அமைதி காக்கும்படி அமெரிக்காவை வேண்டும் உலகநாடுகள்!!

You are currently viewing அமைதி காக்கும்படி அமெரிக்காவை வேண்டும் உலகநாடுகள்!!

ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் விமானத்தளங்களின்மீது, நேற்று ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக, அமெரிக்கத்தரப்பிலிருந்து இன்னமும் உறுதி செய்யப்படாத செய்திகள் இன்று காலையில் பரவியுள்ளன.

தாக்குதலுக்குள்ளான தளங்களில், அமெரிக்க படைகளோடு, “NATO” வில் அங்கம் வகிக்கும் நோர்வேயின் படை வீரர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதே வேளையில், தாக்குதலுக்கு முன்னதாகவே, தாக்குதல் நடத்தப்படப்போவதாக நோர்வேயின் இராணுவத்தலைமையகத்திற்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட பின்னரே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நோர்வே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கெதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக ஈரானின் நேற்றைய தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததோடு, அமெரிக்கா திருப்பி தாக்கினால், அமெரிக்க மண்ணில் தாக்குதல்களை நடத்துவதோடு, உலகெங்கிலும் உள்ள 52 அமெரிக்க நிலைகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்துவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் நேற்றைய தாக்குதல்களையடுத்து இன்னமும் அமைதி காக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கெதிரான தாக்குதல்களை ஆரம்பித்து, மூன்றாம் உலகப்போரோன்றுக்கான வழியை திறந்துவிடக்கூடாதென உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்தவண்ணமுள்ளன.

எனினும், இம்முறுகல் நிலை தொடர்பாக தத்தமது நாடுகளில் பெரும் அழுத்தங்களை சந்தித்துவரும் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிபர்கள், தத்தமது செல்வாக்குகளையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக போர் நடவடிக்கையொயொன்றில் இறங்குவார்களா என்பதே இன்றைய பெரும் கேள்வியாக இருக்கிறது. 

அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக இருக்கும் நோர்வேயிலும், அமெரிக்க அதிபரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பிவரும் நிலையில், ஈராக்கில் நிலைகொண்டுள்ள நோர்வே இராணுவவீரர்களை திரும்பவும் நோர்வேக்கு திருப்பியழைக்கவேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. சர்வதேச போர்விதிமுறைகளை அமெரிக்க தொடர்ந்தும் மீறி வருவதாக பரவலான விசனங்கள் எழுந்துவரும் நிலையில், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் போர் மூளுமானால், மத்தியகிழக்கில் நோர்வேக்கு இருக்கும் அபரிமிதமான வியாபார நடவடிக்கைகள் பாதிப்புக்களுக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபரின் உறுதியற்ற சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் அமெரிக்காவிலும், சர்வதேசநாடுகளிலும் விசனங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், புதிய போர் நடவடிக்கை ஒன்றுக்கு உலகநாடுகள் ஆதரவளிக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாக இருக்கும்  “NATO” அமைப்பும், ஈரானிய இராணுவத்தளபதியை அமெரிக்கா படுகொலை செய்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை நேரடியாக சொல்லாத “NATO” அமைப்பின் தலைவர் “Jens Stoltenberg”, ஈரானிய இராணுவத்தளபதியை படுகொலை செய்தது அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவு என்றும், “NATO” அமைப்புக்கும், இப்படுகொலைக்கும் சம்பந்தமில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், ஈராக்கில் நிலைகொண்டுள்ள “NATO” கூட்டுப்படைகளின் அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாகவும், காலக்கிரமத்தில் படைகள் ஈராக்கிலிருந்து திருப்பியழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வழமையாக அமெரிக்க கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தே பழக்கப்பட்ட “NATO” கூட்டமைப்பு, இந்த விடயத்தில் அமெரிக்க முடிவுகளிலிருந்து விலகிச்செல்வதாக பார்க்கப்படுவதால், இதுவும் அமெரிக்க அதிபரின் போர் சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நேற்றையதினம் இஸ்ரேலிய நாளேடொன்றை ஆதாரம் காட்டி வெளிவந்த செய்தியொன்றின்படி, “ஜோர்ஜ் புஷ்” மற்றும் “பராக் ஒபாமா” ஆகியோர் அமெரிக்க அதிபர்களாக இருந்த காலங்களிலேயே இப்போது படுகொலை செய்யப்பட்ட ஈரானிய இராணுவத்தளபதியை படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றதாகவும், எனினும், மத்தியகிழக்கில் அதிமுக்கியம் வாய்ந்த இராணுவத்தளபதியாக, படுகொலை செய்யப்பட்ட “காஸிம் சுலைமானி”  இருந்ததால், அவரை படுகொலை செய்வது விவேகமானதல்ல என்ற கருத்தை கொண்டிருந்ததால் முன்னைய அமெரிக்க அதிபர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஞானம் கொண்டிராத தற்போதைய அமெரிக்க அதிபர், பின்விளைவுகள் எதையும் புரிந்துகொள்ளாமல், படுகொலைக்கு உத்தரவிட்டதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஈரானிய இராணுவத்தளபதியின் படுகொலை தேவையற்ற ஒன்று என்ற கருத்தே தற்போது பரவலாக காணப்படுவதால், ஈரானின் நேற்றைய தாக்குதல்கள் உலகநாடுகளால் புரிந்துகொள்ளப்படும் நிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் ஈரான்மீதான முழுமையான மரபுவழியிலான போர் ஒன்றுக்கு அமெரிக்கா தனியாக களத்தில் இறங்கும் வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கிறதா என்பது கேள்வியாக உள்ளது. 

சமூகவலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும், ஒருவரையொருவர் நக்கலடித்தும் கருத்துக்களை முவைக்கும் ஈரானும், அமெரிக்காவும் போர்க்களத்தில் சந்தித்துக்கொள்ளுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. 

பகிர்ந்துகொள்ள