அணுவாயுதத்துக்கு தடை! ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க மறுக்கும் நோர்வே!!!

You are currently viewing அணுவாயுதத்துக்கு தடை! ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க மறுக்கும் நோர்வே!!!

உலகளாவிய ரீதியில் அணுவாயுதத்தை தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இதுவரை 50 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

அணுவாயுத எதிர்ப்பாளர்கள் பல்லாண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த, சர்வதேச ரீதியிலான இந்த தீர்மானத்துக்கு, சமாதான விரும்பியாகவே தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் நோர்வே ஆதரவு அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

22.01.2021 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் அணுவாயுத தடைத்தீர்மானம், நோர்வே உள்ளிட்ட நேச நாடுகளுக்கு (NATO) மகிழ்வைத்தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேசநாடுகளில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் அணுவாயுதங்களை வைத்திருந்தாலும், காலப்போக்கில் நோர்வேயும் அணுவாயுத தடை தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமென நம்புவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அணுவாயுத தடைக்கு நோர்வே ஆதரவளிக்குமானால், நேச நாடுகளின் கட்டமைப்பின் சித்தாந்தங்கள் தொடர்பில் முரண்பாடுகளை நோர்வே சந்திக்கவேண்டி ஏற்படலாமென முன்வைக்கப்படும் கருத்துக்களை மறுதலித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம், அரசியல் செயற்பாடுகளுக்கும், மனிதாபிமான செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள பாரிய வேறுபாடுகளை நோர்வே உணர்ந்துகொள்ளும் பட்சத்தில், அணுவாயுத தடைக்கு நோர்வேயால் பூரண ஆதரவை அளிக்க முடியுமென தெரிவித்துள்ளது.

நோர்வேயின் ஆளுமைக்குட்பட்ட பூமிப்பரப்பில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதற்கு நோர்வே மறுப்பு தெரிவித்துள்ளதை குறிப்பிடும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம், உலகளாவிய ரீதியில் கொத்தணிக்குண்டுகளையும், நிலக்கண்ணி வெடிகளையும் தடை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் நோர்வே, நேசநாடுகளின் அமைப்போடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை காரணம் காட்டி, வரலாற்று சிறப்பு மிக்க இந்த அணுவாயுத தடை தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் போனால், நோர்வே மீதான சர்வதேசத்தின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் மிகப்பழமையான விருப்பங்களில் முதன்மையான இந்த அணுவாயுத தடை தீர்மானமானது 2017 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையில் முன்மொழியப்பட்டு, 122 நாடுகளின் கொள்கையளவு ஆதரவும் பெறப்பட்டிருந்தாலும், 24.10.2020 அன்றே இத்தீர்மானம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்தீர்மானம் 22.01.2021 தொடக்கம் நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அணுவாயுதத்தை கொண்டுள்ள நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, பாக்கிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள