இருதலை கொள்ளி எறும்பாக “நேட்டோ”!

You are currently viewing இருதலை கொள்ளி எறும்பாக “நேட்டோ”!

உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ரஷ்யாவால் ஆபத்து நேருமெனவும், இந்நாடுகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், “நேட்டோ” வில் இணைய வேண்டுமெனவும் “நேட்டோ” இந்நாடுகளை தூண்டி விட்டதன் அடிப்படையில், இவ்விரு நாடுகளும் “நேட்டோ” இராணுவக்கூட்டமைப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை “நேட்டோ” விடம் சமர்ப்பித்திருந்தன.

எனினும், “நேட்டோ” கூட்டமைப்பின் விதிகளின்படி, அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஒத்துக்கொள்ளும் பட்சத்திலேயே புதிய நாடுகளை கூட்டமைப்பில் உள்வாங்க முடியும் என்ற விதி, இப்போது “நேட்டோ” விற்கே தலைவலியாக மாறியுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் பெரும்பாபாலான நாடுகளை தனது கூட்டமைப்பில் கவர்ந்திழுக்க முடிந்த “நேட்டோ” வால், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை இதுவரையில் வளைக்க முடிந்திருக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமானதன் பின், குறித்த இவ்விரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டிருந்த வேளை, சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்த நினைத்த “நேட்டோ”, இவ்விரு நாடுகளும் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகலாம் என்றும், “நேட்டோ” கூட்டமைப்பில் இணைந்துகொண்டால், “நேட்டோ” இவ்விரு நாடுகளுக்குமான பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குமெனவும் அறிவித்திருந்தது.

ரஷ்ய அதிகார மட்டங்களின் அறிக்கைகளும், சுவீடன் மற்றும் பின்லாந்தின் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்குறிகளை மேலும் கடினமானதாக ஆக்கியிருந்த சமகாலத்தில், இவ்விரு நாடுகளும் “நேட்டோ” கூட்டமைப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன. “நேட்டோ” வில் அங்கம் வகிக்கும் அத்தனை நாடுகளும் இந்த விண்ணப்பங்களை ஏக மனதாக ஏற்றுக்கொள்ளும் என்றும், அதன்மூலம் ரஷ்யாவுக்கு பலமான எதிர்வினைகளை இலகுவாக ஆற்ற முடியும் என்ற “நேட்டோ” தலைமையகத்தின் நம்பிக்கையில் மண்ணை வாரி இறைத்தது துருக்கி.

துருக்கியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக துருக்கி சொல்லிக்கொள்ளும், “அப்துல்லா ஒச்சலான்” தலைமையிலான “PKK” உள்ளிட்ட குர்திய விடுதலை அமைப்புக்களுக்கு ஆதரவான நிலையிலே சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இருப்பதாக பல்லாண்டுகளாக குற்றம் சாட்டிவரும் துருக்கி, தற்போதைய நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சுவீடனையும், பின்லாந்தையும் தட்டி வைக்க முயல்கிறது. அதாவது, துருக்கியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய “PKK” உள்ளிட்ட குர்திய விடுதலைக்காக போராடும் அமைப்புக்களுக்கு ஆதரவாகவும், அவ்வமைப்புக்களுக்கு தத்தமது நாடுகளில் அடைக்கலமும் கொடுத்திருக்கக்கூடிய சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள், குர்திய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நிலையிலிருந்து விலகிக்கொள்வதோடு, இந்நாடுகள் தமது ஆயுத ஏற்றுமதி தொடர்பிலும் மாற்றங்களை கொண்டுவந்தால் மாத்திரமே “நேட்டோ” கூட்டமைப்பில் இவ்விரு நாடுகளும் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு துருக்கி ஒத்துக்கொள்ளும் என்று, துருக்கிய அதிபர் “Edrogan” மிகத்தெளிவாக சொல்லியிருந்தார்.

துருக்கிய அதிபர் விளையாடுகிறார் என ஆரம்பத்தில் நினைத்த “நேட்டோ”, பின்னர் துருக்கி தனது நிலையில் உறுதியாக இருப்பதை காலப்போக்கில் அறிந்து கொண்டது. இதை புரிந்து கொள்வதற்கு துருக்கியுடனான பல சந்திப்புக்கள் “நேட்டோ” வுக்கு தேவைப்பட்டிருந்தது. துருக்கியை சமாதானப்படுத்தி, எப்பிடியாவது சுவீடனையும், பின்லாந்தையும் “நேட்டோ” வில் இணைத்துவிட வேண்டும் என்ற கனவு, நாளாக நாளாக சிதைந்து கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் “நேட்டோ” வின் நடவடிக்கைகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், இப்போதுள்ள நிலையில், துருக்கியை கழற்றி விட முடியாத நிலையில் “நேட்டோ” இருக்கிறது. அதேவேளை, ரஷ்யாவை ஐரோப்பாவிலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டுமாயின் சுவீடன், பின்லாந்து “நேட்டோ” வில் இணைவதும் அவசியம். ஆக, இப்போது “நேட்டோ” வின் நிலையோ திரிசங்கு நிலைதான்.

துருக்கியின் எதிர்ப்பில் நியாயமேதுமில்லை என மாதக்கணக்காக சொல்லிவந்த “நேட்டோ”, இப்போது, துருக்கியின் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என சொல்கிறது. அதாவது, துருக்கியின் நிபந்தனைகளை சுவீடனும், பின்லாந்து ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிறது “நேட்டோ”. ஆனால், மறுபக்கத்தில் தமது நிலைப்பாட்டில் சுவீடனும், பின்லாந்தும் உறுதியாகவே இருப்பதாக சொல்கின்றன. அதாவது, துருக்கி சொல்வதைப்போல, குர்திய விடுதலை இயக்கங்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை எனவும், துருக்கிக்கு ஆயுத விற்பனை என்கிற விடயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் பேணப்படும் என்ற நிலையிலிருந்து இரு நாடுகளும் விலகப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளன.

இப்போது, ரஷ்யாவை தனிமைப்படுத்துவதற்காக துருக்கியை கழற்றிவிட்டு சுவீடனையும், பின்லாந்தையும் சேர்த்துக்கொள்வதா அல்லது மத்திய கிழக்கில் அமைதியின்மையை பேணுவதற்கு துருக்கியை தக்க வைத்துக்கொள்வதா என்ற பிரச்சனையில் இருதலை கொள்ளியாக “நேட்டோ”….

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments