சிறீலங்காவில் 61 பேருக்கு கொரோனா!

You are currently viewing சிறீலங்காவில் 61 பேருக்கு கொரோனா!

கம்பஹா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை அளிப்பதற்கு 13 மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்து வந்தன. மினுவங்கொட தொற்று கொத்தணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, இந்த மருத்துவமனைகளில் இடநெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, அரசாங்கம் அவசர அவசரமாக, மேலும் 6 புதிய கொரோனா சிகிச்சை நிலையங்களை அமைத்து, படுக்கைகளின் எண்ணிக்கை, 2075 ஆக அதிகரிக்கப்பட்டது. எனினும், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இடநெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

தற்போது இந்த சிகிச்சை நிலையங்களில் 2026 தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், 49 படுக்கைகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தொற்று நோய் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை விட மேலதிகமாக 80 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று காத்தான்குடி, கம்புறுகமுவ, வெலிகந்த, அம்பன்பொல, தெல்தெனிய மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளுக்கு மேலதிகமாக தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள