உச்சம் தொட்ட குருதிப் பெருக்கு முள்ளி வாய்க்கால்!

You are currently viewing உச்சம் தொட்ட குருதிப் பெருக்கு முள்ளி வாய்க்கால்!

மே 18ஐ நாம் மறக்க முடியுமா?
சிங்கள தேசத்தின் இனவெறி அரசின்
சினம் கொண்ட கொடூரச் செயல்களை நினைவில் நிறுத்தும் நாளிது மே 18

சிங்களத்தின் எறிகணைகள்
சீறி வந்து வெடிக்கையிலே
எங்கும் புகை மண்டலமானது வன்னி நிலம்
எங்கேதான் செல்வது? எங்கேதான் செல்வது?

பாதுகாப்புத் தேடி ஓடினர் ஓடினர் எம் உறவுகள்
புது மாத்தளன் வரை ஓடினர்
ஓட ஓட எறிகணைகள் தாக்கின
செல்வீச்சுக்களும் கோரத் தாண்டவம் ஆடின

வழியெங்கும் மக்களின் உயிரற்ற உடல்கள்
விழிகள் பிதுங்க மீண்டும் ஓடினர் முள்ளிவாய்க்கால் வரை ஓடினர் ஓடினர் எம் உறவுகள் ஓடினர் அன்று மே 18 இல்

ஓடிய மக்களைக் காப்பதற்காய்
கடும் சமர் புரிந்தார்கள் கரிகாலன் மைந்தர்கள்
தோல்வி கண்ட இன வெறியர்களோடு
கைகோர்த்து இணைந்தது சர்வதேசம்

சர்வதேசத்தின் நவீன இரக விமானங்களும்
முள்ளி வாய்க்காலில் வட்டமிட்டு
அகோர குண்டு மழை பொழிந்தன
உடல்கள் சிதறின சதைகள் எரிந்தன

கொத்து கொத்தாக உறவுகள் மடிந்தார்கள்
உணவும் இனறித் துடித்தார்கள்
மருந்தகம் அற்று மடிந்தார்கள்
இரசாயனக் குண்டில் எரிந்தார்கள்

உச்சம் தொட்ட குருதிப் பெருக்கால்
முள்ளிவாய்கால் குருதி ஆறாய் ஓடியது
இனவெறித் தாண்டவம் அகோரமானது
எஞ்சிய மக்கள் கூட்டமும் ஓடினர் ஒடினர்
நந்திக் கடலோரம் ஒடினர்

நந்திக் கடல் வெளியிலும் காத்திருந்தனர்
இனவெறியர்கள் காமக் கொடூரர்கள்
அகப்பட்டனர் எம் இளைஞர்களும் யுவதிகளும்
ஆடைகள் களையப்பட்டனர் கண்களும் கட்டப்பட்டது கைகள் பிணைக்கப்பட்டு இழுததுச் செல்லப் பட்டார்கள்

இளைஞர்கள் சுடப்பட்டார்கள்
யுவதிகள் கற்பழிக்கப் பட்டார்கள்
வயோதிபர்கள் குழந்தைகள்
முற்கம்பிச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள்
இன்னும் இன்னும் எத்தனை துன்பங்கள்
மறப்போமா மே18 ஐ மறப்போமா நாம் தமிழர்கள்

-தேவகி-

பகிர்ந்துகொள்ள