ஆண்தாயை ஈன்ற மாதந்தை

You are currently viewing ஆண்தாயை ஈன்ற மாதந்தை

கூனிக்கிடந்த ஓர் இனத்தின்
கூன் நிமிர்த்திய கொற்றவன்
வானுயர்ந்து வல்லமையாகி
கோனாகி தமிழரின் மன
மாளிகையில் கோலோச்சி
நின்றவன்..
அந்த அணையாத
அற்புதவிளக்கின்
ஆண்தாயாய்
ஆலமரமாய்
அண்ணனின்
அரியணையில்
மண்ணின் தந்தையாய்
மகுடம்
கொண்டவர்..

மண்போற்றும்
மன்னவனை
மடி சுமந்ததால்
மனிதநேயம் அற்ற
மாந்தரின் விச
மருந்தில்
மாதந்தையின்
மறைவு நேர்ந்தது
முதுகு முறிந்தவரின்
ஈனச்செயலால்
ஆண்தாயின் அவலம்
கண்முன்னே
நிகழ்ந்தது.

நீதியற்ற உலத்தில்
நீசர்களே அதிகமய்யா
நீதி தேவதையின்
நீர்விழியில் குருதிவாடை
நீரருவியாய் பாயுதய்யா..

வெள்ளை மனிதரின்
கொள்ளை அரசியலில்
கொள்கை குற்றுயிராய்
தவிக்குதய்யா..

தள்ளாடும் வயதிலும்
கறுப்பாடுகளின்
அடிவருடி அரசியலில்
அருவருப்பு
நிகழுதய்யா
அடையாளம் தொலைத்து
வேதாளங்கள்
முருங்கையில்
ஏறுதய்யா

தமிழுக்காய் தந்த
தலைமகனின்
தணியாத தாகம் கொண்டு
தரணியில் வேகம் கொண்டு
தமிழினத்தின் இன்னல் களைய
தன்மானத் தமிழராய்
தமிழ் மானம்
தாங்கிடுவோம்.

அள்ள அள்ள குறையாத
அன்புள்ளங்களாய்
அண்ணன் வழி
அன்னைத் தமிழுக்காய்
அகிலமெங்கும்
அசையாத ஆன்மாவாய்
மலையென அலைவந்தாலும்
தலைவனின் பாதச்சுவடுகளில்
பயணம் நடக்கும்
உன்னத உரிமைப்போரைக் கண்டு
உலகம் வியக்கும்
தன்மானத் தமிழரின் விடுதலைத் தாழ்
திறக்கும்
தமிழரின் தாழ்ச்சி நீங்கி
தங்கத்தமிழ் மண்
சிரிக்கும்

அணையாத தணலாக
சுணையேறிய மகனாக
வினைத்திறனாய் எழுவோம்
விதையாகிப் போனோரின்
கனவுகளை காண்போம்.

-தூயவன்-

பகிர்ந்துகொள்ள