அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும்!

You are currently viewing அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும்!

தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்ட நிலையில், சிறீலங்காவில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கி, சிங்களப் பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக சிங்களத் தரப்பு முப்பெரும் அணிகளாக இத் தேர்தலில் களம் இறங்குகின்றது.

சிங்களத் தரப்பைப்போன்றே தமிழர் தரப்பும் இத்தேர்தலில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி முப்பெரும் அணிகளாக பிரிந்து களம் இறங்கியுள்ளன. எதிர்வரும் ஆவணி மாதம் 5 ஆம் திகதி தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்ட நிலையில், இந்த அணிகள் தமது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

4

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தேர்தல் அரசியல் மூலம் எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது என்பதை ஏற்கனவே அறிவித்த தமிழீழ தேசியத் தலைவர், தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தின்போது அந்த அரசியல் பாதையை முற்றாகவே மூடியிருந்தார். இதனாலேயே ஏற்கனவே சிறிலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற தமது அரசியல் அமைப்பை புலிகள் இயக்கமற்ற நிலைக்கு கொண்டுவந்தனர்.

கொத்துக் கொத்தாக தமிழ் மக்களைக் கொன்றொழித்துவரும் சிங்கள தேசத்திற்கும் சிங்களப் படைகளுக்கும் அரசியல் ரீதியாக பதில் கூறி தமிழ்த் தலைவர்கள் களைத்துப்போனதால் புலிகள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை தமிழ் மக்கள் எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

எனினும், சிறீலங்கா நாடாளுமன்றில் தமிழ்த் தேசியத்தின் குரல் ஒலிப்பதை புலிகள் விரும்பினர். தமிழர்களின் விடுதலைக்காக ஒருபக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தமிழர்களின் ஜனநாயக குரலை எடுத்துரைக்கும் செயற்பாட்டை புலிகள் மறுதலித்திருக்கவில்லை. இதற்கான ஏற்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

4

1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் 2009 இல் சிதைக்கப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் இல்லாத சூழ்நிலையில் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆவணி மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போவது தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

உள்நாட்டில் அடக்கி ஒடுக்கப்படும் ஒரு இனம் விடுதலை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அந்த நாட்டு அரசுடன் பேசுவது, அயல்நாடுகளுடன் பேசுவது, பன்னாட்டு உதவிகளை எதிர்பார்ப்பது, அந்த நாட்டுக்குள்ளேயே ஜனநாயக வழிகளில் போராடுவது இறுதியாக ஆயுதங்கள் மூலம் அந்த நாட்டு அரசை பணியவைத்து விடுதலையை பெறுவது. இவ்வாறான வழிகள் மூலம் உலகின் பல நாடுகள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளன.

தமிழ் மக்களை பொறுத்தவரை 70 வருடங்களுக்கு மேலாக சிங்களப் படைகளாலும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் விடுதலை பெறுவதற்கு மேற்கூறப்பட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றிவிட்டனர். ஆனால், இன்னும் விடுதலை பெறவில்லை. தமிழர்களிடம் இருக்கும் ஒற்றுமையீனமே இதற்கு காரணமாகும்.

1

தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஓரணியில் செயற்பட வைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்பட்டது.
அரசியல் ரீதியாக கூட்டமைப்பின் உருவாக்கம், ஆயுத ரீதியாக புலிகளின் எழுச்சி, தமிழ் மக்கள் ஓரணியாக திரண்டமை போன்ற காரணிகளால் சிங்கள தேசமே அச்சமடைந்தது. தமிழர்கள் தனிநாட்டை பிரகடனப்படுத்தி, அதை பன்னாடுகளில் ஒருசில நாடுகள் ஏற்றுக்கொண்டாலே அது பெரும் சிக்கலாக மாறிவிடும் என சிங்கள இனவாதிகள் அஞ்சினர். இந்தக் காரணத்தாலேயே புலிகளை அழித்துவிட சிங்கள தேசம் ஒன்றுபட்டு நின்றது.

