இந்தியாவில் இருந்து வருவோருக்கு பயணத் தடை விதித்தது நியூசிலாந்து!

You are currently viewing இந்தியாவில் இருந்து வருவோருக்கு பயணத் தடை விதித்தது நியூசிலாந்து!

இந்தியா உட்பட தென்னாசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வருவோருக்கு நியூசிலாந்து 14 நாட்கள் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் நியூசிலாந்து நாட்டவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இன்று வியாழக்கிழமை 23 புதிய கோவிட் 19 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இவா்களில் 17 பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாவர். இதனையடுத்தே இந்தியாவில் இருந்து வருவோருக்கான பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலகில் ஒரு நாட்டில் ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் நியூசிலாந்து தடை விதித்துள்ளது. இந்த இடைக்காலத் தடை 11 ஆம் திகதி அமுலுக்கு வரும். ஏப்ரல் 28-ஆம் திகதிவரை அமுலில் இருக்கும். இந்தக் காலப்பகுதிக்குள் நிலைமையக் கருத்தில் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று நோய் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களாக உள்நாட்டில் ஒரு தொற்று நோயாளி கூட உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் சமீப நாட்களாக வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவோர் மத்தியில் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், இன்று வியாழக்கிழமை நியூசிலாந்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் பணி புரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்குப் பின்னர் உள்நாட்டில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 வயதான அந்த நியூசிலாந்து பிரஜை இதுவரை கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள