“இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்!

You are currently viewing “இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று கண்காணித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த பயணம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை நேற்று முற்பகல் (17.12.21) சென்றடைந்தார். அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர். 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவர், தாழ்வுபாடு பகுதியில் அமைந்துள்ள ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும் இன்று முற்பகல் பார்வையிட்டிருந்தார்.

இராமர் பாலம் – ஶ்ரீ ராம்சேது

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது. இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

அண்மையில் இலங்கைக்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பாரத பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென ட்விட்டர் பதிவொன்றில் வினவியிருந்தார்.

இதனிடையே, மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் பயணம் செய்திருந்தனர். இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments