இராணுவத்திற்கான செலவுகளை குறைக்க அழுத்தம் கொடுங்கள் – ஹரி ஆனந்தசங்கரி!

You are currently viewing இராணுவத்திற்கான செலவுகளை குறைக்க அழுத்தம் கொடுங்கள் – ஹரி ஆனந்தசங்கரி!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக இருந்தால், இலங்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சியின் உறுதிப்பாடு, அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய தெளிவான நடவடிக்கைகள் என்பன வலுவான நிலையிலிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இராணுவத்திற்கான செலவினங்களைக் குறைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, தற்போது நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எவையுமில்லாத நிலையில் பாதுகாப்புத்துறைக்கு மேற்கொள்ளப்படும் அநாவசிய செலவுகள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரியினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ஸ்கான்பரோ ரக் பார்க் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கனேடிய பாராளுமன்ற உறுப்பினராவேன். 

இலங்கையில் மிகமோசமடைந்துவரும் நிதி நெருக்கடி தொடர்பில் நான் தீவிர கரிசனையுடன் அவதானம் செலுத்திவரும் அதேவேளை, அந்நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன். 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை பொறுப்புக்கூறலுடன் செயற்படுவதையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கிய பாதையில் பயணிப்பதையும் உறுதிப்படுத்துவதுடன் இராணுவ செயற்பாடுகளுக்காக இலங்கை செலவிடும் பெருமளவு நிதியை கணிசமாகக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும்.

வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் என்பன உள்ளடங்கலாக, இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் தற்போது மிகமோசமான நிதி நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அதேவேளை, ஏற்கனவே பின்தங்கிய நிலையிலிருந்த மக்கள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் அவர்களுக்கான உணவுக்கிடைப்பனவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

இது இவ்வாறிருப்பினும் 2022 ஆம் ஆண்டிற்கென அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கென 373 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை பாதுகாப்புத்துறைக்கான நிதியொதுக்கீடு 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 

இது அரசாங்கத்தின் வருடாந்த மொத்த செலவினத்தில் 15 சதவீதமாகும். பல மில்லியன் மக்கள் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படக்கூடிய நிதி இராணுவத்தை வலுப்படுத்துவதற்கு செலவிடப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.  

இராணுவத்திற்கான அதிக செலவுகளுடன் மனித உரிமைகள் தொடர்பில் மிகமோசமான பதிவுகளைக்கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. அது தற்போதைய அரசாங்கத்தின் கடும்போக்குவாதத்தை மேலும் ஊக்குவிப்பதற்குப் பங்களிப்புச்செய்வதுடன் மாத்திரமன்றி, தமிழர்கள் அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் படுகொலை செய்யப்படுவதற்கும் உதவியுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தைச்சேர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் மிகமோசமான சர்வதேசக்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 

எனவே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்குவதாக இருந்தால், இலங்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சியின் உறுதிப்பாடு, அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய தெளிவான நடவடிக்கைகள் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினரால் மிகமோசமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டமையும் இருப்பினும் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படுகின்றமையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய விசேட நிபுணர்களின் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சட்டங்களுக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சிவில் நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதுடன் வலுகட்டாயமான காணி அபகரிப்புக்களும் தொடர்கின்றன. 

அந்தவகையில் இராணுவத்திற்கான செலவினங்களைக் குறைப்பதென்பது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு சிவில் மக்களின் வாழ்வில் அதிகரித்துவரும் இராணுவத்தாக்கத்தைக் குறைப்பதற்குப் பங்களிப்புச்செய்யும். 

அத்தோடு அது மிகமுக்கியமான ஆரம்பப்புள்ளியாகவும் அமையும். குறிப்பாக உணவு, கல்வி, சுகாதாரம் உள்ளடங்கலாக மக்களின் நலனை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கெனப் போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இன்றியமையாததாகும்.

எதுஎவ்வாறெனினும் தற்போது நாட்டில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவுமில்லாத நிலையில், இராணுவத்திற்கும் பாதுகாப்புத்துறைக்கும் மேற்கொள்ளப்படும் அநாவசிய செலவுகள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும். 

அதேபோன்று இலங்கையின் தற்போதைய நிதி உறுதிப்பாடின்மை நிலை, இராணுவத்திற்கான செலவுகளை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு சர்வதேச நாணய நிதியத்திற்கு இருக்கின்றது. இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் தொடர்ந்து நிகழ்த்தப்படும் மீறல்களில் சர்வதேச நாணய நிதியமும் பங்காளியாக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகும். 

உலகளாவிய சட்ட ஒழுங்கில் முக்கிய கருவியாகத் தொழிற்படும் சர்வதேச நாணய நிதியம், இலங்கைவாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் கெரி ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments