உயிரீகத்தின் உச்சம் அன்னை பூபதியம்மா!

You are currently viewing உயிரீகத்தின் உச்சம் அன்னை பூபதியம்மா!

தமிழீழத்தில் இந்தியப்படைகள் இருந்த காலத்தில் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவ்ற்றில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை, அகிம்சையை உலகத்துக்கே போதித்ததாகச் சொல்லும் இந்தியாவிடம் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த இரண்டு போராட்டங்கள். திலீபன் மற்றும் அன்னை பூபதி. இருவருமே இந்தியாவிடம் கோரிக்கை வைத்து உண்ணாநோன்பிருந்தனர். இந்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளாத்தால் உயிர்துறந்தனர்.

நவம்பர் 3 அன்னை பூபதி அம்மாவின் பிறந்த நாள். அதையொட்டி எழுதப்பட்ட கட்டுரை….

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்னை பூபதி நிலையான இடத்தினை வகிக்கின்றார்.
நவம்பர் 3, 1932 பிறந்த அம்மையார் ஏப்ரல் 19, 1988 அன்று மட்டக்களப்பில் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து போராடி உயிர் நீத்தவர்.

பூபதியம்மாவின் கணவர் கணபதிப்பிள்ளை. இவ்விணையர்களுக்கு பத்துப் பிள்ளைகள்.
பெற்ற பிள்ளைகள் இருக்க தமிழீழ மக்களைத் தன் பிள்ளைகளாக மதித்து அவர்களை இந்திய ஆக்கிரமிப்புப் படையிடம் இருந்து விடுவிக்க தன் இனிய உயிரை தாய்மையோடு துறந்தவர் பூபதியம்மா.

மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தவர் பூபதி அம்மா. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்புப்படைக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கிய பொழுது இந்தியப் படை புறக்கணித்ததால் அதி தீவிர உயிர் விதைப்புப் போராட்டம் மூலம் அன்னை பூபதியின் தியாகம் இந்தியப் படையை விரட்ட கருவியானது.

அன்னையர் முன்னணி முன் வைத்த கோரிக்கைகள்:
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை.

ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் அப்பொழுதும் நிறைவேற்றப்படவில்லை.

போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்பொழுதும் பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

மக்களைக் கொன்று, தமிழீழ மக்களின் போராட்டத்தைச் சிதைத்து பெண்களைச் சீரழித்து தமிழ் இளைஞர்களைக் கொன்று குவித்துக் கொண்டு இருந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையை மண்ணை விட்டு விரட்ட வேறு வழி தெரியாமல் அன்னையர்கள் தாய்மை உணர்வு கசிந்தவர்களாக சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர்.

இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார்.

முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன். நான் சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.

பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் பிள்ளைகள் பரிதவித்து பார்த்திருக்க அம்மா நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.

இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது.

ஆயினும் அம்மா போராட்டத்தை நிறுத்தவில்லை. தளராத துணிவோடு அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
வெறும் மிரட்டல் என நினைத்த இந்தியா உண்மையான உயிரீகம் செய்த பூபதி அம்மாவின் உயிர் விதைப்பைக் கண்டு அதிர்ந்தது. மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள்.

கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
ஒரு மாதமாக அம்மா அணு அணுவாகச் சாவதை சத்தமின்றி சதிகார இந்திய அரசு பார்த்து மகிழ்ந்தது. சூழ்ச்சியோடு இருந்து சாக விட்டது.

இந்தியத்தின் துரோக வரலாற்றை அன்னை பூபதி மீண்டும் ஒரு முறை தனது உயிர் தூரிகையால் வரலாற்றில் நிலையாக எழுதி சென்றார்.

மக்கள் புரட்சியால் இந்தியா இலங்கையில் இருந்து அன்று விரட்டப்பட்டது.
அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.

நெஞ்சகலா நினைவுகளில் பூபதி அம்மாவின் தியாக நினைவுகளும் நிறைந்திருக்கும்.
மண்ணில் இப்படி ஒரு விடுதலை தேவதை பிறந்த நாள் இன்று! தழல் வீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றும் பேதம் இல்லை என்பதை நிரூபித்த அன்னை பூபதி புகழ் வாழ்க!

– செந்தமிழினி பிரபாகரன்

பகிர்ந்துகொள்ள