இலங்கை நிலைமைகள் தொடர்பில் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்பு!

You are currently viewing இலங்கை நிலைமைகள் தொடர்பில் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்பு!

இலங்கை நிலைமைகள் தொடர்பில் நோர்வேயின் நிலைப்பாடு என்னவென, நோர்வேயின் சோஷலிச இடதுசாரிக்கட்சி தொடுத்திருந்த கேள்விகளுக்கு, நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சரான “Ine Marie Eriksen Søreide” அம்மையார் தெரிவித்திருந்த கருத்துக்களை நோர்வே இளையோர் அமைப்பு வரவேற்றிருக்கிறது.

எனினும், இடித்தழிக்கப்பட்ட, யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள அமைக்கப்படுமென தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள இளையோர் அமைப்பு, புதிதாக அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்படும் நினைவுத்தூபி, தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் விதத்தில் அமைவதற்கான உத்தரவாதமேதும் தற்போதைய சூழ்நிலையில் காணப்படவில்லையெனவும், இலங்கையில் மனிதவுரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதாகவும், அதேவேளை, இலங்கையில் வாழும் ஏனைய தேசிய இனங்கள், பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திட்டமிட்ட முறையிலான நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார, மொழி, வரலாறு அழிப்பு போன்றவற்றை படிப்படியாக நிகழ்த்தி வருவதன் மூலம், இலங்கையின் பூர்வீககுடிகளான தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருவதோடு, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்மக்களின் வழிபட்டு தலங்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கருகில் புத்த சின்னங்களையும், புத்த வழிபாட்டு தலங்களையும் ஆளும் இனவாத அரசுகள் தொடர்ந்தும் அமைத்து வருவதையும் குறிப்பிட்டுள்ள இளையோர் அமைப்பு, அநேகமான சந்தர்ப்பங்களில் தமிழர்களுடைய வழிபாட்டிடங்களும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், புத்த சின்னங்களை நிறுவுவதற்காக அரசுகளால் இடித்தழிக்கப்பட்டு வருவதையும் இடித்துரைத்துள்ளதோடு, புத்த மதத்தை பின்பற்றாத தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களில் புத்த வழிபாட்டு தலங்களை அமைத்துவரும் இலங்கை அரசுகளின் நோக்கம் என்னவாக இருக்குமெனவும் சிந்திக்கப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் பெப்ரவரி 04 ஆம் திகதியை, தமிழ்மக்கள் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாளாக அடையாளப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள இளையோர் அமைப்பு, இலங்கையானது ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக 3 அரச இராச்சியங்களை கொண்டதாக அமைந்திருந்தாலும், பிரித்தானியரின் ஆளுமையின்கீழ் இலங்கை கொண்டுவரப்பட்டபோது நிர்வாக இலகுவாக்கத்திற்காக குறித்த 3 அரச இராச்சியங்களையும் 1833 இல் பிரித்தானியர்கள் ஒன்றாக்கி ஒரே நாடாக்கிய வரலாறையும் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய காலத்தில் நிர்வாக முறைமைகளில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கிய பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும், கட்சிகளும் படிப்படியாக நிர்வாக இயந்திரத்தை கையிலெடுக்க ஆரம்பித்ததோடு சிறுபான்மையினரான தமிழ்த்தேசிய இனம் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, தனது உரிமைகளை இழந்து வந்த வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்துள்ள இளையோர் அமைப்பு, இதனாலேயே சிங்கள இனத்துக்கும், தமிழினத்துக்கு இடையிலான விரிசல் படிப்படியாக அதிகமாகி வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் தமிழ்மொழிக்கான உரிய இடம் மறுக்கப்பட்டதும், அதை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட கல்வித்தரப்படுத்தல் மூலம், பெரும்பான்மை சிங்கள சமுக மாணவர்கள் இலகுவில் பல்கலைக்கழக இடங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், தமிழ்மொழி பேசும் மாணவர்களின் கல்வியுரிமை மறுக்கப்பட்டதும் வரலாற்று பதிவுகளாக இருப்பதையும் இளையோர் அமைப்பு நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

1981 ஆம் ஆண்டில், தென்னாசியாவின் மிகப்பெரியதும், மிகப்பழமை வாய்ந்ததுமான யாழ்ப்பாண பொதுநூலகம் அன்றைய இலங்கை அரசினால் திட்டமிட்டு எரித்து அழிக்கப்பட்டதால், அந்நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, தமிழ்மக்களின் வரலாற்றுக்களை எடுத்தியம்பும், ஈடு செய்யமுடியாத பழமையான வரலாற்று பதிவுகள் உள்ளடங்கலாக, சுமார் 97.000 அரிய நூல்கள் அழிந்துபோனதை குறிப்பிட்டுள்ள இளையோர் அமைப்பினர், 2009 இல் நடத்தி முடிக்கப்பட்ட பாரிய தமிழின அழிப்பில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுச்சின்னமும் அழிக்கப்படுவதானது கவலைக்குரியதெனவும், எனினும், நினைவுச்சின்னங்களை அழித்து விடுவதன் மூலம் தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாதெனவும், அதேவேளை 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தமிழினம் ஒருபோதும் மறந்து விடாதெனவும் தெரிவித்துள்ளனர்.

பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்த சமாதான பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தங்கள், இரத்தக்களரிகள் போன்றவை, பலனெதையும் தருவதற்கு மாறாக, தமிழர்கள் ஏதிலிகளாக ஆக்கப்படுவதும், தமிழர்கள் இடம்பெயர்ந்து செல்வதும், தமிழர்கள் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்படுவதும் அதேவேளையில், தமிழர்கள் மென்மேலும் ஒடுக்கப்படுவதுமே தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதையும் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இனவாதத்தால் உயிரிழந்த தமிழர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைக்கூட அனுமதிக்காத இனவாத அரசுகள் கல்லறைகளை இடித்தழித்து தரைமட்டமாக்குவதும், கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்காக தமிழ்மக்கள் ஒன்றுகூடும்போது, காவல்துறை மற்றும் இராணுவத்தை கொண்டு அவர்களை அடக்குவதும் போன்ற செயற்படுகளை மேற்கொள்வதன்மூலம் குறைந்தபட்ச சனநாயக உரிமைகள்கூட தமிழ்மக்களுக்கு மறுக்கப்படுகிறது எனவும் இளையோரால் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2009 இனவழிப்பின் பின்னரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்துவரும் நிலையில், அதிகமான தமிழ்மக்கள் காணாமல் ஆக்கப்படக்கூடிய அபாயகரமான நிலைமை இலங்கையில் ஏற்பட்டுள்ளது எனவும், 2012 நவம்பர் மாதம் ஐ.நா.சபையின் மனிதவுரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2009 இறுதிப்போரின்போது 70.000 மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் இத்தொகை மிகமிக அதிகமெனவும் குறிப்பிட்டுள்ள இளையோர் அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்னவானது என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை காணப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்மக்கள்மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இனவாத செயற்படுகளுக்காக கடந்த 12 வருடங்களாக, ஐ.நா. மனிதவுரிமை சபையில் பேசுபொருளாகவிருந்துவரும் இலங்கை, தனது அதிகாரத்தாலும், தனது ஆதரவு நாடுகளின் உதவியோடும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து நழுவிச்செல்வதோடு, தமிழ்மக்கள்மீதான அடக்குமுறைகளை சகல வழிகளிலுமிருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், எனினும், 2009 இல் நடைபெற்ற திட்டமிட்ட இனவழிப்புக்காகவும், ஏராளமான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதற்காகவும்,தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதற்காகவும் இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லையென்றும் எடுத்துக்கூறியுள்ள இளையோர்கள், இலங்கையில் நடைபெற்ற தமிழர்கள் மீதான இனவழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட ஏனைய மனிதவுரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில், ஐ.நா. சபைக்கும், சர்வதேசசமூகத்துக்கும் தான் அளித்திருந்த உறுதிமொழிகளிலிருந்தும் இலங்கை விலகிக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

2021 பெப்ரவரி நடைபெறவிருக்கும் ஐ.நா. மனிதவுரிமை சபையின் 46 ஆவது கூட்டத்தொடரையொட்டி, இலங்கையின் அனைத்து தமிழ்க்கட்சிகளும் இணைந்து முக்கியமான கடிதமொன்றை மனிதவுரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள இளையோர், இலங்கையில் நடாத்தி முடிக்கப்பட்ட படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையை கண்காணிப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் இலங்கையை நிறுத்த வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இது விடயத்தில் காத்திரமான, நியாயமான நடவடிக்கையொன்றுக்காக அனைத்து தமிழ்த்தரப்புக்களும் ஒன்றுபட்டு நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தில் நோர்வேக்கு இருக்கக்கூடிய செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் காத்திரமான பங்கை வழங்க நோர்வே முன்வர வேண்டும் எனவும், நடைபெறவிருக்கும் ஐ.நா. மனிதவுரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் மேற்படி விடயங்களை நோர்வே முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும், நோர்வே ஆற்றக்கூடிய காத்திரமான பங்கானது, சர்வதேச பொது வாக்கெடுப்பொன்றுக்கான வழிவகைகள் ஏற்படுவதோடு, இலங்கையில் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியுமென நம்புவதாகவும், சர்வதேச பொதுவாக்கெடுப்பானது தமிழ்மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை கொண்டுவருமெனவும் மேலும்குறிப்பிட்டுள்ள நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினர், மேற்படி விடயங்கள் தொடர்பில் நோர்வேயின் உயர்மட்ட சக்திகளோடு விவாதித்து ஆலோசிப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும், இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் நோர்வே தமிழ் இளையோர்கள் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும், இளையோர்களை பொறுத்தவரை மேற்படி விடயங்கள் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றவையாக இருப்பதாகவும் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள