ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் உரைத்த கடைசி வார்த்தை “இன்று நான் நாளை தமிழகம்”

You are currently viewing ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் உரைத்த கடைசி வார்த்தை “இன்று நான் நாளை தமிழகம்”

யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் அவர்களின் விடியலுக்காக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட “ஈகைத்தமிழன்” அப்துல் ரவூப் அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்.


நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தின் எல்லையைத் தொட்டு உலுப்பும் கரும்புலிகளை ஒத்த தற்கொடை. தான், தன்வீடு, தன்தேசம் என்ற எல்லை கடந்து அயலில் அழுது துடிக்கும் தன் இனத்துக்காக நெஞ்சு துடித்தவர். ஈழத்தமிழருக்காய் உயிர் கொடுத்த மானத்தமிழன் அப்துல் ரவுஃப். இன்று அவரது பெயர் ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் உச்சரிக்கப்படுகின்றது. தமிழீழமே திரண்டு அவர் தியகத்திற்காய் கண்ணீர் வடித்ததே. 

போராளிகளை அஞ்சலிக்கும் எம் மண்ணில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் தியாகி அப்துல் ரவுஃப்புக்கு அஞ்சலி செலுத்த எம் தேசம் திரண்டதே. ஒரு போராளியாய் அந்தத் தூய தமிழ்த்தியாகி எம்முடன் வாழ்வார். அவரது இந்த உறுதியான தடம், உணர்வுள்ள தமிழர்களுக்கு பாதையாய் அமையட்டும். மருப்பில் வெந்து துடிக்கும் உதட்டுக்குள்ளால் “ஈழத்தமிழரைக் காப்பாற்றுங்கள்” என்ற வார்த்தை மட்டுமே வந்ததாம். கேட்டதில் நெஞ்சம் கனதியானோம். மலர்வளையம் வைத்து அஞ்சலிப்பதிலும் பார்க்க உள்ளக் கமலத்தில் உட்கார வைத்துள்ளோம். தமிழகத் தமிழரையும், ஈழத்தமிழரையும் பிரித்து வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அக்கிரமக்காரர்களின் தலைகளில் ஆயிரம் அப்துல் ரவுஃப்கள் இடியாய் விழுவார்கள். வரலாற்றைப் பிரித்துப் போடப் பார்க்கிறார்கள். தொப்பிள்கொடி உறவை துண்டாடிவிடப் பார்க்கிறார்கள். தாயிருக்க சேயின் உயிர் பறிக்கத் துடிக்கிறார்கள். கலந்திருக்கும் எங்கள் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருக்கிறார்கள். ஆனால் யாவும் சத்தின்றி சருகாகிப் போகும் என்பதைத்தான் அப்துல் ரவுஃப்பின் தியாகம் எடுத்துரைக்கின்றது. தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாய், எழுச்சியின் குறியீடாய்த்தான் அவரது தியாக மரணத்தைக் கருதமுடிகிறது. தாய் சேய் உறவைப் பிரித்துப் போடத் துடிக்கும் நாச சக்திகளுக்கு தன்னைக் கொடுத்து ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கிறார் அப்துல் ரவுஃப். இந்த உலகத்தை விட்டுப்போகும் இறுதித் தருவாயில் அவர் உரைத்த கடைசி வார்த்தை “இன்று நான் நாளை தமிழகம்” 

 – எரிமலை இதழ் 

“புலிகளின் தாகம்  தமிழீழத் தாயகம்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments