இந்தியாவில் இருபத்தியிரண்டு இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று!

You are currently viewing இந்தியாவில் இருபத்தியிரண்டு இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று!

உலகம் முழுவதையும் தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்றிடம் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் தொற்றில் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 3 நாட்களில் தொற்றில் சிக்கியோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சமாக அமைந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 64 ஆக குறைந்திருந்தது. அதேநேரம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி மலைக்க வைத்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆக உயர்ந்தது. இதைப்போல கொடிய கொரோனாவிடம் சிக்கியவர்களில் மேலும் 1,007 பேர் பலியாகி விட்டனர். இது கடந்த 2 நாட்களை விட அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா, பலி வாங்கிய உயிர்களின் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்து சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பலியான 1,007 பேரில் வழக்கம் போல மராட்டியத்தில் அதிகபட்சமாக 390 பேர், தமிழகத்தில் 119 பேர், கர்நாடகாவில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஆந்திராவில் 97, மேற்கு வங்காளத்தில் 54, உத்தரபிரதேசத்தில் 41, குஜராத், பஞ்சாபில் தலா 24, ஜார்கண்டில் 22, மத்திய பிரதேசத்தில் 19, டெல்லி, ஒடிசா, காஷ்மீரில் தலா 13 பேர் இறந்துள்ளனர்.

இந்த பட்டியலில் ராஜஸ்தான் 11, தெலுங்கானா 10, அரியானா 9, உத்தரகாண்ட் 8, சத்தீஷ்கார், புதுச்சேரி தலா 7, பீகார், அசாமில் தலா 5, கோவாவில் 3, கேரளாவில் 2, திரிபுரா, இமாசல பிரதேசம், சண்டிகர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 1 என இறப்பு பதிவாகி உள்ளது.

இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடம் வகிக்கிறது. அங்கு 17,757 பேர் இதுவரை கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகம் 4,927 பலி எண்ணிக்கையுடன் 2-ம் இடத்தில் உள்ளது. முறையே 4,111 மற்றும் 3,198 என்ற சாவு எண்ணிக்கையை கொண்ட டெல்லியும், கர்நாடகமும் 3 மற்றும் 4-ம் இடங்களை பெற்றுள்ளன.

இவற்றை தவிர குஜராத் (2,652), உத்தரபிரதேசம் (2,069), மேற்கு வங்காளம் (2,059), ஆந்திரா (2,036), மத்திய பிரதேசம் (996), ராஜஸ்தான் (789), தெலுங்கானா (637), பஞ்சாப் (586) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் இந்த கொடிய தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று பகலுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 54,859 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இது இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் 15 லட்சத்து 35 ஆயிரத்து 743 ஆக உயர்ந்து உள்ளது. குணமடைந்தோர் விகிதமும் ஏறக்குறையை 70 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 28.66 ஆக குறைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 945 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் சாவு விகிதமும் 2 சதவீதமாக குறைந்திருப்பதுடன், தொடர்ந்து சரிவடைந்தும் வருகிறது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் சுமார் 4 லட்சத்து 77 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 2,45,83,558 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு பரிசோதனைகளை அதிகரித்து விரைவிலேயே தொற்று உறுதி செய்யப்படுவது, தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்துவது, உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளால் 15 லட்சத்துக்கு மேற்பட்டோரை குணப்படுத்த முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பகிர்ந்துகொள்ள