ஆப்கானில் தலிபான்கள் வெற்றிப் பிரகடனம்; இஸ்லாமிய இராஜ்ஜியமாக அறிவிக்கப்பட்டது!

You are currently viewing ஆப்கானில் தலிபான்கள் வெற்றிப் பிரகடனம்; இஸ்லாமிய இராஜ்ஜியமாக அறிவிக்கப்பட்டது!

ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றி மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ள தலிபான்கள் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய இராஜ்ஜியமாக அவா்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு வசம் இருந்துவந்த காபூல் நகருக்குள் தலிபான்கள் நேற்று பாரிய எதிர்ப்பின்றி நுழைந்ததன் மூலம் நாட்டின் முழுமையாக கட்டுப்பாடு அவர்களின் வசமாகியுள்ளது.

இதனையடுத்து விரைவில் ஆட்சி அமைப்போம். அது குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தப்பியோட்டம்

தலிபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் சென்று, உஸ்பெகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அத்துடன், மாகணங்களில் ஆளுநர்கள் பொறுப்புக்களைத் திறந்து பதவி விலகியுள்ளனர். அரச அதிகாரிகளும் தலிபான்களிடம் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை, துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலேயும் நாட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை தலிபான்கள் வசம்

காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் எந்த எதிர்ப்புமின்றி ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் உடனடியாக தாலிபன்கள் வெளியேற்றினர்.

ஜனாதிபதி மாளிகையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தகவலை தாலிபன்கள் உறுதி செய்ததுடன், அங்கு தலிபான் தலைவர்கள் கூடியிருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்

தற்போது காபூல் விமான நிலையம் மட்டுமே நேட்டோ படையணிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. விமான நிலையத்தில் குவித்துள்ள இராஜதந்திரிகள், தூதரகப் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க தரப்பிலிருந்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ராஜதந்திரிகள் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை தலிபான்கள் வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

காபூலில் இருந்து அனைத்து சிவில் விமான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டு தற்போது

இராணுவ விமானங்கள் மட்டுமே செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த தூதர் உள்பட அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக விமான நிலைய வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த வளாகத்திலேயே தற்காலிகமாக தூதரகம் செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது காபூல் விமான நிலைய பாதுகாப்பை நேட்டோ கூட்டுப்படையினர் கவனித்து வருகின்றனர்.

காபூல் விமான நிலையத்தில் இராஜதந்திரிகள் குவிந்துள்ள நிலையில் விமான நிலைய வளாகத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

எனினும் விமான நிலையத்தில் இருந்து தாயகத்துக்கு திரும்ப முற்படுவோருக்கு உதவியாக தமது படையினர் விமான நிலையத்தில் இருப்பதாக நேட்டோ செயலாளர் நாயகம் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

பழிவாங்க மாட்டோம் – தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசமாகியுள்ள நிலையில் அங்கு உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும். அவர்களின் உடைமைகள், உயிர் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. நாங்கள் இந்த நாட்டு மக்களின் சேவகர்கள். அவர்களின் எதிரிகள் இல்லை எனவும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

சிறைகளிலிருந்த தலிபான்கள் விடுவிப்பு

இதேவேளை, காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் அங்கு சிறைவகை்கப்பட்டிருந்த தமது சகாக்களை விடுவித்தனர்.

அங்குள்ள மிகப்பெரிய சிறைச்சாலையான புல் இ சார்க்கிக்குள் நேற்று மாலை தாலிபன்கள் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாலிபன்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றினர்.

அத்துடன், பக்ராம் விமானப்படை தளத்தில் உள்ள சிறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு தாலிபன்கள் கொண்டு வந்தனர். பாக்ராம் சிறைச்சாலையில் இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், தாலிபன்கள், பிற தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் ஐந்தாயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments