பங்கேற்க இயலாதவர்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அண்மைய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஆகவே இன்றைய தினம் பிற்பகல் வேளையில் கொழும்பிலும் கொழும்பை அண்மித்த சில பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை ராஜபக்ஷாக்களின் உதவியுடன் அவர்களது தேவையின் நிமித்தம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதனாலேயே ‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்’ என்ற தொனிப்பொருளில் தாம் இந்த எதிர்ப்புப்போராட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்திருப்பதாகக் கேசரியிடம் தெரிவித்த ஒன்றிணைந்த மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க, இதனூடாக சட்டவிரோதமான முறையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதுடன் மக்களாட்சிக்கு இடமளிக்கப்படவேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

அதுமாத்திரமன்றி இப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் சுதந்திர சதுக்கப்போராட்டத்தில் இணைந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments