இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி!

  • Post author:
You are currently viewing இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி!

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 191 ரன்களும், இலங்கை 271 ரன்களும் எடுத்தன.

80 பின்தங்கிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் மலைக்க வைக்கும் வகையில் விளையாடியது. டாப்-4 வீரர்களான ஷான் மசூத், அபித் அலி, கேப்டன் அசார் அலி, பாபர் அசாம் ஆகியோரது சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 212 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வெறும் 16 பந்துகளில் பறிகொடுத்தது. எம்புல்டெனியா (0), ஒஷாடா பெர்னாண்டோ (102 ரன்), விஷ்வா பெர்னாண்டோ (0) வரிசையாக வீழ்ந்தனர்.

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 62.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 12.5 ஓவர்களில் 4 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். நசீம் ஷாவின் வயது 16 ஆண்டு 307 நாட்கள். டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்த 2-வது இளம் பவுலர் என்ற பெருமையை பெற்றார். பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நசிம் உல்-கானி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் (1958-ம் ஆண்டு) தனது 16 வயது 303 நாட்களில் 5 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக தொடருகிறது. இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் அபித் அலி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும். வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு 60 புள்ளிகள் கிடைத்தது. புள்ளி பட்டியலில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 216 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான், இலங்கை தலா 80 புள்ளிகளுடன் அடுத்த இடங்களிலும் உள்ளன.
பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறுகையில், ‘இங்கு வந்து விளையாடிய இலங்கைக்கு எங்களது இதயபூர்வமான நன்றிகள். அவர்கள் தான் எங்களுக்கு சொந்த மண்ணில் மீண்டும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் விளையாடும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். இந்த தொடர் எங்களுக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. நசீம் ஷாவிடம் தனித்துவமான திறமை இருக்கிறது. வரும் ஆண்டுகளில் எங்களது பந்து வீச்சை மேலும் வலுப்படுத்துவோம்’ என்றார்.

பகிர்ந்துகொள்ள