பன்னாடுகளின் உதவியுடன் தமிழர் தாயகம் மீது சிங்கள இனவெறிப் படைகள் கொடூர யுத்தம் நடத்தியபோது, தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தனர். இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாம் எங்கே இருக்கின்றனர் என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர். இதன் விளைவாக இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெருமெடுப்பில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி, சர்வதேச ரீதியாக குரல்களை உயர்த்தியிருந்தால் இன்று தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் தமிழர்களின் தேசியத் தலைமையும் பொதுமக்களும் காப்பாற்றப்பட்டிருப்பர். கூட்டமைப்பு அதைச் செய்யவில்லை. தமிழர்களின் ஒற்றுமை இங்கே கேள்விக்குட்படுத்தப்பட்டது. இன்று மீண்டும் ஒரு தேர்தலுக்காக இவர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

தமிழர் அரசியலில் வேடிக்கை என்னவெனில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி நிற்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் தாங்கள் பல அணிகளாக பிரிந்து நிற்பதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அதை முன்னிறுத்தி, மக்களிடம் வாக்கு கேட்கின்றன. ஆனால், ஓரணியில் ஒன்றுபட்டு நின்று தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கு இவர்கள் திராணியற்றவர்களாக உள்ளனர்.

புலிகளின் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட பின்னர், தமிழர் நலன்சார்;ந்த தமிழ்க் கட்சிகளை பல கூறுகளாக பிளவுபடுத்தி, அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ந்தும் அடக்கி ஆள முடியும் என்ற சிங்கள அரசின் நிகழ்ச்சிநிரல் மிகச் சரியாக அமுல்படுத்தப்படுகின்றது. ஆனால், தமிழ் மக்கள் தங்களுக்கான மீட்பர்கள் இன்றி விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இருக்கின்றவர்களில் சொற்பமாவது நல்லவர்களை ஆதரிக்கவேண்டும் என்ற நிலை வரும்போது ஏனைய அணிகளை விடவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் சிந்தனையும் அக்கட்சியின் செயற்பாடுகளும் தமிழ் மக்களை கவர்ந்திருக்கின்றன. தமக்கான ஒரு தமிழ்த் தேசிய அணியின் இருப்பை தக்கவைத்து, தமது உரிமைகளை நோக்கி நகர்வதற்கான ஒரு ஏற்பாடாக தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பார்க்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்நெயில் அதிருப்தியடைந்து அதில் இருந்து வெளியேறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் உருவாக்கிய கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கின்றது.

சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்கி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மழுங்கடித்துவரும் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றவர்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் புறக்கணிப்பதற்கு தயாராகிவிட்டனர். மாற்று அணியின் தேவையை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. தமிழர் நிலங்கள் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக குரல்கொடுக்கின்றது. தமிழ் மக்களின் பண்பாட்டு, கலாசார அழிப்புக்கள், நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி  போராடி வருகின்றது.
இளைஞர்களுக்கான அரசியல் பங்கேற்புக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு – கிழக்கு பூராகவும் 81 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு பெரும் வளர்ச்சி நிலையை எட்டியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்த போது, ஏனைய கட்சி உறுப்பினர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புலம்பெயர் சமூகம் உட்பட பல இடங்களிலும் திரட்டப்பட்ட நிதிகள் மூலம் மக்களின் வீடுகளுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரகாவியமான மாவீர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் இன்றுவரை கௌரவிக்கும் ஓர் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேலெழுந்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வீடு தேடிச்சென்று உதவிகளை வழங்குவதிலும் முன்னணி முன்னின்று பணியாற்றுகின்றது.

மேற்படி காரணங்களால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சிறப்பான இடம் ஒன்று கிடைத்திருக்கின்றது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழும் மக்கள் வரவிருக்கின்ற தேர்தலில் தமது ஆதரவு குறித்து சரியான முடிவெடுக்கவேண்டும். தாயகத்தில் வாழும் தமது உறவுகளை புலம்பெயர் தேசத்தவர்கள் வழிப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது.

தமிழீழ விடுதலைக்காக களமாடிய மாவீரர்களின் தியாகத்தை மதித்து, அவர்கள் கண்ட கனவுகள் நிறைவேற ஒற்றுமையுடன் உழைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.

தாயகத்தில் இருந்து காந்தரூபன்

பகிர்ந்துகொள்ள