இலங்கை அரசின் மீதான அழுத்தத்தை இரு மடங்காக்க வேண்டும்!

You are currently viewing இலங்கை அரசின் மீதான அழுத்தத்தை இரு மடங்காக்க வேண்டும்!

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் கரிசனைக்குரிய மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்திற்கு முரணானதாகவும் அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்தகால மீறல்கள் குறித்து இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாத நிலையில், இன, மத சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள், சிவில் சமூகப்பிரதிநிதிகளை இலக்குவைத்து பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நீதியை நிலைநாட்டுதல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையர்களுக்குப் புகலிடம் வழங்கல் மற்றும் கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் உள்ளடங்கலாக உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் பாதுகாப்புப்படையினருடன் தொடர்புகளைப் பேணும்போதும் ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும்போதும் மனித உரிமைகள் தொடர்பான அதன் (ஐ.நாவின்) தரநியமங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தவேண்டும். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு, அரசாங்கம் பொய்யானதும் தவறாக வழிநடத்தக்கூடியவாறானதுமான பொதுத்தொடர்புகளின் மூலம் பதிலளிக்கின்றது.

ஆகவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும்.

கடந்த 1983 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தம் இருதரப்பிலும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்தது.

இறுதிக்கட்டப்போரின் போது அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினாலும் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தியிருந்தது.

அந்த மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்களையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாரில்லை என்பதைத் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிக்காட்டிவரும் அதேவேளை, போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பை வகித்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸட் மாதம் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டமை குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜனாதிபதியினால் வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் சிவில் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பிலும் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதியுமான வடமாகாணத்தில் குறித்த எண்ணிக்கையிலான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரச அதிகாரிகளுக்கும் சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த நபர்களுக்கும் இடையிலான 45 கருத்து முரண்பாட்டுச் சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை பதிவுசெய்துள்ளது.

பௌத்த அடையாங்களைக் கண்டறிவதற்கும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய, பூகோள அடையாளம் மாற்றியமைக்கப்படக்கூடும் என்ற அச்சம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படுவதாக மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுக்கு முன்னர் இராணுவப்புலனாய்வு அதிகாரிகள் குண்டுதாரிகளைப் பாதுகாப்பதற்கு முயன்றதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகள்மீதே தங்கியிருக்கின்றார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments