உலகின் பாதுகாப்புக்கு சீனா சவாலாக உள்ளதாக நேட்டோ உச்சிமாநாட்டில் தலைவர்கள் அறிவிப்பு!

You are currently viewing உலகின் பாதுகாப்புக்கு சீனா சவாலாக உள்ளதாக நேட்டோ உச்சிமாநாட்டில் தலைவர்கள் அறிவிப்பு!

பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று இடம்பெற்ற நேட்டோ கூட்டணி அமைப்பின் உச்சிமாநாட்டில் சீனா உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜி-07 நாடுகளின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் ஒன்றுகூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்கள் சீனாவின் சவால்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.

சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருவதாகவும், அதன் இராணுவ நவீனமயமாக்கல் இரகசியமானது எனவும் நேட்டோ கூட்டணி தலைவா்கள் தெரிவித்தனா். அத்துடன், ரஷ்யாவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை சீனா வலுப்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் சம வலுவை நோக்கி நகர்ந்து வருகிறது என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கை எச்சரித்தார்.

ஆனால் நேட்டோ கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி அமைப்பாகும்.

கம்யூனிச விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற நேட்டோ கூட்டணி அமைப்பின் உச்சிமாநாட்டில் கூடிய தலைவா்கள் உலகின் பாதுகாப்புக்கு சீனா சவாலாக மாறி வருவதாக எச்சரித்தனர்.

சா்வதேச ஒழுங்குவிதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சீனா செயற்படுகிறது. மேலும் சீனர்கள் அணு ஏவுகணைகளை மிக விரைவாக உருவாக்கி வருவதாகவும் நேட்டோ நாடுகளில் தலைவர்கள் வெளியிட்ட உச்சிமாநாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாடுகளின் அரச தலைவர்கள் சீனாவை ஒரு போட்டியாளர் என்று அழைப்பதைத் தவிர்த்து, அதன் கட்டாயக் கொள்கைகள், அணு ஆயுத மேம்படுத்தல் உள்ளிட்ட இரகசிய நடவடிக்கைகள் குறித்துக் கவலை தெரிவித்தனர்.

சா்வதேச ஒழுங்கு விதிகளுக்கும் கடமைகளுக்கும் அமைய பொறுப்புடன் செயற்படுமாறும் நேட்டோ கூட்டணி தலைவர்கள் பீஜிங்குக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனிடையே டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் நேட்டோ அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் கேள்விக்குள்ளாகிய நிலையில் நேட்டோ மீதான அமெரிக்க உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நேட்டோ உச்சிமாநாட்டிற்காக கூட்டணியின் தலைமையகத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கைச் சந்தித்து பைடன் பேசினார்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நேட்டோ நட்பு நாடுகள் நான்கு ஆண்டுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. உறுப்பு நாடுகளிடையே மோதல் போக்கு உருவானது. எனினும் நாங்கள் மீண்டும் உறுதியான நிலைப்பாட்டுக்கு வர முடியும் என எதிர்பார்க்கிறேன் என இச்சந்திப்பில் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நேட்டோவுக்கான நிதிப் பங்களிப்பை குறைக்கப்போவதாகவும் நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றப்போவதாகவும் எச்சரித்தார்.

நேட்டோ கூட்டணி அமைப்புக்களின் உச்சிமாநாடு கடந்த 2019 டிசம்பரில் இங்கிலாந்தில் இடம்பெற்றபோது ட்ரம்ப் பல்வேறு சா்ச்சைகளை உருவாக்கினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இரண்டு முகம் கொண்டவர் என அவா் விமர்சித்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மோசமானவர் என்றும் அவா் கருத்து வெளியிட்டார்.

புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்கைளைக் கூட நீண்ட செய்தியாளர் மாநாடு போன்று ட்ரம்ப் மாற்றுவதாக ஏனைய தலைவர்களுடன் கனேடிய பிரதமர் ட்ரூடோ கிசுகிசுத்ததை அடுத்து அவரை ட்ரம்ப் கடுமையாகச் சாடினார்.

இவ்வாறான மோதல்களின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகளைால் நேட்டோ அமைப்பு மூளைச்சாவடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் விமர்சித்தார் என்ற விடயங்களையும் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் பைடனுடனான சந்திப்பில் நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, நேற்றைய நேட்டோ உச்சி மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யாவால் உலகம் எதிர்கொண்டுவரும் இணைய வழித் தாக்குதல்கள் குறித்தும் தலைவா்கள் கவலை வெளியிட்டனர்.

இணைய வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை ஆதரவைப் பகிந்துகொள்வது குறித்தும் தலைவா்கள் விவாதித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments