இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தேச குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்!

You are currently viewing இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தேச குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்!

இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தேச குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்கள், நாடு முழுவதற்கும் பரவி வருகின்றன. முஹமதியர்களை தனிமைப்படுத்தி வேறுபடுத்தும் நிலையை இந்த புதிய சட்டமூலம் உருவாக்கிவிடும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

பெரும்பாலும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவும் பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டங்களை, காவல்துறையை வைத்து அடக்கிவரும், இந்திய மத்திய அரசு, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தனது முடிவில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களை அடக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக சேதிகள் வெளிவந்தவண்ணமுள்ளன. கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வாரணாசியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்கி ஒடுக்கும் முகமாக, கண்மூடித்தனமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டதை அடுத்து, அங்கிருந்து சிதறி ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்களின் கால்களுக்கிடையில் சிக்கிய, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுடைய சிறுவன் ஒருவனும் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைதியான முறையில் ஆர்ப்பட்ட்ங்களில் ஈடுபடும் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, அவர்களை சிறையிலடைப்பதற்கு, முறையற்ற வழிமுறைகளை காவல்துறை கையாள்வதாக, சுயாதீன செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பொதுச்சொத்துக்களுக்கும், பொதுப்போக்குவரத்து பேரூந்துகளுக்கும் காவல்துறையினரே தீ வைத்து அழிப்பதாகவும், அதற்கான பழியை மாணவர்கள் மீது சுமத்தி, ஆர்ப்பாட்டங்களை கலைத்தும், மாணவர்களை கைது செய்தும், காவல்துறை கோரத்தாண்டவமாடுவதாகவும் சுயாதீன செய்தியாளர்களை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

இந்தியாவின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துவரும் உலக நாடுகள், தமது அதிருப்திகளை வெளிப்படுத்தவும் ஆரம்பித்திருக்கின்றன.

பகிர்ந்துகொள்ள