அலைபேசி கண்காணிப்பு : தொற்றுநோயைத் தடுக்க புதிய வழிமுறை!

  • Post author:
You are currently viewing அலைபேசி கண்காணிப்பு : தொற்றுநோயைத் தடுக்க புதிய வழிமுறை!

புதிய செயலி, நீங்கள் சந்திக்கும் அனைவரையும் கண்காணிக்கும்.

நோர்வே மக்கள், தொற்றுநோயைத் தடுக்கவும், கடுமையான விதிமுறைகளை தவிர்க்கவும் அலைபேசி கண்காணிப்புக்கு முன்வருவார்களா!

புதிய விதிமுறைகள் எண்ணியல் கண்காணிப்பை அனுமதிக்கின்றன, எனவே இதன் மூலம் உங்கள் செயல்பாடுகளை ஒரு மாதத்திற்கு சேமிக்க முடியும்.

“எண்ணியல் தொற்று கண்டறிதல் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாடு” மீதான ஒழுங்கு விதிகள், நோர்வே சுகாதார அதிகாரிகளுக்கு புதிய முறைகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

புதிய ஒழுங்குமுறை “மக்கள் தொகை அளவிலான கண்காணிப்பு மூலம், நோய்த்தொற்றுகள் பரவுவதை கண்காணிக்கவும், தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவை மதிப்பிடவும் உதவும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முறையானது வெள்ளி அன்று அரசாங்கத்தால் அதிவேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆலோசனை அல்லது பொது விவாதம் எதுவும் இல்லாமல் வெள்ளி 16.50 மணியளவில், இந்த விதிமுறை அறிவிக்கப்பட்டது. இது டிசம்பர் 1, 2020 வரை நடைமுறையில் இருக்கும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அருகில் இன்னொருவர் இருந்தால் அவருக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் இந்த புதிய செயலி உடனடியாக அறிவிக்கும்.

இந்த செயலி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அற்புதமான ஆயுதமாக மாறும்,.பல உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தடை உத்தரவுகளை விரைவாக நீக்க உதவும்.

போதுமான அளவு மக்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்தால் மட்டுமே இந்த செயலி செயல்படும். ஒரு மாதத்திற்கு முன்பு இதுபோன்ற எண்ணியல் கண்காணிப்பு முறை நோர்வேயில் நினைத்துப் பார்க்க முடியாததாக மற்றும், சட்டவிரோதமானதாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செயலியை தரவிறக்கம் செய்த இரண்டு நபர்கள், 15 நிமிடங்களுக்கும் மேலாக, இரண்டு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும்போதுதான், ​​அவர்கள் நெருக்கமான தூரத்தில் இருப்பது பதிவு செய்யப்படும்.

  • இதில் பங்குகொள்வோர் எல்லா தரவுகளையும் பார்வையிடலாம் மேலும் எந்த நேரத்திலும் இந்த முறையிலிருந்து வெளியேறலாம்.
  • இதில் பங்குகொள்வோர் அலைபேசி எண்கள் மற்றும் வயது போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • அலைபேசியின் இருப்பிட தரவின் அடிப்படையில் அனைத்து அசைவுகளும் சேமிக்கப்படும்.
  • வெளிப்புறங்களில் GPS தொழில்நுட்பமும், உட்புறங்களில் துல்லியமான தரவைப் பெற Bluetooth தொழில்நுட்பமும் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த தரவுகளை 30 நாட்களுக்கு சேமிக்க முடியும்.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல்கள் இரகசியமாக வைத்திருக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உங்களுக்கு அறிவிக்கப்பட்டால், அவர் யார் என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படாது. இந்த தகவல்கள் காவல்துறையில் அல்லது பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

சுகாதார அமைச்சர் Bent Høie, நோர்வே பொது சுகாதார அமைச்சு, ஆராய்ச்சி மற்றும் மின்-சுகாதார மையம் ஆகியவை, முடிந்தவரை கூடுதலான மக்களை இதில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களையும் பதிவு செய்யும் “தொற்று நோய்கள் அறிவிப்பு மையம்” – MSIS, பாதிக்கப்பட்ட அனைவரையும் அலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற எண்ணியல் தொடர்பு தகவல்களை பதிவு செய்யும்படி கேட்டுள்ளது.

இது முற்றிலும் அவசியமானது என்று பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் Camilla Stoltenberg வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கு பெரிய கேள்வி என்னவென்றால், நோர்வேயில் எவ்வளவு மக்கள் இதில் பங்குகொள்ளப் போகின்றார்கள் என்பதே! .

மேலதிக தகவல்: Aftenposten

பகிர்ந்துகொள்ள